பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவால் டுபாயில் காலமானார். அவருக்கு வயது 79 ஆகும்.
நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பர்வேஸ் முஷாரஃப் ஆகஸ்ட் 11, 1943ஆம் தேதியன்று டெல்லியில் உருது பேசும் குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் 1947இல் இந்திய பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தனர்.
ராணுவத்தில் நீண்ட காலம் பணியாற்றிய பிறகு, 1998இல் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீஃப், முஷாரஃபை ராணுவ தலைமை அதிகாரியாக நியமித்தார். அடுத்த ஆண்டே முஷாரஃப் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்தார்.
1999இல் நாட்டில் ஆட்சியைப் பிடித்த பிறகு, அவர் பல கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்து, மேற்கத்திய உலகுக்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையிலான சண்டையில் முன்னணியில் இருந்தார்.
இராணுவ ஆட்சியை பிரகடன் செய்த முஷாரப், பாகிஸ்தான் பாராளுமன்றதை கலைத்து அரசியல் சட்டத்தையும் முடக்கினார். 2001-ல் பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவியேற்ற முஷாரப், காஷ்மீர் பிரச்சனைக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அவரது அரசியல் கட்சி 2008 தேர்தலில் தோல்வியடைந்தது. நாட்டின் அரசமைப்பை சட்டவிரோதமாக இடைநீக்கம் செய்ததாகவும் அவசரகால நிலையை விதித்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
நீண்ட காலமாக ராணுவம் ஆட்சி செய்த நாட்டில், வழக்கு விசாரணை அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. எனவே, முன்னாள் ஆட்சியாளரின் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அரசு அமைத்தது.
இந்த வழக்கு ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்தது. இறுதியாக மூன்று நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், முஷாரஃப் தேசத்துரோக குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், இந்தத் தண்டனையை நிறைவேற்ற முடியாமல் போனது. பர்வேஸ் முஷாரஃப் உடல்நலக் குறைவால் தற்போது உயிரிழந்துள்ளார்.
2016ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பர்வேஸ் முஷாரஃப் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வந்தார்.