களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த அவரது 14 வயதுடைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (பெ்ப 07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
களுத்தறை தெற்கு, தேகாவத்தை பலதொட்ட பிரதேசத்தில் 26 வயதுடைய சகோதரனை கொலை செய்த 14 வயது சிறுவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இரு சகோதரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி 14 வயதுடைய சிறுவன் தனது மூத்த சகோதரனை கத்தியால் தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களது தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை பார்க்க தந்தை சென்றிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 26 வயதுடைய தேக்கவத்தை, பலதொட்ட பகுதியைச் சேர்ந்தவராவார்.இக்கொலை தொடர்பாக அவரது 14 வயது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.