கோவை: கோவையில் நீதிமன்றம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பது, கொலையின் பின்னணி என்ன என்பது குறித்தும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

இளைஞர் கோகுல் காதலர் தினமான இன்று காதல் திருமணம் செய்ய இருந்த நிலையில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (வயது 22). கோகுல் மீது கோவில்பாளையம், துடியலூர், சரவணம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கண்ணப்ப நகரை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் என்பவரது கொலையின் பின்னணியில் கோகுலும் அவருடைய நண்பர்கள் 5 பேரும் இருப்பதாக வந்த புகாரை அடுத்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்,

இந்த வழக்கில் கோகுல் உள்பட 5 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே கோகுல் ஜாமீனில் வெளியே வந்தார். குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கு விசாரணை கோவை 3-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடக்கிறது.

இந்த வழக்கில் ஆஜராக நேற்று கோகுல் தனது நண்பரான மனோஜ் என்பவருடன் கோர்ட்டுக்கு வந்தார்.

பின்னர் அவர் தனது வக்கீலுடன் உள்ளே சென்று கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்தனர்.

இருவரும் காலை 11 மணி அளவில் கோர்ட்டுக்கு பின்புறம் கோபாலபுரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடிக்க சென்றனர். அப்போது அவர்களை, 4 பேர் கும்பல் பின் தொடர்ந்து வந்தார்கள்.

டீக்கடையில் கொலை கோகுல் மனோஜை போல் அவர்களும் கடையின் அருகே பேசி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கோகுலின் அருகே வந்த நான்கு பேரும், கண்ணிமைக்கும் நேரத்தில் கோகுலை சுற்றிவளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர்,

கோகுலும், அவரது நண்பரும், அந்த கும்பலின் பிடியில் இருந்து தப்பி ஓட முயற்சித்தார்கள். இருப்பினும், அந்த கும்பல் நடுரோட்டில் ஓட, ஓட விரட்டி கோகுலை வெட்டி கொன்றது.

இதனிடையே கோகுலை காப்பாற்ற மனோஜையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். கொலை செய்துவிட்டு நிதானமாக கொலையாளிகள் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றனர். சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த படுகொலையால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் நடந்த இந்த காட்சியை சிலர், ஓரமாக ஒதுங்கி நின்றபடி தாங்கள் வைத்திருந்த செல்போனில் படம்பிடித்திருந்தனர்.

தகவல் அறிந்து வந்த கோவை ரேஸ்கோர்ஸ். போலீசார் உடனடியாக சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தினர்.

அச்சுறுத்தல்

விசாரணைக்கு பின்னர் கொலைக்கான காரணம் குறித்து சில தகவல்கள் போலீசுக்கு தெரியவந்துள்ளது.

போலீசார் இதுகுறித்து வெளியிட்ட தகவலின் படி: கொல்லப்பட்ட கோகுலும், படுகாயமடைந்த மனோஜும் ஒரே பள்ளியில் படித்தவர்கள்.

கீரணத்தத்தில் உள்ள பிரைவேட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் மனோஜ். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் கோர்ட்டிற்கு தனியாக செல்ல விரும்பாத கோகுல், துணைக்கு தனது நண்பர் மனோஜை அழைத்து வந்துள்ளார்.

தனிப்படை

கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு வரும் போது 5 பேர் கும்பல் சுற்றி வளைத்து கோகுலை கொலை செய்து தப்பி இருக்கிறார்கள்.

கொலையில் ரத்தினபுரி பகுதியை சேர்ந்த சூர்யா (24), வெள்ளலூரை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் (26), சித்தாபுதூர் கவாஸ்கான் (27), ரத்தினபுரியை சேர்ந்த ஒன்றரை என அழைக்கப்படும் கவுதம் (27) உள்பட 5 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

காதலியை சந்திக்க திட்டம்
கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கொலை செய்யப்பட்ட கோகுல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.,

அந்த பெண்ணுக்கு தாய் இல்லை. அந்த பெண்ணை காதலர் தினமான இன்று திருமணம் செய்ய கோகுல் திட்டமிட்டிருந்தாராம்.

அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஜாமீன் கையெழுத்து போட்ட பின்னர், காதலியை சந்திக்க அவர் திட்டமிட்டிருந்தார்.

இந்த விவரம் தெரிந்த கும்பல், பின் தொடர்ந்து வந்து கொலை செய்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version