‘லிவ் – இன்’ உறவில் இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததாக, உணவக (தாபா) உரிமையாளர் ஒருவரை நேற்று, செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14, 2023) காவல்துறையினர் கைது செய்ததாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.

டெல்லி ஒட்டிய நஜஃப்கர், மித்ரோன் கிராமம் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கொலையை செய்துவிட்டு அன்றைய தினமே வேறொரு பெண்ணை அந்நபர் திருமணம் செய்துகொண்டதாகவும் போலீசாரை மேற்கோள் காட்டி அந்த செய்தி கூறுகிறது.

ஏ.என்.ஐ. செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கைது செய்யப்பட்ட 24 வயது இளைஞர் பெயர் சாஹில் கெலோட்; கொலை செய்யப்பட்ட பெண் நிக்கி யாதவ் என டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில ஆண்டுகளாகவே அவர்கள் இருவரும் இணைந்து வாழ்ந்துவந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நிக்கி வற்புறுத்தியதால் சாஹில் அவரை கொலை செய்ததாக, காவல்துறையினர் கூறுகின்றனர்.

இக்கொலைச் சம்பவம் பிப்ரவரி 09 – பிப். 10க்கு இடைப்பட்ட நள்ளிரவில் நடைபெற்றதாகவும் கொலை செய்த அன்றைய தினமே (பிப். 10) சாஹில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும், காவல்துறையினர் கூறுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக, டெல்லி சிறப்பு காவல் ஆணையர் ரவீந்திர சிங் யாதவ் கூறுகையில், “சாஹில் கெலோட் தன்னுடைய காரில் மொபைலின் டேட்டா கேபிளை வைத்து அப்பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர், பெண்ணின் உடலை டெல்லி மித்ரோன் பகுதியில் அமைந்துள்ள தன்னுடைய தாபாவில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்” என தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்திய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சாஹில் கெலோட் தலைமறைவானார். பின்னர், நேற்று, செவ்வாய்க்கிழமை கேர் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.

 

விசாரணையின் ஆரம்பத்தில் சாஹில் கெலோட் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை எனவும், பின்னரே நிக்கி யாதவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தால் மித்ரோன் கிராம பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அக்கிராமத்தைச் சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர், “சாஹிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.

இப்பகுதியைச் சேர்ந்த சிலரும் அத்திருமணத்தில் கலந்துகொண்டனர். காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை இங்கு வந்தபோதுதான் இச்சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது” என பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

வேறொரு பெண்ணுடன் தனக்கு திருமணமாக உள்ளதை சாஹில் நிக்கியிடம் இருந்து மறைத்ததாகவும், அது தெரியவந்தபோது நிக்கி எதிர்த்ததால் அவரை கொலை செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.

ஏற்கனவே, கடந்த நவம்பர் மாதம் டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் அஃப்தாப் பூனாவாலா என்பவர், தனது காதலி ஷ்ரத்தா வால்கரைக் கொன்று பல துண்டுகளாக வெட்டி, காட்டில் வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் தலைநகர் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.

சரியான நேரத்தில் உதவியை நாடுங்கள் – முக்கியமான உதவி எண்கள்

உங்களின் துணை துன்புறுத்தல் செய்கிறார் என்றால் உடனடியாக காவல் துறை அல்லது மகளிர் ஆணையத்தின் உதவியை நாட வேண்டும்.

ஒரு பெண் இத்தகைய பிரச்னையில் சிக்கியிருக்கிறார் என்றால், நாடு முழுவதும் செயல்படக்கூடிய 1091 என்கிற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

தங்கள் கணவரிடமிருந்தோ அல்லது லிவ் – இன் பார்ட்னரிடமிருந்தோ வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் 181 என்ற உதவி எண்ணை அழைக்கலாம்.

நாடு முழுவதும் செயல்படக்கூடிய 7827170170 என்ற எண்ணை தேசிய மகளிர் ஆணையம் வழங்கியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version