பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டதன் பின்னணி நடவடிக்கையை விவரிக்கிறது இந்த செய்தி.

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு, இது தொடர்பாக பிரபாகரன் மனைவி, மகளுடனான சந்திப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஆபரேஷன் துவாரகா என்ற பெயரில் நடவடிக்கையை புலனாய்வு அமைப்பினர் மேற்கொண்டிருக்கலாம் என்கின்றனர் பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பழ.நெடுமாறனின் அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பழ.நெடுமாறனின் அறிவிப்புக்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆளும் திமுகவும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

அதேநேரத்தில் இலங்கை அரசியலில் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற செய்தி தவிர்க்க முடியாத விவாதமாக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழருக்கு மிக மிக குறைந்த சொற்ப அதிகாரம் தரும் 13-வது அரசியல் சாசன திருத்தம் நடைமுறைப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த 13-வது திருத்தத்தை உருவாக்கியது இந்தியா. ஆனால் 13-வது திருத்தத்தை சிங்கள பவுத்த பிக்குகள் தீ வைத்து எரிக்கின்றனர்.

தமிழர் தரப்போ, 13-வது திருத்தத்தால் எந்த அதிகாரமும் இல்லை என எதிர்க்கின்றனர். இந்த நிலையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற அறிவிப்பு ஒட்டுமொத்த இலங்கை தேசத்தின் அரசியல் அடிநிலையையே தலைகீழாக மாற்றும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதன் பின்னணி தொடர்பாக ஊடகங்களின் வெளியான செய்திகள், பேட்டிகளைத் தொகுத்துப் பார்த்தால் இது சினிமாவை மிஞ்சுகிற மிக நீண்டகால ஆபரேஷனாகவே இருக்கலாம் என்கின்றனர் பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், பிரபகாரனின் தளபதியும் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவு தலைவருமான பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட போது பிரபாகரன் மரணம் என்ற அறிவிப்பு பொய் என்பது புலனாய்வு அமைப்புகளின் முடிவு.

பொட்டு அம்மானும் பிரபாகரனும்தான் வெளியேறி இருக்க முடியும்; முன்னதாகவே பிரபாகரன் மனைவி, மகள் வெளியேறி இருக்க முடியும்.

இப்படி குடும்பமாக வெளியேறிய நிலையில் பிரபாகரன் இளையமகன் மட்டும் இலங்கை ராணுவத்திடம் பிடிபட்டிருக்கலாம் என்கிற யூகமான முடிவுக்கு பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பினர் வந்திருக்கலாம்.

ஏற்கனவே பிரபாகரனின் சகோதரர் டென்மார்க்கிலும் சகோதரி கனடாவிலும் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அவர்களுடைய அத்தனை தொடர்புகளும் நடவடிக்கைகளும் முற்று முழுதாக கண்காணிக்கப்பட்டு பின்னர்தான் பிரபாகரனும் அவரது மனைவி மகளும் இந்த இடத்தில் இருக்கின்றனர் என்பதை புலனாய்வு அமை ப்புகள் உறுதி செய்திருக்க முடியும்.

பிரபாகரன் உயிருடன் இருந்தாலும் அவரது தலைமையிலான அரசியல் போராட்டங்களை சர்வதேசம் விரும்பாது; ஆகையால் பிரபாகரன் மகள் துவாரகாவை முன்வைத்து ஒரு அரசியல் இயக்கம் அல்லது தற்போதைய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவது என்கிற செயல் திட்டத்துடன் பேச்சுவார்த்தைகளை புலனாய்வு அமைப்பினர் நடத்தி இருக்கலாம்.

இத்தகைய புலனாய்வு நடவடிக்கைகளை மிகத் திறமையாக மேற்கொள்ளக் கூடியவர் தற்போதைய நிலையில் சுந்தரி என அறியப்பட்ட அந்த பேராசிரியர்தான்.

ஈழப் போரின் இறுதி காலத்தில் 2006 முதல் 2009 வரை இலங்கையில் முகாமிட்டு புலிகளின் ஒவ்வொரு அங்குலமான நகர்வுகளை பதுங்கு குழிகளை படம்பிடித்து தரவேண்டியவர்களுக்கு பகிர்ந்து கடமையாற்றியவர் சுந்தரி.

இவரது பங்களிப்பு தொடர்பாக சில புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மூர்க்கமான, அதேநேரத்தில் நடவடிக்கைகளில் முனைப்பான அதே சுந்தரி அம்மையார்தான் துவாரகாவை நெருங்குவதற்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் களமிறக்கப்பட்டிருக்கலாம்;

இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் துவாரகா என பெயர் வைத்திருந்தாலும் (பிரபாகரன் மகள் துவாரகா) ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version