முப்படைகள், இருபது கடத்தல் கப்பல்கள், சர்வதேச மாஃபியா ஆயுத வலைப்பின்னல், புலம்பெயர்ந்த மக்களின் கோடிக்கணக்கான டொலர்கள், ஆயிரக்கணக்கான போராளிகள் இத்தனையும் இருந்தும் ஐரோப்பாவுக்கு வருவதற்கு “அவருக்கு” 13 ஆண்டுகள் எடுத்திருக்கிறது.
சும்மா சொல்லக்கூடாது வாஸ்தவம்தான். “உயிருடனும், நலமுடனும்” இருக்கிறாராம். உயிரற்ற நிலையிலும் சிலர் நலமுடன் இருப்பார்களாக்கும்…..
கீழைத்தேயங்களின் காலனித்துவ வரலாற்றில் கிழக்கிந்திய வர்த்தக கம்பனி என்ற பெயர் வியாபாரத்தின் உச்சம்.
அது போன்று தமிழ்நாட்டு பழ.நெடுமாறன்- காசி.ஆனந்தன், டயஸ்போரா கிளை கம்பனிகளுக்கும் ஈழப்போராட்ட வியாபாரம் கைவந்த கலை. “பிரபாகரன்” உயிருடன் இருக்கிறார் என்பதும் ஒரு அரசியல் வியாபாரத்தின் மீள் வருகை.
இந்தக் கம்பனிக்கார்கள் ஒரு விடுதலைப் போராட்டத்தை சீர்குலைத்ததும் இல்லாமல், அதில் மரணித்த அத்தனை சீவன்களையும் கொச்சைப்படுத்துகிறார்கள்
தங்கள் தலைவர் இறந்துவிட்டார் என்பதை வெளிப்படையாக கடந்த 13 ஆண்டுகளாக புலிகளோ, புலி ஆதரவு டயஸ்போரா அமைப்புக்களோ இதுவரை பேசவில்லை.
ஒட்டுமொத்த மாவீரர் நாளில் அல்லது மே 18 இல் செலுத்தப்பட்ட பொது அஞ்சலியைத் தவிர பிரபாகரனுக்காக ஒரு விளக்கைக்ககூட இவர்கள் ஏற்றவில்லை.
ஒரு மெழுகுவர்த்தியை எரிக்கவில்லை. ஒரு கார்த்திகைப் பூவுக்குகூட வழியில்லாமல் போனதா? இவற்றைத் தவிர்த்து பிரபாகரனின் இறப்பை மூடுபனிக்குள் மறைத்துக் கொண்டவர்கள் புலிகள்.
பழ.நெடுமாறன் வாய்திறந்த பின்னரே புலிகளும் வாய் திறந்திருக்கிறார்கள். மௌனத்தை கலைத்திருக்கிறார்கள்.
இதுவரை ஆயுதங்கள் மௌனித்துவிட்டதை பேசியவர்கள், இப்போதுதான் வலுவாக பிரபாகரன் இறந்தேவிட்டார் என்று மரணச் சான்றுதல் வழங்குகிறார்கள்.
இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு வேலை முடிந்து விட்டது. நெடுமாறனின் பொய்யுரையை மறுக்கிறார்கள்.
இதை இவர்கள் 13 ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருந்தால் பழ.நெடுமாறன் இன்று வலிந்து பொய்யராகி இருக்கவும் முடியாது, யாரும் அவரை இந்த வழியில் பயன்படுத்திஇருக்கவும் முடியாது.
இருக்கும் வரையும் இருந்து விட்டு இப்போது இந்த கட்டுக்கதையை விற்பனைக்கு விட வேண்டிய தேவை பழ.கம்பனிக்கு ஏன் ஏற்பட்டது.?
சமகால இலங்கை -இந்திய உள்ளக அரசியலும், வெளியக பூகோள அரசிலுமே இதற்கு காரணம். இது காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல.
நன்கு திட்டமிட்டு, காலம் கனியும் வரைகாத்திருந்து, எதிரியின் பலம் -பலவீனத்தை கவனத்தில் எடுத்து செய்யப்பட்ட திட்டமிட்ட காய்நகர்வு.
அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் “ஒப்பரேசன் லிபரேசன்” இந்திய தலையீட்டுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தது.
இந்தியா “ஒப்பரேசன் பூமாலை” மூலம் உணவுப் பொதிகளை வீசியது. இப்போது அமைச்சர் வேல்முருகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை ஆகியோரின் தரையிறக்கத்துடன், “பிரபாகரன்” உயிர்ப்பிக்கப்பட்டுள்ளார். ஒப்பரேசன் “வேல்முருகா”. (?)
பிரபாகரன் தனது போராளிகளுக்கு சொல்லுகின்ற ஒரு விடயம் இது. “வெளிப்படையான எதிரியை விடவும் எங்களோடு இருந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக நடிப்பவன்தான் எங்கள் முதல் எதிரி”. பிரபாகரனுக்கு மறுபிறப்பு சான்றிதழ் வழங்கும் இவர்கள் அவரின் வார்த்தைகளில் துரோகிகள், உள்ளிருந்து குழிதோண்டும் எதிரிகள்.
இந்தப் அறிவிப்புக்கும், அதன் பின்னணிக்கும் உள்ள பல விடயங்கள், சந்தேகங்கள், ஊகங்கள் நோக்கப்பட வேண்டியவை.
(*) வழக்கத்திற்கு மாறாக காசி.ஆனந்தன் இந்த அறிவிப்பை செய்யாமல் பழ.நெடுமாறன் ஏன் செய்தார்?
காசி. ஆனந்தன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் அந்தஸ்த்து கொண்டவர். இந்தியப் படையின் காலத்தில் புலிகளின் இராணுவச் சீருடையில் மேடைகளில் ஏறியவர்.
அவர் பிரபாகரன் உயிர்த்தெழுந்த அறிவிப்பை செய்யவில்லை. காரணம் அவர் ஒரு இலங்கை பிரஷை. பிரபாகரன் இன்ரபோலால் தேடப்படுபவர்.
ஏற்கனவே அவரால் வெளியிடப்பட்ட வட்டுக்கோட்டை பிரகடனம், இந்திய பிரதமர் மோடி ஜீ க்கு எழுதிய கடிதம் தொடர்பாக கடும் விமர்சனங்கள், கண்டனங்கள் எழுந்தன. புதுடெல்லியில் புலிகளால் நிலா தலைமையில் நடந்த கூட்டத்தை போலிப் புலிகளின் கூட்டம் என்றவர்.
இவற்றின் மூலம் அவர்மீது புலம்பெயர்ந்த சமூகம் நம்பிக்கையை இழந்துள்ளது. இந்த அறிவிப்பு அவர் ஊடாக வந்தால் யாரும் அலட்டிக் கொள்ளமட்டார்கள்.
வழக்கமான வெடியாகிவிடும் என்பதால் பழ.நெடுமாறன் களமிறக்கப்பட்டார். பழ.நெடுமாறன் ஈழப்போராட்டத்தை தொடர்ந்தும் ஆதரிப்பவர், இந்தியாவில் – புதுடெல்லியில் அரசியல் செல்வாக்குள்ளவர், ஈழத்தமிழர்களின் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் நம்பிக்கையைப் பெற்றவர், சட்டரீதியான நெருக்குதல்கள் வந்தாலும் இந்தியப் பிரஷை. ஆக, இந்தப் பொய்யை முள்ளிவாய்க்கால் சுடுகாட்டில் நின்று சொல்லக்கூடிய ஒரே அரிச்சந்திரன் பழ.நெடுமாறன்தான்.
(*) இந்த நகர்வுக்குப் பின்னால் இந்தியாவின் மறைகரம் இருக்கிறா? இல்லையா ?
இது விடயத்தில் இந்தியா ஒரு கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தப்பார்க்கிறது. ஒன்று 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கான “ஒப்பரேசன் வேல்முருகா” அழுத்தம்.
இது இலங்கைக்கு, மற்றையது உலகத்தமிழர்கள் இந்தியாவோடுதான் நிற்கிறார்கள் என்ற செய்தியைச் சீனாவுக்கு சொல்வது.
பிரபாகரனைக் காட்டி இலங்கையையும், சீனவையும் எச்சரிப்பது. பழ.நெடுமாறனின் கூற்றில் ஈழத்தமிழர் நலனை விடவும் இந்திய நலனே முதன்மைப்படுத்தப்பட்டது. சீனாவை வெறுப்பாக இருந்தது. இந்தியாவை ஆரத்தழுவி அணைத்தது.
பிரபாகரன் தொடர்பான செய்தியில் இந்தியாவுக்கு தொடர்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதன் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையே கடந்த ஆண்டுகளில் தமிழ்தேசிய அரசியல் பேசிவருகிறது. சீனாவுக்கு எதிராக இந்தியாவின் பாதுகாப்பு ஈழ அரசியலில் தங்கியிருக்கிறது என்பதே அது.
இது இந்தியாவுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி. இன்னொரு பக்கத்தில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதன் மூலம் நாங்கள் தான் உண்மையான புலிகள், புதுடெல்லி புலிகள் போலிகள் என்ற தோற்றப்பாட்டையும் இந்தியாவுக்கு உருவாக்கமுடியும்.
(*) காசி.ஆனந்தன் வார்த்தைகளில் சமஷ்டிகூட “வெங்காயத்தீர்வு”. பிரபாகரன் வருகின்றார் என்றால் அதைக் கோரும் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல்வாதிகள் நிலை என்ன..?
பிரபாகரனின் வருகையைக் கேட்டவுடன் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல்வாதிகள் அனைவருக்கும் “காற்சட்டையில் / வேட்டியில் கழியாத” குறை.
ஏனெனில் இவர்கள் பிரபாகரனின் வாழ்வில் “ஆமா சாமி” அரசியலும், பிரபாகரனின் மறைவில் “ஆசாமி” அரசியலும் செய்தவர்கள்.
இப்போது கடந்த 13 ஆண்டுகால அரசியல் அறுவடைக்கு பிரபாகரனிடம் கணக்கு காட்டவேண்டும் என்று அஞ்சுகிறார்கள். இச் செய்தி பொய்யாக இருக்கவேண்டும் என்று கடவுளைக் கெஞ்சுகிறார்கள்.?
பிரபாகரனின் உயிர்ப்பின் மற்றொரு எதிர்பார்ப்பு தென்னிலங்கையில் பிக்குகள் மூட்டி உள்ள நெருப்பில், பிரபாகரனை எண்ணெய்யாக ஊற்றி இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவது. அதன் மூலம் தமிழர்களைக் காப்பாற்ற இந்தியத் தலையீட்டை கோருவது.
(*) பிரபாகரனின் வருகை மேற்குலகில் எவ்வாறு எதிரொலிக்கும்..?
பிரபாகரனின் உயிர்ப்பு செய்தி மேற்குலகின் காதுகளிலும் விழுந்திருக்கிறது. அவர்களைப் பொறுத்தமட்டில் தங்களால் அழிக்கப்பட்ட சதாம்குசைன், கடாபி, ஒசாமா பின்லாடன் உயிர்த்தெழுந்த மாதிரி ஒரு தலையிடி.
அதாவது பயங்கரவாத தலைவர் ஒருவர் தாங்கள் நினைத்தது போல் சாகவில்லை உயிருடன் இருக்கிறார்.
அதுவும் ஐரோப்பாவில் குடும்பத்துடன் உலவுகிறார். நிதி சேகரிக்கிறார். இனியும் புலிகளின் இயக்கத்தை விட்டு வைக்கமுடியுமா..?
டயஸ்போரா புலிகள் சுருட்டிய சொத்துக்களை திருப்பிக் கேட்டபோது “அண்ணே வந்தால் தருவோம்” என்றார்கள்.
இனி என்ன அண்ணே வந்து விட்டார் கொடுக்கவேண்டியதுதானே. ஆகக்குறைந்தது புலிகளுக்கு கடன் எடுத்துக் கொடுத்ததால் பிரிந்த குடும்பங்கள், பராமரிப்பு இல்லங்கள், பராமரிப்பு குடும்பங்களில் வளரும் பிள்ளைகள், வார இறுதியில் வீட்டுக்கு வீடு கொத்து ரொட்டி விற்று கடனைச் சிறுகச் சிறுகச் திருப்பிச் செலுத்தும் தனிநபர்கள், கோயில் உண்டியல் கொள்ளையர்கள், மனநோயாளிகளாக மாறியுள்ள புலம்பெயர்ந்த முதல் பரம்பரையினர் போன்றவர்களுக்காவது பிரபாகரனின் உயிர்ப்பு செய்தி பொய்யாயினும் ஒரு நன்மையைக் கொடுத்தால் வரவேற்கவேண்டியதே. அண்ணே வந்துவிட்டார். இவர்கள் சொன்னதைக் செய்தார்களா..?
உலகத் தமிழர்களின் உதவியை கோரிய நெடுமாறனுக்கு அவர் எதிர்பாராத அளவுக்கு பலத்த அடிவீழ்ந்துள்ளது. உலகத் தமிழர்கள் நெடுமாறன் கூறும் பொய்யை நம்பத்தயாரில்லை.
பிராபாகரன்மீது விசுவாசம் கொண்டவர்கள் கூட” அப்படி என்றால் என்று ‘ஆல்’ போட்டே மகிழ்ச்சி” என்றுதங்கள் கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இனியும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் கருத்துக்களை ஈழத்தமிழர்கள் நம்பமாட்டார்கள் என்பதை நெடுமாறனின் கட்டுக் கதை சொல்லல் நிரூபித்திருக்கிறது.
(*) சிங்கள கடும்போக்காளர்களை ரணிலுக்கு எதிராக ஏவிவிட்டு அவரின் தீர்வு முயற்சியை முறியடித்தல்.
பிரபாகரனின் உயிர்ப்பு செய்தி இலங்கையின் சிங்கள கடும்போக்காளர்கள் இதுவரை கூறி வந்த “புலிகளின் மீள் உருவாக்கத்தை” நிரூபிப்பதாக அமையும்.
டயஸ்போராவின் நிதி சேகரிப்பை உறுதிசெய்யும். இதன் விளைவு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கல், 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தல், ஏன்? தமிழ்தரப்பு எழுப்புகின்ற “சமஷ்டி” கோசத்திற்கும் எதிராகவே அமையும். தேர்தலைப் பின்போடவும் இது ஒன்றே போதும்.
இச் செய்தி சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி கடும்போக்காளர்கள் பக்கம் சாய்த்து விட வழிவகுக்கும்.
இன, மத குரோதங்கள், சமூகங்களுக்கிடையிலான அவநம்பிக்கை, எதிரி மனப்பான்மை என்பனவற்றை வளர்த்துவிடும்.
இது முழுக்க முழுக்க இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்கு பெரும் தடைக்கல்லாகவே அமையப்போகிறது.
ஜனாதிபதி ரணிலின் தீர்வுக்கான உறுதியில் -பிடிவாதத்தில் ஒரு தளர்வை ஏற்படுத்துவதாக அமையும்.
மொத்தத்தில் சீனாவைச் காட்டி இந்தியாவை குளிப்பாட்டி, ரணிலின் தீர்வு முயற்சியை தோற்கடித்து, மீண்டும் யுத்தத்திற்கு விடுக்கப்பட்ட யுத்தத்தில் குளிர்காய்ந்த கூட்டத்தின் அறிவிப்பும், அழைப்பும் இது.
உண்மையில் இந்தியாவின் 13 ஐ முழுமையாக அமுல்படுத்தும் கோரிக்கைக்கு எதிராக இவர்கள் சிங்கள கடும்போக்காளர்களுடன் கைகோர்த்துள்ளனர்.
இதையே இந்திய – இலங்கை உடன்பாட்டின் போதும் பிரபாகரன் செய்தார். அவர் செய்ததைச் செய்வதன் மூலம் மட்டும் அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை எப்படி நிரூபிப்பது…?
தமிழர்களை மீட்க அனுமன் வருகிறான்…. இலங்கை மீண்டும் எரியப்போகிறது..!
— அழகு குணசீலன் —