♠ பிரபாகரனை உயிர்ப்பிக்க முனையும் தரப்புகள் யார் யாரெல்லாம் என்று பார்த்தால், புலம்பெயர் தமிழ் மக்களிடம் பண வசூல் செய்து, வயிறு வளர்த்து கொழுக்க நினைக்கும் தரப்புகள் முன்னணியில் இருக்கின்றன
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக, உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருக்கிறார்.
நீண்ட காலமாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நெடுமாறன் பொது நிகழ்வுகளில் பெரிதாக பங்கேற்பதில்லை.
கடந்த திங்கட்கிழமை 13) தஞ்சாவூரில் அமைந்திருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடத்திய ஊடகவியலாளர்: சந்திப்பிலேயே அவர், பிரபாகரன் உயிரோடு
இருப்பதாக வெளிப்படுத்தினார்.
இதன்போது, அவருக்கு அருகில் காசி ஆனந்தனும் அமர்ந்திருந்தார்.
தலைவர் பிரபாகரனின் மனைவி என்று, முகத்தை மூடி முக்காடு அணிந்த பெண்ணொருவரை அறிமுகப்படுத்தி, அண்மையில் சுவிஸில் பணம் வசூலிக்கும் கும்பலொன்று மோசடி நாடகத்தை ஆடியிருந்தது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்து, சில நாள்களிலேயே, நெடுமாறன் ஊடகங்களை: அழைத்து, பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அறிவிக்கின்றார்.
சர்வதேச சூழலும் ராஜபக்ஷர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் போராடும் குழலும் நிலவும் நிலையில், பிரபாகரன் உயிரோடு இருப்பதை வெளிப்படுத்துவதற்கான நேரம் கனிந்திருப்பதாக நெடுமாறன் தெரிவித்திருக்கிறார்.
அத்தோடு, தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும், பிரபாகரனின். செயற்றிட்டங்களுக்கு ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதான அறிவிப்பை வெளியிட்ட நெடுமாறன், “விடுதலைப் புலிகள். வலிமையாக இருந்த காலத்தில், இந்தியாவுக்கு எதிரான சத்திகள், வடக்கு – கிழக்கில் காலூன்ற அனுமதிக்கவில்லை.
இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் தொடர்புகளைப் பேணவும்கூட, பிரபாகரன் விரும்பவில்லை” என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
பிரபாகரன் உயிரோடு இருப்பதான அறிவிப்பு, ஒருநாள் ஊடகப் பரபரப்போடு அடங்கிவிட்டது.
ஆனால், முளிளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து, கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாகிற நிலையில், திடீரென பிரபாகரன் உயிரோடு இருப்பதான அறிவிப்பு வெளியிடப்படுதற்கான காரணங்களைக் குறித்து கவனமாக பார்க்க வேண்டியிருக்கின்றது.
அதிலும், உடலளவில் தளர்ந்திருக்கின்ற நெடுமாறன் ஏன் அதைச்
செய்தார்? அவரோடு காசி ஆனந்தன் இருக்க வேண்டிய அவசியம் பற்றியெல்லாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.
அத்தோடு, இந்தியா குறித்து, அங்கு வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள், உண்மையில் நெடுமாறனின் செயற்பாடுக்கு. ஏதோவொரு பின்னணி இருப்பதான சந்தேகத்தை அதிகரிக்கின்றது.
பிரபாகரன் உயிரோடு இருப்பதான நெடுமாறனின் அறிவிப்பை, இலங்கை இராணுவம் உடனடியாக மறுத்துவிட்டது.
இறுதி மோதல்களின் இறுதி நாள்களில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறி, உடலம் ஒன்றை உலகுக்கு இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியது.
தென் இலங்கையில் இனவாத மதவாத சக்திகள் குறிப்பாக ராஜபக்ஷ தரப்பு, புலிகள் மீள உருவாக்கப்படுகிறார்கள்; நாட்டை அழிக்கப்போகிறார்கள் என்று தேர்தல் அரசியலுக்காக அடிக்கடி கூறுவதுண்டு.
ஆனால், எந்தவொரு தருணத்திலும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர்கள் கூறுவதில்லை.
ஏனெனில், பிரபாகரனை கொன்று நாட்டை காப்பாற்றிவிட்டதாக கூறி, தென் இலங்கையில் இரண்டு தடவைகள் ஆட்சி பீடமேறிவிட்டார்கள். அப்படியான நிலையில், பிரபாகரனைக் காட்டி, புலிப்பூச்சாண்டியை சிங்கள மக்களிடம் காட்ட முடியாது என்று அவர்களுக்கு தெரியும்.
தமிழ் மக்களைப் பொறுத்தளவில் தலைவர் பிரபாகரன், தமிழ் மக்களின் விடுதலைக்காக உடல், பொருள், ஆவியை மாத்திரமல்ல குடும்பத்தையும் கொடையாக வழங்கிப் போரிட்டவர் என்கிற உணர்நிலை உண்டு.
அவர் வாழ்நாள் பூராவும் போராளியாக வாழ்ந்து, மாவீரர் ஆனவர்:
தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டதாக, இந்தியாவும் இலங்கையும் கடந்த காலங்களில் பல தடவைகள் அறிவித்திருக்கின்றன. அப்போதெல்லாம் புலிகள் இயங்கு நிலையிலேயே இருந்திருக்கிறார்கள்.
மெளனிக்கப்பட்ட களம்.
அந்தக் களத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் மரணிக்கும் போது, தலைவர் பிரபாகரன் தப்பியோடவோ, தலைமறைவாக வாழவோ தலைப்பட மாட்டார் என்று மக்களுக்கு தெரியும்.
ஏன், எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் கூட தெரியும். தலைவர் பிரபாகரனின் இறந்த நாளென்று இலங்கை அரசு அறிவித்திருக்கின்ற திகதியை, தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம்.
ஆனால், அவர் களத்தில் போராடி மாவீரராக வீழ்ந்தார் என்பதை ஏற்றுக் கொள்வதில் எந்த சங்கடமும் இல்லை. ஈழத் தமிழ் மக்களின் அடையாளமாக பிரபாகரன் நீடிப்பதற்கும் அதுதான் காரணம்.
உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், இறுதி மோதல் காலத்தில் இராணுவத்தோடு சேர்ந்து இயங்கிய புளொட் அமைப்பில் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூட, தமிழ் மக்களுக்கு போராடப்புறப்பட்டவர்களில் உறுதியும் தியாக சிந்தையும் கொண்டவர் பிரபாகரன் மட்டுமே என்று ஊடகங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தங்களுக்கு இடையில் முரண்பட்டுக் கொண்ட பின்னர், புலிகள் ஏக இயக்கமாக வளர்ந்தார்கள். பின்னரான காலத்தில் ஈரோஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் உள்ளிட்ட இயக்கங்கள் புலிகளோடு இணக்கமாக இயங்கவும் செய்தன.
ஆனால், புலிகள் இருக்கும் வரையில் அவர்களோடு எந்தச் சமரசத்துக்கும் வராத இயக்கங்களாக ஈபி.டி.பியையும், புளொட்டையும் கூற முடியும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் அதில், புளொட்டை உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, அதற்கு புலிகள் இணங்கினார்கள். ஆனால், அப்போதும் புளொட் அமைப்பு இலங்கை அரசாங்கத்தை பகைத்துக் கொள்ள முடியாது என்று கூறி கூட்டமைப்பில் இணையவில்லை.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி என்கிற பெயரில் அரசியல் கட்சியையும் புளொட் அமைப்பின் உறுப்பினர்களைக் கொண்டு அப்போது அரசாங்கம் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அப்படியான நிலையில், புலிகளை என்றைக்குமே ஏற்காத சித்தார்த்தனே, பிரபாகரனின் விடுதலைப் போராட்டத்துக்கான அர்ப்பணிப்பு குறித்து மெச்சியிருக்கிறார்.
அப்படியான நிலையில், தங்களின் தேசிய தலைவராக பிரபாகரனை வரிந்து கொண்ட தமிழ் மக்கள் அவரை எந்த இடத்தில் வைத்திருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
பிரபாகரனை உயிர்ப்பிக்க முனையும் தரப்புகள் யார் யாரெல்லாம் என்று பார்த்தால், புலம்பெயர் தமிழ் மக்களிடம் பண வசூல் செய்து, வயிறு வளர்த்து கொழுக்க நினைக்கும் தரப்புகள் முன்னணியில் இருக்கின்றன.
இவர்களுக்கு உழைப்பு என்கிற வார்த்தைக்கான அர்த்தம் தெரியாது. அடுத்தவர்களின் பணத்தில் சொகுசாக வாழ்வது என்கிற ஒன்று மட்டுந்தான் தெரியும்.
அதற்காக வாழ்நாள் பூராவும் மோசடிகளில் ஈடுபடுவார்கள் அவர்களுக்கு தமிழ் ஈழமும், விடுதலைப் புலிகளும், பிரபாகரனும் பணம் கொட்டும் மரங்கள்.
அவர்களை முன்னிறுத்தினால்,தமிழ் மக்களை இலகுவாக ஏமாற்றலாம் என்பது தெரியும்.
இன்றும்கூட பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார், போராடுவதற்கு நிதி கோருகிறார் என்றால் சிலர் அதனைநம்பி ஏமாறத் தயாராக இருக்கிறார்கள்.
அவர்களுக்கு, முள்ளிவாய்க்கால் முடிவை ஏற்று, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதிலுள்ள மனத்தடை மிகப்பெரியது.
புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் பிரபாகரனின் உடலம் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது என்பது வரையில் இந்தியா மிகக்கவனமாக இருந்தது.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இலங்கை அளவுக்கு இந்தியாவும் தன்னுடைய சொந்த யுத்தமாகவே நினைத்து நடத்தியது.
இறுதி மோதல் காலத்தில் இந்தியா, இலங்கைக்கு வழங்கிய ஆயுத உதவிகள், தொழில்நுட்ப உதவிகள் குறித்து மஹிந்த ராஜபக்ஷ, மங்கள சமரவீர போன்றவர்கள் பல தடவைகள்வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஏன் கோட்டாபய ராஜபக்ஷ கூட இந்தியாவின் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தான் நடத்தியதாக கூறியிருக்கிறார். அப்படியான நிலையில், புலிகளுக்கும் இந்தியாவுக்குமான உறவு நிலை என்ன என்பது அனைவருக்கும் வெளிப்படையானது.
புலிகள் 2000க்குப் பின்னர், இந்தியாவோடு முரண்படுவதை பெருமளவு தவிர்த்துக் கொண்டார்கள். ஒரு வகையிலான நெகிழ்வுப் போக்கோடு பணியாற்றவே விரும்பினார்கள்.
ஆனால், தமிழகத்துக்கு சில கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ள இலங்கையின் வடக்கு- கிழக்கு பகுதியில் ஆயுதப் போராட்ட இயக்கமொன்று, அரசொன்றை நிறுவி நிலை பெறுவதை என்றைக்கும் இந்தியா விரும்பியிருக்கவில்லை.
ஆனால், புலிகள் அழிக்கப்பட்டால், புவிசார் அரசியலில் இன்னுமின்னும் மேலெழலாம் என்று நினைத்த இந்தியாவுக்கு, ராஜபக்ஷர்களும் தென் இலங்கையும் வழங்கியது பெரும் ஏமாற்றமே.
குறிப்பாக, அச்சுறுத்தல் அளிக்கும் அளவுக்கு, இந்தியாவுக்கு எதிராக தென்இலங்கை, சீனாவை வளர விட்டிருக்கின்றது. அப்படியான நிலையில், தன்னுடைய பிடியை, இந்தியா மீண்டும் தக்க வைப்பதற்கு பிரபாகரனை உயிர்ப்பிக்கும் தேவை எழலாம்.
அதற்கான கருவிகளாக நெடுமாறன் போன்றவர்கள் கையாளப்படலாம். ஆனால், அதில் ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் இப்போது தயாராக இல்லை. ஏன், சிங்கள மக்கள் கூட தயாராக இல்லை என்பதுதான் உண்மை.
-புருசோத்தமன் தங்கமயில்-