மோட்டார் சைக்கிள் தலைகவசத்தினால் தாக்குதல் நடத்தி, ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் 3 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை எதிர்வரும் 28ம் தேதி வரை மாகொல பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்குமாறு மத்துகம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, குறித்த 3 சந்தேகநபர்களையும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

நடந்தது என்ன?

களுத்துறை – அளுத்கம பகுதியில் கடந்த 14ம் தேதி 34 வயதான ரங்க விராஜ் ஜயசிறி, வர்த்தக நிலையமொன்றிற்கு சென்று மீண்டும் திரும்பியுள்ளார்.

இதன்போது, தனது வீட்டிற்கு செல்லும் குறுக்கு வீதியொன்றில் 2 மோட்டார் சைக்கிள்களில் 3 மாணவர்கள் பாதுகாப்பற்ற விதத்தில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியுள்ளனர்.

இதை அவதானித்த விராஜ், 3 மாணவர்களையும் அழைத்து, பாதுகாப்பாக மோட்டார் சைக்கிளை செலுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதையடுத்து, ரங்க விராஜ் ஜயசிறிக்கும், 3 மாணவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

வாய்த்தர்க்கம் வலுப் பெற்றதை அடுத்து, மாணவர்கள் தமது கைகளிலிருந்து தலை கவசத்தினால் விராஜ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடுமையான தாக்குதலுக்கு இலக்கான விராஜ், சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனைவி மாணவர்களால் கணவர் கொலை

இவ்வாறு தாக்குதலை நடத்திய பாடசாலை மாணவர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த விராஜ், பிரதேச மக்களினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் விராஜ் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவரின் உயிரை காப்பாற்ற முடியவல்லை.

பதுங்கியவர்கள் பிடித்த போலீஸ்

பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற மாணவர்கள், அருகாமையிலிருந்த கட்டடமொன்றிற்குள் தலைமறைவாக மறைந்திருந்த நிலையில் போலீஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது, பிரதேச மக்கள் தாக்குதல் நடத்த முயற்சித்த பின்னணியில், பிரதேசத்தில் அமைதியின்மை நிலவியுள்ளது.

அதையடுத்து, குறித்த பகுதிக்கு விசேட அதிரடிபடை அழைக்கப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.

சந்தேகநபர்கள் பயணித்ததாக கூறப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த ரங்க விராஜ் ஜயசிறி, தனியார் நிறுவனமொன்று கடமையாற்றும் ஒருவராவார்.

மனைவியின் மாணவர்கள்

அவரது மனைவி, பாடசாலை ஆசிரியர் என்பதுடன், இந்த தம்பதிக்கு 11 மாத பெண் குழந்தையொன்று உள்ளது.

தனது கணவர் ரங்க விராஜ் ஜயசிறியை கொலை செய்ததாக கூறி சந்தேக நபர்களாக பிடிபட்ட 3 பேரும் விராஜின் மனைவி கற்பிக்கும் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அந்த மாணவர்களினாலேயே, தனது கணவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி, ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

”இவர்கள் நான் கல்வி கற்பிக்கும் பாடசாலையில் பயிலும் மாணவர்கள். இவர்களே எனது கணவரை அடித்துக் கொலை செய்துள்ளனர்,” என அவரது மனைவி ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

ரங்க விராஜ் ஜயசிறியின் சகோதரியும் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

”அவர் எனது சகோதரன். பாண் வாங்குவதற்காகவே அவர் வர்த்தக நிலையத்திற்கு சென்றார். அந்த சந்தர்ப்பத்தில் இந்த மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் கூச்சலிட்டு, பாதுகாப்பற்ற முறையில் சென்றுள்ளனர்.

இவ்வாறு செல்ல வேண்டாம். இந்த வீதியில் சிறுவர்கள் செல்கின்றார்கள் என அவர் மாணவர்களிடம் கூறியுள்ளார். அதையடுத்து, அவர் மீது தாக்கியுள்ளனர்” என அவரது சகோதரி குறிப்பிடுகின்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version