நடிகர்கள்: தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா. இயக்குனர்; வெங்கி அட்லுரி; படத்தொகுப்பு – நவீன் நூலி; இசை – ஜீ.வி.பிரகாஷ்
சிதாரா எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்சூன் ஃபார் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரித்துள்ளன.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களை போலவே பிற மொழி படங்களிலும் நடிப்பதில், நடிகர் தனுஷ் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஏற்கனவே அவர் இரண்டு ஹிந்தி படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரே மேன்’, ஹிந்தியில் வெளியான ‘ஆட்ராங்கி ரே’ ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களை தவிர்த்து, பல மொழிகளில் உள்ள சினிமா ரசிகர்களிடமும் நடிகர் தனுஷை கொண்டு சேர்த்தது.
இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் நேரடியாக தெலுங்கு திரையுலகில் நுழையும் வண்ணம் வெளியாகியிருக்கும் `வாத்தி` திரைப்படம் அவரது ரசிகர்களிடயே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கல்வியை வியாபாரமாக பார்க்கும் முதலாளிக்கும், அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என நினைக்கும் நாயகனுக்கும் இடையிலான மோதல்தான் `வாத்தி` திரைப்படத்தின் மையக்கரு.
பள்ளிக்கல்வியில் நடைபெறும் சில மோசடிகளை மையமாக வைத்து இந்த படத்தின் கதை நகர்கிறது.
90களின் இறுதி காலகட்டத்தில் கதை நடப்பது போல இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
கல்வித்துறையில் நடக்கும் மோசடிகளை பேசும் `வாத்தி`
90களின் இறுதிகாலகட்டத்தில் அரசுப்பள்ளிகளில் சரியான ஆசியர்கள் இல்லாததால், தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் சிலர் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியராக பணியாற்ற அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
அப்படி தமிழக -ஆந்திர எல்லையில் அமைந்திருக்கும் சோழபுரம் என்ற கிராமத்தில் இருக்கும் அரசுப்பள்ளிக்கு உதவி ஆசிரியராக செல்கிறார் பாலமுருகன் (தனுஷ்).
அங்கே உள்ள மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கல்வியளிக்க வேண்டுமென நினைக்கிறார்.
கல்வியை வியாபார கண்ணோட்டத்தில் பார்க்கும் திருப்பதி (சமுத்திரக்கனி), அரசுப்பள்ளிகள் தரம் உயர்ந்தால் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என நினைத்து நாயகனுக்கு பல இடையூறுகளை ஏற்படுத்துகிறார். இவர்களுக்கு இடையில் நடக்கும் மோதலில் இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே வாத்தி திரைப்படத்தின் கதை. நாயகனின் சக ஆசிரியராக ஆங்காங்கே கதையில் வந்து போகிறார் நடிகை சம்யுக்தா. இந்த திரைப்படத்துக்கு சில முன்னணி ஊடகங்கள் அளித்துள்ள விமர்சனங்களைப் பார்ப்போம்.
இன்று வெளியாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களே வரத்தொடங்கியிருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் இந்த படம் குறித்து எழுதியிருக்கும் விமர்சனங்களை இனி பார்க்கலாம்.
துருத்தலாக இருக்கும் தனுஷின் மிகை நாயகத்தன்மை
‘தனியார் மயத்துடன் வியாபாராகும் கல்வி, அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான காரணங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீதான அரசின் அலட்சியப்போக்கு, இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகும் படிப்பு என கல்வியின் பல்வேறு பக்கங்களை வாத்தி திரைப்படம் புரட்டுவதாக` இந்து தமிழ் திசை கூறுகிறது.
`ஜீ.வி. பிரகாஷின் இசையில் ‘வா வாத்தி’, ‘நாடோடி மன்னன்’ ஆகிய பாடல்கள் முத்திரை பதித்திருப்பதாகவும், படத்தினுடைய ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் கச்சிதமாக அமைந்திருப்பதாகவும்` இந்து தமிழ் திசை கூறுகிறது.
ஆனால், `வெகுஜன சினிமாவுக்கான அம்சங்களுடன் படம் தொடங்கினாலும், தெலுங்கு படம் பார்க்கும் உணர்வை கொடுக்காமலில்லை என்றும், பொருந்தாத டப்பிங் அதற்கு உதாரணம்` என்றும் இந்து தமிழ் விமர்சித்திருக்கிறது.
அதேப்போல் படத்தின் காதல் காட்சிகளும் படத்துடன் ஒட்டாத உணர்வை ஏற்படுத்துகிறது எனவும் தனது விமர்சனத்தில் இந்து தமிழ் திசை குறிப்பிட்டுள்ளது.
`வாத்தியை` தாங்கி பிடிக்கும் தனுஷின் நடிப்பு
`வழக்கமான கமர்சியல் திரைப்படத்திற்கான அம்சங்களுடன் வாத்தி படம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவ்வபோது பார்வையாளர்களின் நாதுத்டிப்பை பிடிக்கும் வண்ணம் பல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது` என்று கூறுகிறது டைம்ஸ் ஆஃப்
அதேப்போல் கல்வி குறித்தும், சமத்துவம் குறித்தும் படத்தில் வரும் வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது எனவும், தனுஷ் மற்றும் சம்யுக்தா ஆகியோரின் ஜோடி நன்றாக அமைந்திருக்கிறது எனவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.
ஆனால் படத்தில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கபடவில்லை எனவும், வழக்கமாக படங்களில் பார்க்கும் ஒரு சாதாரண வில்லன் தோரணையிலேயே அவர் வந்து போகிறார் எனவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
காட்சிகளில் லாஜிக் இல்லை
`படத்தின் முழு கதையையும் தனுஷ் மட்டுமே தனது தோள்களில் தூக்கி சுமக்கிறார் என்றும், அவரது திறமை இந்த படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறது` எனவும் இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டுமென்ற ஒரு நல்ல கதைக்கருவை இந்த படம் கொண்டிருந்தாலும், அதனை பார்வையாளர்களுக்கு சரியான முறையில் கடத்துவதற்கு தவறவிட்டுவிட்டது என்றும் இந்தியா டுடே கூறியுள்ளது.
நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையிலான மோதல் காட்சிகளும்,படத்தின் வில்லன் கதாப்பாத்திர வடிவமைப்பும் மிகுந்த சினிமாத்தனத்துடன் இருக்கிறது என இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
அதேப்போல் ஏற்கனவே நாம் பார்த்த சாட்டை, ராட்சசி போன்ற திரைப்படங்களின் சாயலில்தான் இந்த படமும் நகர்கிறது எனவும் இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.
படத்தின் சில காட்சிகள் உணர்வுப்பூர்வமாக இருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் இடம்பெறுகிறது எனவும், குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி மிகவும் தொய்வடைந்து செல்வதாகவும் இந்தியா டுடே கூறுகிறது. படத்தில் தனுஷை தவிர மற்ற நடிகர்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்பே இல்லாத வகையில் கதாப்பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.