சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி, மகள் துவாரகா இருவரும் வறுமை காரணமாக சுவிட்சர்லாந்தில் முக்காடு போட்டுக் கொண்டு நிதி சேகரித்ததாக பொய்யான தகவல்களை பலர் பரப்புகின்றனர் என ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன் கொந்தளிப்புடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக  ஊடகத்துக்கு கவிஞர் காசி ஆனந்தன் அளித்த நேர்காணல்: 2009-ம் ஆண்டு பிரபாகரன் உடலை கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

அப்போது மலேசியாவில் இருந்து கேபி என்னை தொடர்பு கொண்டு, பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்க வேண்டும் என்றார். நான் மறுத்துவிட்டேன்.

பின்னர் 2 தூதர்களை அனுப்பினார்கள். நானோ அழுது கொண்டே இருந்தேன். பின்னர் நெடுமாறனை சந்த்தித்தேன். அப்போது வைகோவை நாங்கள் சந்தித்தோம்.

வைகோவோ, பிரபாகரனுக்கு அஞ்சலி கூட்டம் நடத்தலாம் என்றார். ஆனால் நெடுமாறனோ, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அப்படி எல்லாம் அஞ்சலி கூட்டம் நடத்த வேண்டாம் என தடுத்தார்.

தற்போதும் பிரபாகரன் குறித்து நெடுமாறனுக்கு நம்பகமான தகவல் கிடைத்திருக்கலாம். அதனால் அவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என அறிவித்திருக்கலாம். பிரபாகரனுக்கு நெடுமாறன் ஒரு தந்தையைப் போன்றவர்.

பிரபாகரன் தனது 19வது வயதில் நெடுமாறனின் மடியில் தவழ்ந்தவர். பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கும் காவலரணாக இருந்தவர் நெடுமாறன்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், நெடுமாறனை தந்தை நிலையில்தான் மரியாதை செலுத்தினார்.

அப்படியான நெடுமாறன் ஒரு அறிவிப்பை வெளியிடும் போது அதை நம்பித்தான் ஆக வேண்டும். 2009-ம் ஆண்டு வரை திரைப்படத்துறையில் இருந்தவர்கள் இப்போது பேசுகிறார்கள்.. என் தலைவரை பற்றி எப்படி பேசலாம் என? என்னை கேள்வி கேட்கிறார்கள்.

பிரபாகரனுடன் மிக நெருக்கமாக இருந்தவன் நான். அவர்கள் எல்லாம் இப்போது பல கதைகளை பேசுகிறார்கள்.

பிரபாகரன் மனைவி மதிவதினியும், மகள் துவாரகாவும் சுவிட்சர்லாந்திலோ ஏதோ ஒரு நாட்டிலோ முக்காடுபோட்டுக் கொண்டு வறுமை காரணமாக நிதி சேகரித்தார்கள் என பச்சை பொய்யை சொல்கின்றனர்.

பிரபாகரன் மனைவியும் மகளும் வறுமை காரணமாக பிச்சை எடுக்கிறார்கள் என எப்படி சொல்லலாம்? அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள் என ஒரு தகவல் உறுதியானதாக இருந்தால் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் அவர்களை தங்களது வீட்டுக்கு அழைத்து கொஞ்சி குலாவமாட்டார்களா?

மதிவதினியும் துவாரகாவும் வந்து சென்ற கார் எண்ணை அறியாமலா இருந்தீர்கள்? மிகப் பெரிய துப்பை துலக்குவதாக சொல்கிற இவர்கள், மதிவதினியும் துவாரகாவும் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது என்ன பெரிய விஷயமா?

ஏன் அதை செய்து அறிவிப்பு வெளியிடலாமே? இந்திய உளவு அமைப்பான ரா அமைப்பின் படிதான் அவர்கள் செயற்படுகிறார்கள் எனில் அவர்கள் ஏன் வறுமையில் இருக்க வேண்டும்?

அவர்கள் ஏன் நிதி சேகரிக்க வேண்டும்? ஏன் பிச்சை எடுக்க வேண்டும்? ரா அமைப்பின் செல்லப் பிள்ளைகள் எனில் கோடிகளை அல்லவா கொட்டி கொடுத்திருக்கும்?

ஏன் இப்படியான பச்சை பொய்யை பரப்புகிறார்களோ? எரிந்து போகிறேன் இப்படியான தகவல்களால்.. இவ்வாறு காசி ஆனந்தன் கூறி உள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என பழ.நெடுமாறன் அறிவித்த செய்தியாளர் சந்திப்பில் கவிஞர் காசி ஆனந்தனும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply

Exit mobile version