சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கிழக்கு திமோர் நாட்டில் இருக்கலாம்; விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் இத்தாலியில் சிகிச்சை பெறுகிறார் என சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருந்தார்.

இதனையடுத்து பிரபாகரன் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிரபாகரன் உயிருடன் இல்லை என ஒருதரப்பு சொல்கிறது.

அதேநேரத்தில் பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஒரு அரசியல் இயக்கம் உருவாகப் போகிறது அதற்கான முன்னோட்டமே இது என்கின்றன சில தகவல்கள்.

இந்நிலையில் பிரபாகரன் தொடர்பாக ஈழத்து கவிஞரும் திரைப்பட நடிகருமான வ.ஐ.ச.ஜெயபாலன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு- நந்திக் கடல் இடையேயான அலையாத்தி காடுகளில்தான் பிரபாகரன் இருந்தார். அங்கிருந்துதான் யுத்தத்தை பிரபாகரன் நடத்தினார் என செய்திகள் கிடைத்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல தளபதிகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் சரணடைய முன்வந்தது.

அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தது தென்னாப்பிரிக்காவும் கிழக்கு திமோர் நாடும்தான். இருநாடுகளும் விடுதலைக்காக போராடியவை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தென்னாப்பிரிக்கா, கிழக்கு திமோரில்தான் பாதுகாப்பாக இருந்தனர்.

பொட்டம்மான் பின்னர் சிகிச்சைக்காக இத்தாலி சென்றார் என கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவும் கிழக்கு திமோரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என கொள்கையாக கொண்டிருந்தவை.

பிரபாகரன் போராட்டத்தை நடத்தியவர்; அதனால் அவர் உயிருடன் இருக்க கூடாது; அவர் உயிருடன் இருப்பது அவருக்கு அவமானம் என கருதக் கூடாது. அது பிழையானது. அது அறியாமையாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சில நம்பிக்கையான வட்டாரங்கள் கூறி இருக்கின்றன.

ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை. பிரபாகரன் குறித்த இந்த தகவல்கள் உண்மையாக இருக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம்.

எதற்கும் சில மாதங்கள் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதன்பின்னரே பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பதை உறுதி செய்வோம். இவ்வாறு வ.ஐ.ச.ஜெயபாலன் கூறினார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version