சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவாதம் மற்றும் அதன் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுக்கொள்வதற்கான தீவிர முயற்சியில் இலங்கை வெற்றி கொண்டுள்ளது.
இதன் மூலம் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான சூழல் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதுடன், ஏனைய தரப்புகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதில் காணப்பட்ட தடைகளும் நீங்கியுள்ளன.
குறிப்பாக, மிக நீண்ட காலமாக கடன் மறுசீரமைப்பு விடயங்களில் பல இழுத்தடிப்புகளை செய்த சீனாவை இறுதியில் இலக்கை நோக்கி நகர்த்தியமை உண்மையில் ஜனாதிபதி ரணிலின் பெரும் வெற்றியாகவே கருத முடிகிறது.
ஏனெனில், இதற்கு முன்னர் சீனா, கடன் கொடுத்த எந்தவொரு நாட்டுக்கும் நீண்ட கால கடன் மறுசீரமைப்புகளுக்கு ஒத்துழைத்திருந்ததில்லை.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகள் பிராந்திய அரசியலில் எவ்வாறு தாக்கம் செலுத்தியது என்பதை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இழுத்தடிப்பை கைவிட்டு, முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டதற்கான மையப்புள்ளியும் இங்குதான் உள்ளன.
பெய்ஜிங் தனது கடன் மறுசீரமைப்பு கொள்கையை தளர்த்தி, இறுதியில் கொழும்பின் கோரிக்கைக்கு ஒத்துழைக்க எடுத்த தீர்மானத்துக்கும் இடையே பிராந்திய பொருளாதார அரசியல் இராஜதந்திர போர் என்ற ஒரு நேர்கோட்டினையே இங்கு காண முடிகிறது.
கடும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் மூழ்கி இலங்கை தத்தளித்தபோது சீனா மற்றும் இந்தியாவின் அணுகுமுறைகள் எதிர்மறையானதாகவே காணப்பட்டது.
நெருக்கடியின் ஆரம்ப காலகட்டத்தில் எவ்விதமான ஒத்துழைப்புகளையும் வழங்காமல், கொழும்பின் உதவிக்கான அழைப்புகளை தனது நீண்டகால இலக்கான இலங்கையுடனான சுதந்திர பொருளாதார ஒப்பந்தம் குறித்த பேச்சுக்களை ஆரம்பித்தது.
இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்துமே வெளியுலகுக்கு தெரியாமல் திரைக்குப் பின்னால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களாகும். ஏனெனில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், சீனாவின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்ற நிலைப்பாட்டிலேயே கொழும்பு இருந்தது.
இந்த பின்னணியில் தான் ஒரு கட்டத்தில் சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
ஆனால், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நாள் முதல் இந்தியா பல்வேறு வழிகளில் ஒத்துழைப்புகளை வழங்கி வந்தது. அத்தியாவசிய மருந்து, எரிபொருள், உணவு என முக்கிய பல ஒத்துழைப்புகளை அவசர உதவிகளாக வழங்கி வந்தது.
சர்வதேச அரங்கிலும் இலங்கைக்கு அவசர உதவிகள் கிடைக்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புகளுக்கும் பரிந்துரை செய்தது.
இந்திய ஒத்துழைப்புகளை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் நேரடியாகவே தலையீடுகளை செய்து, இலங்கைக்கு தேவையான அவசர உதவிகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.
குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புகள் இலங்கைக்கு கிடைப்பதற்கு தேவையான ஆதரவை தொடர்ந்தும் வலியுறுத்தின.
இலங்கை குறித்து இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட மேற்கை பிரதிநிதித்துவம் செய்யும் நாடுகளின் அணுகுமுறைகளினால் ஒரு கட்டத்தில் சீனாவின் கடன் உத்தரவாதமின்றி சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எவ்வாறு இலங்கைக்கு பெற்றுக்கொள்ள முடியும், அதற்கான வாய்ப்புகளை கூட கொழும்பை தளமாக கொண்ட இராஜதந்திர மையங்கள் ஆராய்ந்து வந்தன.
சீனாவின் கடன் மறுசீரமைப்பு உத்தரவாதம் தாமதமானபோது இலங்கை அரசாங்கம் கூட சீனாவின் ஆதரவின்றி சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது எவ்வாறு என தீவிரமாக கவனத்தில் எடுத்திருந்தது.
இலங்கை விடயத்தில் சீனாவின் இழுத்தடிப்பும் இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஒரே கோட்டிலிருந்து ஒத்துழைப்புகளை வழங்கியதும் பிராந்திய பொருளாதார மேலாதிக்க இராஜதந்திர போரின் மற்றுமொரு திருப்புமுனையாகியது.
இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்குள் குவாட் என்றொரு குடையின் கீழ் செயற்படும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் சீனாவின் நகர்வுகளை தடுக்கும் வகையில் செயற்படுகின்றன.
இதில் அவுஸ்திரேலியாவை தவிர ஏனைய மூன்று நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயங்களிலும் பொருளாதார மீட்சிகளிலும் நேரடியாகவே ஒத்துழைப்புகளை வழங்கி சீனாவுக்கு எதிர்த்திசையில் இருந்து செயற்பட்டன.
கொவிட் தொற்றின் பின்னர் சீனா மேற்குலகத்தின் நம்பிக்கையை பெரிதும் இழந்துவிட்டுள்ளது. மறுபுறம் உலகளாவிய தொற்றின்போது இந்தியாவின் ஏனைய நாடுகளுக்கான ஒத்துழைப்புகளால் இந்தியா மீது உலக நாடுகள் பலவற்றின் நம்பிக்கைக்குரிய பார்வை திரும்பியது.
இதனால்தான் சீனாவில் நிலைகொண்டிருந்த பல மேற்குலகை சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி நகர்த்தப்பட்டன.
இன்றும் இந்த நிலைமையே காணப்படுகிறது. இதே நிலைமையை இலங்கையிலும் பெய்ஜிங்கை சார்ந்துள்ள பிராந்திய நாடுகளிலும் உருவாக்கி, சீனாவை வலுவிழக்கச் செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட மென்மையான இராஜதந்திர நகர்வாகவும் அமைகிறது.
இந்த வல்லரசுகளுக்கு இடையிலான இராஜதந்திர போரை தனக்கு சாதமாக்கிய சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வெற்றிகொண்டுள்ளது.