இயக்குநர் ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதினை வென்றது.

95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த வருடம், மூன்று விருதுகளின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. சிறந்த ஆவணப்படம் பிரிவில் சௌனக் சென் இயக்கிய ‘All that Breathes’, சிறந்த ஆவணக்குறும்படம் பிரிவில் கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கிய ‘The Elephant Whisperers’ மற்றும் சிறந்த பாடல் பிரிவில் கீரவாணி இசையில் ‘RRR’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

Dancers perform “Naatu Naatu” from “RRR.” (Kevin Winter/Getty Images)

Oscars 2023: மேடையில் அரங்கேறிய ‘நாட்டு நாட்டு’ பாடல்

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்த ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினை வெல்லும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இப்பாடலுக்கு கீரவாணி (மரகதமணி) இசையமைத்திருந்தார்.

 

உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸிக்கியின் பிரமாண்ட மாளிகையில் எடுக்கப்பட்ட இப்பாடல் ஏற்கெனவே ‘கோல்டன் குளோப்’ மற்றும் 6வது ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் (Hollywood Critics Association) விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடலுக்கான விருதுகளை வென்று பாரட்டுகளைக் குவித்து வந்தது.

இதையடுத்து இந்த ஆண்டின் 95வது ஆஸ்கர் விழாவிலும் இப்பாடல் விருதினை வெல்லும் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

முன்னதாக, ‘நாட்டு நாட்டு’ பாடல் குறித்த ஒரு சிறிய அறிமுகத்தை நடிகை தீபிகா படுகோன் வழங்கினார்.

அனைவரின் கரகோஷத்துடனும் ஆராவாரத்துடனும் மேடையில் அந்தப் பாடல் அரங்கேறியது. பாடகர்கள் மற்றும் பல்வேறு நடனக்கலைஞர்கள் உற்சாகத்துடன் அதை மேடையில் அரங்கேற்றினர்.

இதைத் தொடர்ந்து எதிர்பார்த்தது போலவே சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினைத் தட்டிச் சென்றது `நாட்டு நாட்டு’ பாடல். இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

விழா மேடையில் இசையமைப்பாளர் கீரவாணி பேசுகையில், “‘தி கார்பெண்டர்ஸ்’ (அமெரிக்க இசைக்குழு) பாடல்களைக் கேட்டுத்த்தான் நான் வளர்ந்தேன். இன்று ஆஸ்கர் மேடையில் இருக்கிறேன்” என்றவர் அந்த இசைக்குழுவின் ‘Top of the World’ என்ற பாடலைப் பாடினார்.

தொடர்ந்து பேசியவர், “எனக்கு என மனதில் ஒரேயொரு ஆசைதான் இருந்தது. ராஜமௌலிக்கும் அதுவே இருந்தது, என் குடும்பத்துக்கும் அதுவே இருந்தது.

‘RRR’ படம் வெல்லவேண்டும், இந்தியர்களின் பெருமையான படைப்பு இது. இந்த வெற்றி என்னை இந்த உலகின் உச்சியில் (‘Top of the World’) நிறுத்தும்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.


ஆஸ்கர் வென்ற ‘RRR’ நாட்டு நாட்டு பாடல்

இந்தியா சார்பில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படாத ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை ஆஸ்கரில் பங்கேற்கச் செய்ய இயக்குநர் ராஜமெளலி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவந்தார். உலகம் முழுவதும் பல முக்கிய இயக்குநர்கள் மற்றும் திரையுலகினருக்கு இப்படத்தைத் திரையிட்டுக் காண்பித்து வந்தார்.

அந்த முயற்சிகளின் பலனாக இன்று ஆஸ்கர் விருதினை வென்றது ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்.

இந்தியாவிலிருந்து `All that Breathes’, `The Elephant Whisperers’, `RRR’ படத்தின் `நாட்டு நாட்டு’ பாடல் ஆகியவை ஆஸ்கார் பரிந்துரையில் இடம்பெற்றிருந்தன.

இதில் `The Elephant Whisperers’ மற்றும் `RRR’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இந்தியாவுக்காக ஆஸ்கர் விருதுகளை வென்று பெருமை சேர்த்துள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version