ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய யுவதிகளின் பாதுகாப்பு குறித்து கரிசனைகள் எழுந்துள்ளன. ஹிஜாப் அணியாமலும் இப்பெண்கள் காணப்பட்டனர்.

தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதியான எக்பதானில், உயர்ந்த கட்டடங்கள் அருகிலிருந்து யுவதிகள் ஐவர் நடனமாடியுள்ளனர். இவர்கள் நடனமாடும் காட்சி அடங்கிய வீடியோ டெலிகிராம் மற்றும் டுவிட்டரில் வெளியாகின. நைஜீரிய பாடகர் ரேமாவின் ‘காம் டவ்ன்’ எனும் பாடலுக்கு இவர்கள் நடனமாடினர்.

சர்வதேச மகளிர் தினமான கடந்த 8 ஆம் திகதி இந்த வீடியோ டிக்டொக் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.

ஈரானில் பெண்கள் பகிரங்கமாக நடனமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. தலையை மறைக்கும் ஹஜாப் ஆடை அணியாமல் பொது இடங்களில் காணப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பெண்களை அறிவீர்களா என, பிரதேசவாசிகளிடம் ஈரானிய அதிகாரிகள் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் இப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மேற்படி நடன வீடியே தொடர்பில் கவலை தெரிவித்து வாக்குமூலம் அளிக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் செயற்பாட்டாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளனர்.

மேற்படி வீடியோ வெளியான பின்னர் தலையை மறைக்கும் வகையில் ஆடையணிந்த பெண்கள் ஒவ்வொருவராக வந்து மன்னிப்பு கோரும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. முதல் வீடியோ பதிவு செய்யப்பட்ட இடத்தில் இந்த வீடியோவும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், 2 ஆவது வீடியோவையோ அது பதிவுசெய்யப்பட்ட சூழ்நிலையையோ உறுதிப்படுத்த முடியவில்லை என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

மேற்படி பெண்கள் விடுவிக்கப்பட்டனரா என்பது குறித்தும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

தெஹ்ரான் நகரில், ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி எனும் 22 வயதான யுவதி கடந்த செப்டெம்பர் மாதம் பொலிஸ் காவலில் உயிரிழந்ததையடுத்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின. ஆர்ப்பாட்டங்களின்போது இடம்பெற்ற மோதல்களில் பாதுகாப்புப் படையினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply

Exit mobile version