இது ஆச்சரியம் தான்! ஆனால் உண்மை. நாடு சாதாரண நிலையில் இருந்த கடந்த பல தசாப்தங்களாக, ஐக்கிய அமெரிக்க டொலரோடு ஒப்பீட்டளவில் இலங்கையின் ரூபாயின் பெறுமதி குறைந்த வண்ணமே இருந்தது.

ஆனால், இலங்கை வங்குரோத்து அடைந்ததாக நாட்டின் தலைவர்களே அறிவித்ததன் பின்னர், ரூபாயின் பெறுமதி கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக அதிகரித்தது.

இப்போது ஆளும் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியினதும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், நாடு முன்னேறி வருவதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். இதைப் பார்த்து, உலகில் ஏனைய நாடுகளும் தாம் வங்குரோத்து அடைந்ததாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்களோ தெரியாது.

ரூபாயின் பெறுமதி அதிகரித்ததோடு, ஆளும் கட்சிகளின் அரசியல் தலைவிதியும் மாறுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அண்மைக்கால கருத்து கணிப்புகளின்படி, அவற்றின் நிலை எவருமே எதிர்ப்பார்க்காத அளவில் படு மோசமாகவே இருந்தது.

சில கருத்துக் கணிப்புகளின்படி, ஜே.வி.பியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பிரதான எதிர்க்கட்சியாகக் கருதப்படும் ஐக்கிய மக்கள் சக்தியும் கூட்டாக 60 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெற்றிருந்தன.

அவற்றிலும் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தியைப் பார்க்கிலும் அதிக வாக்குகளை பெற்றிருந்தது.

அந்தக் கருத்துக் கணிப்புகளின் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஒன்பது சதவீத வாக்குகளையும் மஹிந்த ராஜபக்‌ஷவை தலைவராகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எட்டு சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தன.

இரண்டு ஆளும் கட்சிகளும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திப் போட, இதுவே உண்மையான காரணமாகும். விந்தை என்னவென்றால், நாடே இதை அறிந்திருக்கிறது என்பது அவர்களுக்கும் தெரியும்.

ரூபாயின் பெறுமதி சற்று உயர்ந்து, சில உணவுப் பொருட்களின் விலையும் குறையவே, இரண்டு ஆளும் கட்சிகளினது ஆதரவாளர்களும் தாம் இதுவரை பதுங்கி இருந்த குகைகளில் இருந்து தலையை சற்று வெளியே காட்டி, வீராப்புப் பேசவும் முன்வந்துள்ளனர். ‘முகநூல்’ போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்களது குறிப்புகளைப் பார்த்தால், அது தெளிவாக விளங்குகிறது.

நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, அபிவிருத்திப் பாதையில் நடைபோடுவதைப் போல்தான், அவர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
உண்மையிலேயே அது தான் நிலைமை என்றால், அரசியலை மறந்து மக்கள் அதனை வரவேற்க வேண்டும்.

அந்த நிலைக்கு நாட்டை உயர்த்தியதற்காக ஆளும் கட்சிகளின் தலைவர்களைப் பாராட்ட வேண்டும். ஆயினும் உண்மை அதுவல்ல!

அவர்களது மகிழ்ச்சி, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து வரும் செய்திகளால் மேலும் இரட்டிப்பாகி இருக்கலாம்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புப் பணிக்காக உதவவும் இலங்கைக்கு நாலாண்டுகளுக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் வழங்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி இணக்கம் தெரிவித்தனர்.

கடன் மறுசீரமைப்பு என்றால், வழங்கிய கடனில் ஒரு பகுதியை அல்லது அதன் வட்டியிலிருந்து ஒரு பகுதியை அல்லது அவ்விரண்டையும் கழித்துவிடுவதாகவும் இருக்கலாம்; கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை ஒத்திப் போடுவதாகவும் இருக்கலாம்.

ஆயினும், இலங்கை பெற்ற கடன்களை மறுசீரமைக்க, கடன் வழங்கிய நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மட்டுமே, நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை இந்த இணக்கத்தை உறுதி செய்யும் என்றும் நிதியத்தின் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி, கடந்த பெப்ரவரி இறுதியில், சீனாவைத் தவிர இலங்கைக்கு கடன் வழங்கிய சகல நாடுகளும், அக் கடன்களை மறுசீரமைக்க இணக்கம் தெரிவித்தன. சீனாவும் இறுதியில் வளைந்து கொடுக்கும் போல் தான் இருந்தது.

கடந்த ஆறாம் திகதி, சீனாவும் திருப்திகரமான செய்தியொன்றை அனுப்பியது. அதன் படி, இலங்கைக்கு வழங்கும் உதவியை உறுதிப்படுத்துவதை, நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை எதிர்வரும் 20ஆம் திகதி ஆராயும் என அந்நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா கடந்த ஏழாம் திகதி தெரிவித்தார்.

அதன்படி, இம்மாதம் அல்லது அடுத்த மாதம் நிதியத்தின் முதல் கட்ட உதவித் தொகை வந்தடையும் என அரச தலைவர்கள் கருதுகின்றனர். எனவே, ‘எல்லாம் சரியாகிவிட்டது’ என்ற மனப்பான்மையில் ஆளும் கட்சியினர் இருக்கின்றனர்.

இலங்கை அரசாங்கத்தின் செலவுகளையும் கடன் பொறுப்புகளையும் கருத்தில் கொள்ளும் போது, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கவிருக்கும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகை, நாட்டை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க போதிய தொகையல்ல.

அத்தோகை நான்கு வருடங்களுக்குள் படிப்படியாகவே கிடைக்கும். அதன் இவ்வருட தவணைத் தொகை, சுமார் 360 மில்லியன் டொலர் எனக் கூறப்படுகிறது.

கடந்த வருடம் இந்தியா வழங்கிய கடன் தொகை மட்டும் மூன்று பில்லியன் டொலருக்கும் மேலாகும்.

இலங்கை இது வரை பெற்ற கடனுக்காக, வருடமொன்றுக்கு 6-7 பில்லியன் டொலரை திருப்பிச் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஏழாம் திகதி பாராளுமன்றத்தில் கூறினார்.

வருடமொன்றுக்கு இலங்கை, சுமார் ஆறு பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெயை இறக்குமதி செய்கிறது.

நான்கு பில்லியன் டொலர் பெறுமதியான உரத்தை இறக்குமதி செய்கிறது. நாணய நிதியத்தின் உதவித் தொகை எவ்வளவு சிறியது என்பது, அதன் மூலம் தெரிகிறது.

நாணய நிதியத்தின் உண்மையான உதவி, இந்நிதித் தொகை அல்ல. பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு, வங்குரோத்து நிலையை அடைந்த இலங்கைக்கு, அதன் உத்தரவாதத்தில் மேலும் கடன் வழங்கவும் வழங்கிய கடன்களை மறுசீரமைக்கவும் வெளிநாடுகள் முன்வருவதே உண்மையான உதவியாகும்.

அரசாங்கத்தின் தலைவர்களிடம் சரியான திட்டம் இருந்தால், அதன் மூலம் நாட்டை பொருளாதார ரீதியில் வளம்பெறச் செய்ய முடியும்.

ரூபாயின் பெறுமதி அதிகரிப்பானது, ஆளும் கட்சியினர் கூறுவதைப் போல் நாடு, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான அறிகுறியோ அல்லது எதிர்க்கட்சியினர் கூறுவதைப் போல், அரசாங்கத்தின் கண்கட்டு வித்தையோ அல்ல. அது, பொருளாதார நெருக்கடியின் காரணமாக, மத்திய வங்கி எடுத்த சில தற்காலிக நடவடிக்கைகளின் பெறுபேறாகும்.

உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை, ரூபாயின் பெறுமதி முதன் முதலாக எப்போது உயர ஆரம்பித்து என்பதைக் கவனித்தால் விளங்கும். அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம், இலங்கையில் மூன்று வர்த்தக வங்கிகளுக்கு 400 மில்லியன் டொலர் வழங்குவதாக, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அறிவித்தது. அதற்கு மறுநாளே ரூபாயின் பெறுமதி உயர ஆரம்பித்தது.

இலங்கையின் நிதிச் சந்தையில் புழக்கத்தில் உள்ள டொலர் தொகை அதிகரிப்பதற்கு, அண்மையில் வேறு சில காரணிகளும் ஏதுவாயின. தொடர்ச்சியாக பின்பற்றப்பட்ட இறக்குமதி கட்டுப்பாட்டால், டொலர் வெளியேற்றம் வெகுவாகக் குறைந்தது.

அத்தோடு அண்மைக்காலமாக உல்லாச பிரயாணத்துறை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மூலம் கூடுதலான வெளிநாட்டு செலாவணி இலங்கைக்கு கிடைத்தது.

ஏற்றுமதியாளர்கள் வர்த்தக வங்கிகளுக்கு விற்கும் வெளிநாட்டு பணத்தில், 25 சதவீதத்தை அவ்வங்கிகள் மத்திய வங்கிக்கு விற்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு இருந்தது.

அதனை கடந்த மாதம் மத்திய வங்கி 15 சதவீதமாக குறைத்தது. அதன் மூலம் சந்தையில் புழங்கும் டொலர் தொகை மேலும் அதிகரித்தது.

விரைவில் சர்வதேச நாணய நிதியத்திடம் 2.9 பில்லியன் டொலர், நாட்டுக்குள் வந்து சேர்ந்து, அதன் மூலம் டொலரின் பெறுமதி குறையும் என்ற அச்சத்தால், பல வர்த்தகர்கள் கையிருப்பில் இருந்த வெளிநாட்டுப் பணத்தை விற்க ஆரம்பித்திருந்தனர் என வங்கித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தான், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்திடம் இருந்தும் 400 மில்லியன் டொலர் சந்தைக்கு வரப்போகிறது என்ற செய்தி கடந்த 28ஆம் திகதி வந்தது. உடனே, மறுநாள் டொலருக்கான கிராக்கி குறைந்து, ரூபாயின் பெறுமதி உயர்ந்தது.

ஆனால், இது இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டு, பல கைத்தொழில்கள் செயலிழந்து, பொருளாதாரம் முடக்கப்ட்ட நிலையில், ஏற்பட்ட ஒரு நிலைமையேயன்றி சாதாரண நிலைமையின் கீழ் இடம்பெற்ற ஒரு மாற்றம் அல்ல.

இலங்கைக்கான தமது உதவித் திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் அங்கிகரித்தவுடன், இலங்கை உலக வங்கியிடமும் ஆசிய அபிவிருத்திய வங்கியிடமும் ஜப்பானிடமும் மேலும் 3 பில்லியன் டொலரும் இந்தியாவிடம் 1 பில்லியன் டொலரும் கடனாக பெறுவதற்கு திட்டமிட்டு இருக்கிறது. அதனால் ரூபாயின் பெறுமதி மேலும் குறையலாம்.

எனினும், இவை அனைத்தும் எதிர்காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களாகும். எனவே, இக்கடன்களை பாவித்து, பொருளாதார அபிவிருத்தித் திட்டமொன்றை அமலாக்காவிட்டால் எதிர்காலத்தில் தற்போதைய பொருளாதார நெருக்கடியைப் பார்க்கிலும் மோசமான நெருக்கடிகளை சந்திக்க நேரும். அவ்வாறான திட்டம் எதுவும் இருப்பாக தெரியவில்லை.

எம்.எஸ்.எம். ஐயூப்

Share.
Leave A Reply

Exit mobile version