சீன பெட்ரோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனத்தின் (சினோபெக்) உயர்மட்ட அதிகாரிகள் குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உத்தேச எரிபொருள் திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.
இந்த கலந்துரையாடலின்போது இலங்கையில் எரிபொருள் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதுடன், அதனை மையப்படுத்திய திட்ட வரைபினையும் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
பெய்ஜிங்கின் இந்த கோரிக்கை குறித்த இலங்கையின் நகர்வுகளை டெல்லி கூர்மையாக அவதானிக்க தொடங்கியுள்ளது.
இலங்கையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ள சீனாவின் அடுத்த முக்கிய இரு எதிர்பார்ப்புகள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பனவாகும்.
இந்த இரண்டு விடயங்கள் குறித்து மிக நீண்ட காலமாக அரச தரப்புகளுடன் சீனா பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கியதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பன குறித்த பேச்சுவார்த்தைகளை சீனா உடனடியாக மீள ஆரம்பித்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே சீன பெட்ரோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கையில் எரிபொருள் விநியோக கட்டமைப்பை உருவாக்குவதற்கான திட்ட வரைபுடன் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கையின் தேவைக்கமைய எரிபொருள் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு சினோபெக் நிறுவனம் இதன்போது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் பிரதான வலுசக்தி மையத்தை சுத்திகரிப்பு நிலையத்துடன் நிர்மாணிப்பதாகவும், அதற்கு தேவையான முழு முதலீட்டை வழங்குவதாகவும் கலந்துரையாடலின்போது ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தற்போது இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் 90 வீதம் அரசாங்கத்துக்கு சொந்தமான இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும் எஞ்சிய 10 வீதமானது லங்கா ஐ.ஓ.சி மூலமாகவும் வழங்கப்படுகிறது.
சீனாவின் சினோபெக் நிறுவனம் ஏற்கனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் செயற்பட்டு வருகிறது.
இதனை விஸ்தரித்து ஹம்பாந்தோட்டையை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதே சீன திட்டத்தின் நோக்கமாகியுள்ளது.
ஆனால், அரசாங்கம் இதுவரையில் ஒப்புதல் வழங்கவில்லை. இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மட்டத்திலேயே சினோபெக் திட்டம் உள்ளது.
இருப்பினும், ஏற்கனவே இலங்கையில் எரிபொருள் விநியோக திட்டங்களை முன்னெடுத்துள்ள இந்தியாவுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் சீனாவும் அதே திட்டத்தை முன்னெடுக்க பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
எனவேதான், பெய்ஜிங்கின் இந்த முன்னெடுப்புகளை டெல்லி கூர்மையாக அவதானிக்க தொடங்கியுள்ளது.
ஏனெனில், இலங்கையில் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்திய எரிபொருள் நிறுவனத்தின் கட்டமைப்பினை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் டெல்லி திட்டமிட்டு, அதனை செயல் வடிவமாக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் மேலும் 100 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிக்கவுள்ளது.
ஏற்கனவே 211 இந்திய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இலங்கையில் செயற்படுகின்றன. இதற்கமைய திருகோணமலை எண்ணெய் குதங்களின் கட்டமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகளுக்கமைய, இலங்கையில் இந்திய எரிபொருள் விநியோக கட்டமைப்பை விஸ்தரிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து காணப்படும் 99 எண்ணெய்க் குதங்களையும் 827 ஏக்கர் காணியையும் இரு தரப்பு கூட்டுத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னரான 2003இல் கையெழுத்திடப்பட்ட சர்ச்சைக்குரிய 99 திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பான ஒப்பந்தத்தை இலங்கை 2022ஆம் ஆண்டு புதுப்பித்துக்கொண்டது.
புதிய ஒப்பந்தத்தின் மூலம் 99 எண்ணெய் தாங்கிகளில் 85, இலங்கையின் கட்டுப்பாட்டில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருப்பதோடு, இந்தியாவுடனான கூட்டு முயற்சியில் இலங்கை 51 வீத பங்குகளையும் கொண்டிருக்கும்.
இலங்கை, இந்திய பொருளாதார மற்றும் எரிசக்தி பங்காளித்துவத்தில் இது ஒரு மைல்கல் என்று இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் டெல்லி குறிப்பிட்டிருந்தது.
எனினும், சர்ச்சைக்குரிய இந்த திருகோணமலை எண்ணெய் தாங்கிகளின் பிரச்சினையின் வரலாறானது, 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் கூட்டாக எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த 99 எண்ணெய் தாங்கிகளில் ஒவ்வொன்றும் 12,000 மெட்ரிக் தொன் கொள்ளளவை கொண்டுள்ளன. ஆனால், இங்கு பொருளாதாரத்தை விட மூலோபாயமே முக்கியமாகிறது.
எனவேதான், இந்தியாவுக்கு விரோதமான நாடுகளின் வசம் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் சென்றுவிடக்கூடாது என்பதில் இந்தியா எப்போதும் எச்சரிக்கையாக இருந்தது.
இந்த பாதுகாப்பு கரிசனைகளுக்கமைய, இலங்கை – இந்திய கூட்டு முயற்சியால் மாத்திரமே திருமலை எண்ணெய் தாங்கிகளை மேம்படுத்த வேண்டும் என்று டெல்லி விரும்பியது.
ஆனால், கூட்டு முயற்சியால் திருமலை எண்ணெய் தாங்கிகளை மேம்படுத்த வேண்டும் என்ற திட்டம் 2003ஆம் ஆண்டிலேயே சாத்தியப்பட்டது.
அப்போதைய ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் 99 தொட்டிகளை 35 வருட குத்தகைக்கு இந்தியாவிடம் ஒப்படைத்தது. அதன் பின்னர் ஒரு தாங்கிக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற ரீதியில் செலவிட்டு 14 எண்ணெய் தாங்கிகளை புதுப்பித்து பயன்படுத்தி வருகிறது.
குத்தகைத் தொகையாக ஆண்டுக்கு 100,000 அமெரிக்க டொலர்களை இந்திய நிறுவனம் வழங்கி வருகிறது.
அதேபோன்று எண்ணெய் தாங்கிகளை மையப்படுத்தி இந்தியா கொண்டுள்ள பாதுகாப்புக் கரிசனையை கருத்தில் கொண்டு, இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்க மாட்டோம் என்ற எழுத்து மூலமான உத்தரவாதத்தை இலங்கை அளித்துள்ளது.
இதனால், இந்தியா, தனக்கு ஆபத்து என கருதும் எந்தவொரு நாட்டையும் திருகோணமலை உட்பட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் பக்கம் திரும்ப அனுமதிக்கவில்லை.
குறிப்பாக, இந்தியாவின் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பெரும் நெருக்கடிகளை கொடுத்து வரும் சீனா, இலங்கை ஊடாக அச்சுறுத்தலாகிவிடக்கூடாது என்பதில் டெல்லி உறுதியாக இருந்தது.
ஆனால், உள்நாட்டுப் போரின் பின்னர் ஏற்பட்ட புவிசார் மாற்றங்கள் காரணமாக இலங்கையில் சீனாவின் வேரூண்டல் தீவிரமடைந்தது.
இன்று இந்தியாவை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் விஸ்தரித்துவிட்டது. திருகோணமலையிலிருந்து கணிக்கப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஹம்பாந்தோட்டை ஊடாக ஏற்படும் என்பதில் இந்தியாவின் கணிப்பு தவறாகியுள்ளது. எனவே, ஹம்பாந்தோட்டையில் சீனா பிரதான வலுசக்தி மையத்தை நிர்மாணித்தால், அதன் சூடு டெல்லியை தாக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை.
(லியோ நிரோஷ தர்ஷன்)