எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) தான் கைது செய்யப்படக்கூடும் என தான் எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்துமாறும் தனது ஆதரவாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆபாசப்பட நடிகை ஒருவருடன் ட்ரம்ப் பாலியல் உறவு கொண்டதாக கூறப்படுவது தொடர்பில், அந்நடிகையை மௌனம் காக்கச் செய்வதற்காக, 2016 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்

ட்ரம்ப் பணம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு விசாரணை தொடர்பிலேயே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தான் ஸ்தாபித்த ட்ரூத் சோஷல் எனும் சமூக வலைத்தளத்தில் நேற்று காலை குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், மன்ஹட்டன் சட்ட மா அதிபர் அலுவலகத்திலிருந்து கசிந்த தகவலின்படி, ‘குடியரசுக் கட்சியின் முன்னிலை வேட்பாளரும், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமானவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படுவார். ஆர்ப்பாட்டம் நடத்துங்கள், எமது தேசத்தை மீளக் கொண்டுவாருங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டோர்மி டேனியல்ஸ் என அறியப்பட்ட ஸ்டெபானி கிளிபர்ட் எனும் மேற்படி நடிகை ,2016 ஆம் ஆண்டின் தேர்தலுக்கு முன்னர் தனக்கு 130,000 டொலர்கள் வழங்கப்பட்டதாக கூறுகிறார். இது தொடர்பாக மன்ஹெட்டன் மாவட்ட அதிகாரிகள் 5 வருடங்களாக விசாரணை நடத்துகின்றனர்.

அப்பெண்ணுடன் தான் பாலியல் உறவு கொள்ளவில்லை என ட்ரம்ப் கூறி வருகிறார்.

இது தொடர்பில் ஜூரிகள் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்குமாறு ட்ரம்புக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர் என ட்ரம்பின் சட்டத்தரணி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version