Site icon ilakkiyainfo

புலஸ்தினிக்கு உதவிய பொலிஸ் அதிகாரிக்கு பிணை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் (ஸாரா ஜஸ்மின்) என்பவரை இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு மூன்று வருடங்களாக சிறையில் இருந்த தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என். எம். எம். அப்துல்லாஹ் பிணையில் விடுவித்தார்.

தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப்பிணைகளிலும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையும் வழங்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு பயணத்தடையும் சாட்சியாளர்களை அச்சுறுத்தக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

நாகூர்த்தம்பி அபூபக்கர் என்ற குறித்த பொறுப்பதிகாரி, புலஸ்தினி மகேந்திரன் தொடர்பான தகவலைத் தெரிந்தும் அதனை மறைத்தமை தொடர்பிலும் தனது வாகனத்தில் ஏற்றி அவரை நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டிருந்தார்.

2020ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் தடுப்புக்காவில் வைக்கப்பட்டு 2021 ஏப்ரல் 8ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார்.

தான் செய்யாத குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை தனது அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக தெரிவித்து 2021 ஜூன் மாதம் 29ஆம் திகதி தனது சட்டத்தரணியான ஏ. எல். ஆஸாதினூடாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கொன்றை பொலிஸ் பொறுப்பதிகாரி தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் சுமார் 32 மாதங்களாக தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதபதி என். எம். எம். அப்துல்லாஹ்வினால் திங்கட்கிழமை (20) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அரச சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஸக்கி இஸ்மாயில் குறிப்பட்ட நபருக்கு பிணை வழங்கப்படுவதற்கு எதிராக தனது கடுமையான ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

அபூபக்கர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி என். எம். ஷஹீட், சட்டத்தரணிகளான ஏ.எல்.ஆஸாத், சலாஹுதீன் சப்ரின் மற்றும் பாத்திமா பஸீலா ஆகியோர் செய்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி பிணை வழங்கியதுடன், ஜூன் 07ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவமாக கல்முனை – சாய்ந்த மருது பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புக்கள் குறித்த விசாரணைகளில் பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்தமை தொடர்பில் அம்பாறை பொலிஸ் உப கராஜின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட அபூபக்கர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

Exit mobile version