புதுச்சேரியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் செந்தில்குமரன் வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

புதுச்சேரி மாநிலம் மங்கலம் தொகுதியின் பாஜக பொறுப்பாளராக இருந்தவர் 45 வயதாகும் செந்தில்குமரன்.

இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கட்சிப் பணிகள் தவிர, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களைச் செய்து வரும் இவர், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர்.

இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வில்லியனூரில் உள்ள கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள தனது நண்பரின் பேக்கரியுடன் கூடிய தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 6-7 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு இரண்டை வீசியது. அதில் நிலைகுலைந்த செந்தில்குமரனை தங்களிடமிருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடனடியாக அங்கு திரண்ட 100க்கும் மேற்பட்ட செந்தில்குமரனின் ஆதரவாளர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமெனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்து பார்வையிட்ட நமச்சிவாயம் செந்தில்குமரனின் உடலைப் பார்த்து அழுதார்.

 

அதற்குப் பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் செந்தில் குமரனை முன்விரோதம் காரணமாக வில்லியனூரைச் சேர்ந்த ரவுடி நித்தியானந்தம் தனது ஆதரவாளர்களை மூன்று இருசக்கர வாகனங்களில் அனுப்பி கொலை செய்ததாக சந்தேகிக்கின்றனர்.

அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, செந்தில்குமரன் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன. குற்றவாளிகளைக் கைதுசெய்ய ஏ.டி.ஜி.பி. ஆனந்தகுமார் தலைமையில் இரண்டு தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், செந்தில்குமரன் கொலை தொடர்பாக ஏழு பேர் திருச்சி நீதிமன்றம் எண் 3இல், நீதிபதி பாலாஜி முன்பாக சரணடைந்தனர்.

நித்தியானந்தம் முதல் குற்றவாளியாகவும் சிவசங்கர், ராஜா, வெங்கடேஷ், பிரதாப், கார்த்திகேயன், விக்னேஷ் ஆகியோர் கூட்டாளிகளாகவும் சரணடைந்துள்ளனர்.

இந்தக் கொலையில் சரணைடந்துள்ள நித்யானந்தம், கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த இளைஞர் ஒருவரின் கொலை வழக்கில் தற்போது வரை தேடப்பட்டுவந்தார்.

கொல்லப்பட்ட செந்தில்குமரன், நமச்சிவாயம் காங்கிரசில் இருந்தபோது, அவரும் காங்கிரசில் இருந்தார். நமச்சிவாயம் பா.ஜ.கவுக்கு வந்த சில நாட்களுக்குப் பின் இவரும் பா.ஜ.கவில் இணைந்தார்.

செந்தில் குமரன் – நித்யானந்தம் மோதலின் பின்னணி

தற்போது இந்தக் கொலை வழக்கில் சரணடைந்திருக்கும் நித்யானந்தம், முன்பு செந்தில்குமரனுடன் நெருக்கமாகவே இருந்து வந்திருக்கிறார்.

இருவரும் இணைந்தே ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றைச் செய்து வந்துள்ளனர். செந்தில்குமரன் கூறும் வழக்குகளில் நித்யானந்தம் சரணடைவதும் நடந்துள்ளது.

இந்த நிலையில், தான் சில வழக்குகளில் தேவையில்லாமால் சிக்க வைக்கப்படுவதாக உணர்ந்த நித்யானந்தம், பிறகு செந்தில்குமரனிடம் இருந்து பிரிந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

சில கஞ்சா வழக்குகளும் நித்யானந்தம் மீது தொடரப்பட்டிருக்கின்றன. இதில் ஆத்திரமடைந்த நித்யானந்தம் செந்தில்குமரனை கொல்ல முடிவுசெய்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version