ilakkiyainfo

சீன மொழியை தொடர்ந்து இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி பயன்பாடு

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் அரசு பயன்பாட்டு மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றுடன், ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த மூன்று மொழிகளை தவிர வேறு எந்தவொரு மொழியும் இலங்கையின் அரசியலமைப்பில் உள்வாங்கப்படவில்லை.

எனினும், அரசியலமைப்பின் சரத்துக்களுக்கு அப்பாற் சென்று கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் அரச மொழியான தமிழ் மொழி அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடத்திற்கு சீன மொழி உள்வாங்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இலங்கையின் சீன ஆதிக்கம் கடந்த காலங்களில் அதிகளவில் காணப்பட்ட நிலையில், சீன மொழியின் பயன்பாடு இன்றும் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

சீனாவின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற கொழும்பு துறைமுக நகர் திட்டத்திலுள்ள பெயர் பலகைகளில் சிங்களம், ஆங்கிலம், சீன மொழிகள் கடந்த காலங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், தமிழ் மொழி அந்த காலக்கட்டத்தில் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

சென்ட்ரல் பார்க் என கொழும்பு துறைமுக நகரில் காட்சிப்படுத்தப்பட்ட பெயர் பலகையில், முதலில் சிங்களம், இரண்டாவதாக ஆங்கிலம், மூன்றாவதாக சீன மொழி உள்வாங்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த பெயர் பலகையில் எந்தவொரு தமிழ் எழுத்தும் காணப்படவில்லை.

இதையடுத்து, நாட்டில் எழுந்த எதிர்ப்புக்களை அடுத்து, அந்த பெயர் பலகையில் மாற்றங்களை கொண்டு வர சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்ததாக கூறப்பட்டது.

அதேவேளை, இலங்கை சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இலத்திரனியல் நூலகமொன்று 2021ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட குறித்த கட்டடத்தின் நினைவு பலகையில், சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் அரச பயன்பாட்டு மொழிகளாக காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் சட்டத்தை வழிநடத்தும் ஒரு பிரதான இடத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை அந்த காலக் கட்டத்தில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

இதையடுத்து, குறித்த பெயர் பலகையில் தமிழ் மொழி உள்வாங்கப்பட்டிருந்தது.

அதேபோன்று, கொழும்பு, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீனாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களிலும் சீன மொழி இன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

இவ்வாறு சீன மொழியில் பிரவேசம் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது இந்தி மொழியும் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது இந்தி மொழியில் சில தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் காட்சி பலகைகளில் வருகை மற்றும் புறப்பாடு என கூறப்படுகின்ற விடயம் தற்போது இந்தி மொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலம், இந்தி மற்றும் சீன மொழிகளில் முறையே காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

மூத்த பத்திரிகை ஆசிரியரும், அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன், இந்த படங்களை காட்சிப்படுத்தி, பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

”கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இந்தி – சீன மொழிகளிலும் பெயர் பலகைகள் காணப்படுகின்றன. இந்த விமான நிலையத்துக்கு நான் அவ்வப்போது சென்று வருபவன். ஆனால் இந்தப் பெயர் பலகைகளை ஒருபோதும் கண்டதில்லை.

இன்று திங்கட்கிழமை இரவு சென்றபோது சிங்களம், தமிழ் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்திய, சீன மொழிகளில் மின்சாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பெயர் பலகைகளை உற்று நோக்கிய போது என் கண்ணுக்கு இவை தெரிந்தன.

அப்படியிருக்காது எனது கண்ணில்தான் பிழை என்று நினைத்துக் கொண்டு நன்றாக நிமந்து உற்றுப் பார்த்தேன். சந்தேகமே இல்லை—

பொருளாதார நெருக்கடிச் சூழலில்தான் விமான நிலையத்தில் இந்தி, சீன மொழிகளிலும் பெயர்பலகைகள் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கொள்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தைப் பிரதேசங்களில் உள்ள சில வீதிகள், மிகப் பெரிய கட்டட நிர்மாணப் பணிகள் மற்றும் சீன ஹோட்டேல்கள் போன்றவற்றில் உள்ள பெயர் பலகைகள் தனிச் சீன மொழிகளில் மாத்திரம் உள்ளமை ஏற்கனவே தெரிந்த கதை.

அதுவும் அம்பாந்தோட்டையில் தனிச் சீன மொழிதான். ஆனால் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சீன மொழியில் பெயர் பலகைகள் இருக்கவில்லை.

கொழும்பில் இந்தியத் தூதரகத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் இந்தி மொழியில் பெயர் பலகைகள் இருந்ததாக நான் காணவில்லை.

ஆனால் முதன் முறையாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இந்தி, சீன மொழிகளில் பெயர் பலகைகளை இன்று கண்டேன்.

இந்தியாவும் சீனாவும் இலங்கைத்தீவில் ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் பொருளாதார ரீதியில் எப்படிச் செயற்படுகின்றன என்பது பற்றிய விபரங்கள் எனது அரசியல் கட்டுரைகளில் உண்டு.

ஆகவே இந்தப் பெயர் பலகைகள் பற்றி மேலதிக விமர்சனங்கள் தேவையில்லை. சிறு விளக்கம்– எங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதைப் பற்றி அறிந்துகொள்வதுதான் செய்தி.

அது வீடாகவும் இருக்கலாம் நாடாகவும் இருக்கலாம் ஏன் உலகமாகவும் இருக்கலாம். ஆகவே இலங்கைத்தீவின் எதிர்காலம் பற்றி கீழே உள்ள செய்திப் படம் உங்கள் ஒவ்வொருவருக்கும் உணர்த்தியிருக்கும் என்று நம்புகிறேன்.

குறிப்பாகத் தமிழர்களுக்கு. இந்திய ரூபாய்களை இலங்கையில் பயன்படுத்தலாம் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்ததாகச் செய்திகள் வெளியான நாளில் இந்தி மொழி பெயர் பலகை விமான நிலையத்தில் வந்ததா?

அப்படியானால் ஏன் சீன மொழியும் அந்தப் பெயர் பலகைகளில் இணைந்தது? 2009 இற்குப் பின்னரான சூழலில் அதுவும் 2015 இற்குப் பின்னர் இது புரியாத புதிர் அல்ல” என அ.நிக்சன் பேஸ்புக் பதிவொன்றின் ஊடாக பதிவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் உயர் அதிகாரியொருவரை தொடர்புக் கொண்டு வினவியது.

தமக்கு அவ்வாறான தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை என கூறிய அவர், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகளையும் பிபிசி தமிழ் தொடர்புக் கொண்டு வினவியது.

தாமும் இந்த விடயம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை என விமான நிலைய அதிகாரிகள் பதிலளித்தனர்.
இலங்கை போலீஸ் திணைக்களத்திற்கு இந்தி மொழி பயிற்சி

இலங்கை போலீஸ் திணைக்களத்திற்கு 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்தி மொழி பயிற்சி பட்டறையொன்று நடத்தப்பட்டது.

இலங்கை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இந்தி பயிற்சிகள் அப்போது வழங்கப்பட்டிருந்தன.

இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி படிப்பைத் தொடர்வதற்கு வருடா வருடம், இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் ஏராளமான சந்தர்ப்பத்தை வழங்கி வருவதாக இந்திய உயர்ஸ்தானிகராயல அதிகாரிகள் அப்போது தெரிவித்திருந்தனர்.

இலங்கையிலுள்ள சுமார் 10 பல்கலைக்கழகங்கள் மற்றும் 80 அரச பாடசாலைகளில் ஹிந்து மொழி கற்பிக்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியர்கள் என்பதனால், அவர்களுடன் சிறந்த உறவுகளை பேணுவதற்கு இந்தி மொழி கற்பது கட்டாயமானது என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி பிபிசி தமிழுக்கு தெரிவித்திருந்தார்.

ஆங்கிலம் தெரியாத பெரும்பாலான சுற்றுப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தருகின்றமையினால், போலீஸ் திணைக்கள அதிகாரிகளுக்கு ஏனைய மொழிகளை கற்பது கட்டாயமானது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

சீன மொழிகளின் பயன்பாடு இலங்கையில் அதிகரித்துள்ள பின்னணியில், தற்போது இந்தி மொழியின் பயன்பாடும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருவதை காண முடிகின்றது.

விமான நிலைய அதிகாரிகள் பதில்

இந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால், அவர்களின் இலகுவிற்காக இந்தி மொழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமை நேர அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

இலங்கைக்கு வருகை தரும் இந்திய பிரஜைகள் எதிர்நோக்கும் மொழி ரீதியான பிரச்னைகளை தவிர்த்து கொள்ளும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

Exit mobile version