எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 20 பெற்றோலியத்துறை ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமும் இன்றி அத்தியாவசிய சேவை சட்டத்தின் கீழ் உச்சபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

தொழிற்சங்க செயற்பாட்டாளர்களினால் பெற்றோலிய ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமையை கருத்திற் கொண்டு , பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டு பெற்றோலிய தொழிற்சங்கத்தின் கடந்த திங்கட்கிழமை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக 28 ஆம் திகதி செவ்வாய்கிழமை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது.

இந்நிலையிலேயே இன்று (29) புதன்கிழமை மின்சக்தி அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோலிய சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு சில தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதில் தொழிற்சங்க தலைவர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர். 95 சதவீதமான அங்கத்தவர்களின் ஒத்துழைப்பு இவர்களது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு கிடைக்கப் பெறவில்லை.

சேவையிலிருந்து விலகியவர்களும் , ஓய்வு பெற்றவர்களுமே இவ்வாறான அடாவடியான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் எவ்வாறு எரிபொருள் முனையங்களுக்குள் பிரவேசித்தனர் என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 28 ஆம் திகதி செவ்வாய்கிழமை விநியோகிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பெற்றோல் மற்றும் டீசல் தலா 6600 லீற்றரை இவர்களது செயற்பாடுகளால் முழுமையாக விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாகவே வாகனங்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டியேற்பட்டது.

அது மாத்திரமின்றி சேவைக்கு சமூகமளித்த ஏனைய ஊழியர்களுக்கும் இவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அதிகபட்ச ஒழுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட 20 பெற்றோலிய ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதியொருவரும் உள்ளடங்குகின்றார்.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான செயற்பாடுகள் ஈடுபடும் சகலருக்கு எதிராகவும் எவ்வித பாகுபாடும் பாரபட்சமும் இன்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பெற்றோலியம் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அத்தியாவசிய சேவை சட்டத்தை மீறி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது குற்றமாகும்.

எனவே இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் மீண்டும் வரிசைகள் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. எனவே எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்தோடு எதிர்வரும் சில தினங்களுக்குள் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கான கொள்கை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோக சந்தையில் நுழைவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதால் உள்நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் போட்டித்தன்மை அதிகரிக்கும். எனவே எரிபொருளுக்கான கேள்வி குறைவடைவதன் மூலம் மக்களுக்கு பாரிய நிவாணரங்கள் கிடைக்கப்பெறும்.

இலங்கையின் பெற்றோலியத்துறையின் பாதுகாப்பு அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்படும் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version