ilakkiyainfo

ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

 

ஆபாசப்பட நடிகை தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது.

இதற்கான குற்றப்பத்திரிகையில் குறைந்தது ஒரு டஜன் குற்றச்சாட்டுகள் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக ட்ரம்ப் மீது 30க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக “வழக்கு குறித்து நன்கு அறிந்த” இரண்டு நபர்கள் தெரிவித்ததாக அமெரிக்கா செய்தி தொலைக்காட்சியான சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் ட்ரம்ப் மீது இரண்டு டஜனுக்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, மேலும் இரண்டு பெயரை குறிப்பிட விரும்பாத நபர்களை மேற்கோள் காட்டியுள்ளது.

ட்ரம்ப் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் பொதுவெளியில் வெளியாக நிலையில், மன்ஹாட்டன் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆல்வின் பிராக் ட்ரம்ப் மீது என்ன குற்றச்சாட்டுகளை முன்வைக்கவுள்ளார் என்ற விவரம் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுவதால், “தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்று நியூயார்க் காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

விசாரணை எப்போது?

தன் மீதான புகார் குறித்து வெளியில் பேசாமல் இருப்பதற்காக முன்னாள் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸூக்கு ட்ரம்ப் பணம் கொடுத்ததாக, ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும் இந்த பணம் சட்டத்திற்கு புறம்பாக ட்ரம்பின் அதிபர் பிரச்சார கணக்கில் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

வரும் செவ்வாய்க்கிழமை அன்று ட்ரம்ப் மீது விசாரணை நடக்கும் என டிரம்பின் வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார்.

“செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று டிரம்பின் வழக்கறிஞர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறினார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அது குடியரசு கட்சிக்கு பின்னடைவாக அமைபும் என்று பிபிசியின் வாஷிங்டன் செய்தியாளர் காரி குறிப்பிடுகிறார்.

‘நேர்மையாக விசாரணை நடக்காது’

நியூயார்க்கில் இந்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெறாது என ட்ரம்ப் தனது சொந்த சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்க மக்களுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன் என்பதற்காக மட்டுமே என் மீது போலியான ஊழல் மற்றும் தரக்குறைவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

நியூயார்க்கில் நேர்மையான விசாரணை என்னால் நடத்த முடியாது என அவர்களுக்கு தெரியும்” என்று ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

டிரம்பின் ஆதரவாளரும், குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான மாட் கேட்ஸ், ட்ரம்ப் “உறுதியாகவும், தெளிவாகவும்” இருப்பதாக கூறினார்.

ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க அதிபர் பைடன் இதுவரை எந்த பதிலும் அளிக்காத நிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்சி டிவிட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில், “சட்டத்திற்கு மேலே யாரும் இல்லை. நிரபராதி என்பதை நிரூபிக்க அனைவருக்கும் உரிமை உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.

குயின்னிபியாக் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில், 57% பேர், ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் என்று வாக்களித்துள்ளனர்.

ட்ரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது என்று 62% பேர் வாக்களித்து இருக்கின்றனர்.

“செவ்வாயன்று நீதிமன்றத்தின் முன்பு ட்ரம்ப் ஆஜராகவும், சரணடைவது குறித்தும் அவரின் வழக்கறிஞர்களுடன் பேசி வருகிறேன்” என்று அரசு வழக்கறிஞர் ஆல்வின் பிராக் தெரிவித்தார்.

டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக அமெரிக்காவின் சில பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஃப்ளோரிடாவில் கூடிய அவரது ஆதரவாளர்கள், 2024 அதிபர் தேர்தலுக்கான ட்ரம்பின் பரப்புரை கொடியுடன் நெடுஞ்சாலையில் போராடினர்.

ட்ரம்ப் மீது ஏன் விசாரணை?

அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுடன் ட்ரம்ப் தொடர்பில் இருந்தார் என்பது சர்ச்சை.

2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ட்ரம்ப், அந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்.

ஆனால், நடிகையுடனான தனது தொடர்பை மறைக்க தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலமாக ட்ரம்ப் ரூ.1.07 கோடி பணம் கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு. மைக்கேல் கோஹனுக்கு அந்த பணத்தை ட்ரம்ப் எவ்வாறு கொடுத்தார் என்பதும் தற்போது விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறது.

மைக்கேல் கோஹனுக்கு ட்ரம்ப் அளித்த பணம் ‘வழக்கறிஞர் கட்டணம்’ என்று ஆவணங்கள் கூறுகின்றன.

ஆனால், அரசு வழக்கறிஞர்களோ, ட்ரம்ப் தனது பணப்பரிவர்த்தனை ஆவணங்களில் பொய்யாக பதிவு செய்திருப்பதாக வாதிடக் கூடும். நியூயார்க்கைப் பொருத்தவரை இது ஒரு தவறான நடத்தைதான்.

ஆனாலும், தீவிரமான வழக்காக மாற வழிவகுக்கும் வகையில், இது ஒரு குற்றமாக மாற்றப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஸ்டார்மி டேனியல்ஸ் யார்?

2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தயாராகி வந்த டொனால்ட் ட்ரம்ப் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

2006-ம் ஆண்டு ஜூலையில் கோல்ப் காட்சிப் போட்டி ஒன்றில் டிரம்பை அவர் சந்தித்தாக ஊடக நேர்காணல்களில் அவர் கூறினார்.

கலிபோர்னியா – நெவேடா மாகாணங்களுககு இடையே லேக் டாஹோவில் உள்ள தனது ஓட்டல் அறையில் இருவரும் உடலுறவு கொண்டதாக அவர் கூறினார்.

அந்த வேளையில் அவரது குற்றச்சாட்டுகளை டிரம்பின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்தார்.

தனது குற்றச்சாட்டுகள் குறித்து மவுனம் காக்குமாறு ட்ரம்ப் கேட்டுக் கொண்டாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “இதற்காக ட்ரம்ப் வருத்தப்படுவதாக தெரியவில்லை. அவர் கர்வமிக்கவர்” என்று ஸ்டார்மி டேனியல்ஸ் பதிலளித்தார்.

ட்ரம்ப் – ஸ்டார்மி டேனியல்ஸ் பாலுறவு நடந்ததாகக் கூறப்படும் கால கட்டத்தில் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப்-இன் குழந்தையை பெற்றெடுத்திருந்தார்.

இதுதவிர, இந்த குற்றச்சாட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டதாக கடந்த வாரம் போலிப் புகைப்படங்கள் இணையத்தில்

பரவின. அதில் போலீசாரிடம் இருந்து ட்ரம்ப் தப்பிச் செல்வது போலவும், அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து அழைத்து செல்வது போன்ற படங்கள் இணையத்தில் பகிரப்பட்டன.

Exit mobile version