ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி மாஷா அமினி(வயது 22) என்ற இளம்பெண்ணை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஈரான் அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது.
வன்முறையை தூண்டியதாக சிலருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ஈரானில் ஹிஜாப் அணியாமல் கடைக்கு வந்த தாய், மகள் மீது ஒரு நபர் தயிரை ஊற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் இரண்டு பெண்கள் ஹிஜாப் அணியாமல், பேண்ட் மற்றும் சட்டை போன்ற உடைகளை அணிந்தவாறு ஒரு கடைக்குள் நுழைகின்றனர்.
அந்த கடைக்குள் வந்த மற்றொரு நபர், அந்த பெண்களிடம் ‘ஏன் நீங்கள் ஹிஜாப் அணியவில்லை’ என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
அப்போது திடீரென அருகில் இருந்த தயிர் பாக்கெட்டுகளை எடுத்து அந்த பெண்களின் தலைகளில் அடிக்கிறார்.
இதையடுத்து அங்கு நின்றிருந்தவர்கள் சேர்ந்த அந்த நபரை கடைக்கு வெளியே அழைத்துச் செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஈரானின் மாஷத் பகுதியில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.