நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் நேற்று மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
கோவிலுக்கு வந்த நயன்தாராவிடம் பொன்னாடையை கொடுத்த போது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
வாடகை தாய் மூலம் அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. தஞ்சை மாவட்டம் மேல வழுத்தூரில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவில், இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினரின் குலதெய்வம் கோவில் ஆகும்.
குல தெய்வம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் முடிவு செய்தனர்.
அதன்படி நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் நேற்று மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
நயன்தாரா வருவதை அறிந்த உள்ளூர் பிரமுகர்கள் அவருக்கு அணிவிப்பதற்காக பொன்னாடை வாங்கி வைத்து காத்து இருந்தனர்.
கோவிலுக்கு வந்த நயன்தாராவிடம் பொன்னாடையை கொடுத்த போது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.
மேலும் குலதெய்வம் கோவில் சிறியதாக இருந்ததால் கோவிலுக்குள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் போலீசார் மட்டுமே நின்று கொண்டிருந்தனர்.
நயன்தாரா கோவிலில் சாமி கும்பிட்ட போது வெளியில் நின்ற புகைப்பட கலைஞர்கள் உள்ளே வந்து அவரை புகைப்படம் எடுக்க முயன்றனர்.
போட்டோவுக்கு போஸ் கொடுக்குமாறு கூறினார்கள். அப்போது நயன்தாரா கோபம் அடைந் தார். இதைப் பார்த்த விக்னேஷ் சிவன் புகைப்பட கலைஞர்களிடம் சற்று வெளியே காத்திருக்குமாறு கூறினார்.
நயன்தாராவும் புகைப்பட கலைஞர்களிடம், “சாமி கும்பிடத்தான் கோவிலுக்கு வந்திருக்கிறோம்” என்று கூறினார்.
ஏற்கனவே கிராம மக்கள் திரண்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கோவிலுக்குள் சென்றதும் கோவிலின் முன்பக்க கதவு பூட்டப்பட்டது.
நயன்தாராவை காண கோவிலுக்கு வெளியே கிராம மக்கள், ரசிகர்கள், கல்லூரி மாணவிகள் காத்திருந்தனர்.
கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்த நயன்தாரா கிராம மக்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பார்த்து சிரித்தபடி கையசைத்தார்.
அப்போது கிராம மக்கள், மாணவிகள், ரசிகர்கள் அனைவரும் நயன்தாராவை தங்களின் செல்போனில் படம் பிடித்தனர்.
பின்னர் நயன்தாராவுடன் கல்லூரி மாணவிகள் ஒன்றாக நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது ஒரு மாணவி, நயன்தாராவின் தோளில் கை போட்டு செல்பி எடுக்க முயன்றார்.
அவரை நயன்தாரா சத்தம் போட்டார். பின்னர் நயன்தாரா காரில் ஏறி புறப்பட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் நயன்தாராவிடம் செல்பி எடுத்துக் கொண்டனர்.
அதைக் கேட்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அவரை சிரித்தபடியே வழியனுப்பி வைத்தனர். அதன்பிறகு நயன்தாரா அங்கிருந்து திருச்சி ரெயில் நிலையம் வந்தார்.
நயன்தாரா வருவதை கேள்விப்பட்டதும் அவரை பார்க்க ரெயில் நிலையத்தில் ரசிகர்கள் திரண்டனர்.
நயன்தாரா ரெயிலில் ஏற வந்தபோது ரசிகர்கள் அவரை நோக்கி முண்டியடித்தனர். அனைவரும் செல்போனில் அவரை படம் பிடித்தனர். சிலர் செல்பி எடுக்கவும் முயன்றனர்.
இதனால் நயன்தாரா கோபத்துடன் காணப்பட்டார். ஒரு வழியாக நயன்தாரா கூட்டத்தை மீறி ரெயிலுக்குள் ஏறினார்.
அங்கும் ஒரு ரசிகர் தனது செல்போனில் நயன்தாராவிடம் செல்பி எடுக்க முயன்றார். இதனால் அவரை முறைத்து பார்த்த நயன்தாரா தன்னை படம் பிடிக்க கூடாது என்றார்.
ஆனாலும் அவர் தொடர்ந்து நயன்தாராவிடம் செல்பி எடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நயன்தாரா, அவரிடம் செல்பி எடுத்தால் செல்போனை உடைத்து விடுவேன் என்று எச்சரித்தார். அதன்பிறகு அந்த ரசிகர் அங்கிருந்து சென்றார்.
பின்னர் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ரெயிலில் சென்னை திரும்பினார்கள்.