ஹரி பத்மனின் மொபைல் நம்பரை போலீஸார் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென ஏரோப்ளேன் மோடு ஆஃப் ஆகி, ஹரி பத்மன் யாருக்கோ கால் செய்தது போலீஸாருக்குத் தெரியவந்தது.

சென்னை திருவான்மியூரிலுள்ள பெசன்ட் நகர் கடற்கரையில் அமைதியாக இயங்கிவந்த கலாஷேத்ரா அறக்கட்டளை, கடந்த சில தினங்களாகப் பாலியல் புகார்களால் தகித்துக் காணப்படுகிறது.

87 ஆண்டுகள் பழம் பெருமைவாய்ந்த கலாஷேத்ரா மத்திய அரசின்கீழ் செயல்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரியில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான மாணவ மாணவிகள் நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அங்கேயே தங்கி பயின்று வருகிறார்கள்.

இந்த நிலையில், கலாஷேத்ராவில் பயிலும் மாணவிகளிடம் அங்குள்ள ஆசிரியர்கள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவதாக புகார் எழுந்தது.

இது குறித்து 2005 முதல் 2012 வரை கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் இயக்குநரும், மூத்த நடிகையுமான ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு குற்றச்சாட்டை பதிவுசெய்தார்.

அதனடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து, ‘பாலியல் தொல்லை’ என ட்விட்டரில் பதிவிட்டு, மார்ச் 21-ம் தேதி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டி.ஜி.பி-க்குக் கடிதம் எழுதியது.

கலாஷேத்ரா புகார் குறித்து விசாரணை நடத்துமாறு காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார் டி.ஜி.பி.சைலேந்திர பாபு.

இது தொடர்பாக கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் டி.ஜி.பி-யைச் சந்தித்து, ‘தங்கள் நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை’ என்று தெரிவித்ததோடு, ‘பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாகக் கூறப்பட்ட மாணவி, தனது பெயரையும் கல்லூரியின் பெயரையும் கெடுப்பதற்காக வேண்டுமென்றே தவறான தகவலைப் பரப்பியிருக்கிறார். பரப்பியவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் புகாரளித்தார்.

இதையடுத்து, கடந்த 26-ம் தேதி தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா நேரடியாக கலாஷேத்ராவுக்கு வந்து அங்கு மாணவிகளிடம் விசாரித்துச் சென்றிருக்கிறார்.

ஆனால், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தற்போது பயின்றுவரும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மார்ச் 30-ல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்த முதலமைச்சர், ‘யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி கலாஷேத்ராவுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

அங்கு மாணவிகள் அளித்த புகாரைக் கவனத்தில் எடுத்துக்கொண்டவர், கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமசந்திரனிடமும் (ஏப்ரல் 3) விசாரணை நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் சமர்ப்பித்திருக்கிறார் ஏ.எஸ்.குமாரி.

2008-லிருந்தே கலாஷேத்ராவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவரும் பெண்கள் புகாரளித்தும் அதை ஏன் கவனத்தில் எடுக்கவில்லை… அங்கு என்ன நடக்கிறது என்கிற கேள்விகளோடு விசாரணையில் இறங்கினோம்.

கலாஷேத்ராவா… கேரளஷேத்ராவா?

“கலை சேவைக்காக ருக்மிணிதேவி அருண்டேலால் ஆரம்பிக்கப்பட்ட கலாஷேத்ரா இப்போது பணத்துக்காக மாறியிருக்கிறது.

அதோடு தமிழ் கலாசாரம், கலைகள் வளர்ப்பதற்காக நடைமுறையில் இருந்த இந்தக் கல்லூரியில் இப்போது 90%-க்கு மேற்பட்ட மலையாளிகளே முகாமிட்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் கேரளாவின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கதகளியை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்காக, கதகளி சொல்லிக் கொடுப்பதற்காகத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்தான் ஹரி பத்மன்.

இவருக்கான பொறுப்புகள் அதிகம் கொடுக்கப்படவே, தனது ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தார்.

தன்னை மீறி யாரும் இயங்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்த ஹரி பத்மன் கலாஷேத்ராவுக்குப் பயில வரும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட மாணவிகள் இவரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே இவர்மீது புகார் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இப்போது வீடியோவில் வெளியிட்டதாலும், ஊடகங்களில் பெரிதாகச் செய்திகள் வந்ததாலும் ஹரி பத்மன் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

ஹரி பத்மன்போல் நிறைய ஆசிரியர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்காக நியமிக்கப்படுவார்கள். அதன்படி பல நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறோம்.

அங்கு வி.ஐ.பி-களிடம் எங்களை அட்ஜஸ்ட் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவார்கள்” என்று கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி ஒருவர் வேதனையுடன் பேசி முடித்தார்.

`நல்ல நினைவுகளோடு ஒரு விஷயத்தை நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டாமா…?’

அவரைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் சிலரிடம் பேசினோம், “99% பெண்கள் பயிலும் ஒரு கல்லூரிக்கு எதற்காக ஆண் ஆசிரியர்.

நாங்கள் ஹரி பத்மன் மீது புகார் தெரிவிக்கிறோம். ஆனால், அவரோ அடுத்த நாள் பிரேயரில் வந்து நிற்கிறார்.

புகார் கொடுத்தவர்கள் நொந்துபோய் நின்றோம். பரதத்தில் ஆண்கள் ஆடுவது தாண்டவம், பெண்கள் ஆடுவது லாஸ்யம். அதாவது சிவன் ஆடுவது மிடுக்கு. பார்வதி ஆடுவது நளினம்.

அப்படி இருக்கும்போது கலாஷேத்ராவில் நளினமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டியது பெண் ஆசிரியர்கள்தானே. எதற்காக அந்த இடத்தில் ஆண்களை நியமிக்கிறார்கள். இப்போது பத்து ஆண் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

இதில் வெளியே தெரியாத மற்றொரு நபரும் இருக்கிறார். வீணை கற்றுக் கொடுக்கும் நபர் அவர். கம்பிக் கருவிகளில் சரியான இடத்தில் வைத்து அழுத்தினால்தான் சரியான ஸ்வரம் வரும்.

அது உடனடியாக எல்லோருக்கும் பிடிபடாது. அதனால், அவர் பின்னால் வந்து சுற்றி உட்கார்ந்து, ‘இங்க பிடிக்கக் கூடாது, இங்க பிடி…’ என்று சொல்லி தோளை அணைத்து, இடுப்புக்குள் கை நுழைத்து சொல்லிக் கொடுத்தால் எப்படி எங்களால் கற்றுக்கொள்ள முடியும்.

நல்ல நினைவுகளோடு ஒரு விஷயத்தை நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டாமா. ‘இந்த வலி தாங்கினால்தான் ஆடும்போது தொடை வலி தாங்குவ’னு பாடி ஸ்டெச்சிங் என்று படுக்கச் சொல்லி கால் மேல் ஏறி நிற்பார்கள். இதெல்லாம் கொடுமையாக இருக்கும்.

இங்கிருக்கும் பெரிய பிரச்னை என்னவென்றால், தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தாலோ, தோல்வியடைந்தாலோ மறுதேர்வு கிடையாது. அரியர் கிடையாது.

கலாஷேத்ராவைப் பொறுத்தவரை, தேர்வில் தோல்வியடைந்தால் மீண்டும் ஒரு ஆண்டு படிக்க வேண்டும்.

ஏன் பெயில், மார்க் குறைவு என்பது கூடச் சொல்லாமல் யதேச்சதிகாரமாக நடந்துகொள்வார்கள்.

இந்தத் தேர்வுமுறை மிகப் பெரிய சாக்காகப்போகிறது. இவர் சொன்னது கேட்கவில்லையென்றால் திருப்பி ஒர் ஆண்டு படிக்கணும். எனவே, ஒருமுறை விட்டுக் கொடுத்துவிடலாம் என்று பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சில ஆசிரியர்கள், சாதி-மதப் பாகுபாடு பார்த்து ஒருமையில் பேசுவார்கள். சரியாகப் படிக்காத மாணவர்களை ‘நீ எந்த சாதி’ என்று கேட்பார்கள்.

ஹரி பத்மன் மீது புகார் தெரிவித்த பிறகும்கூட மூன்றாம் ஆண்டு மாணவிகளை அவரோடு ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சிக்காகச் செல்லச் சொல்கிறது நிர்வாகம். இவர்களுக்குள் இருக்கும் அரசியல், வேறு என்னென்ன நடக்கிறது என்பதெல்லாம் வெளிச்சத்தில் கொண்டுவர வேண்டும்” என்கிறார்கள்.

 

எப்படிப் பிடிபட்டார் ஹரி பத்மன்…?

இதற்கிடையே, நடன துணைப் பேராசிரியர் ஹரி பத்மன் மீது முன்னாள் மாணவர் அளித்த புகாரின் பேரில், மார்ச் 31 அடையாறு காவல்துறையால் இவர்மீது வழக்கு பதிவுசெய்தது.

முதல் தகவல் அறிக்கையில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354A (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்), தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதுவும் கலாஷேத்ரா மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டத்துக்கு இரு நாள்கள் கழித்தே மார்ச் 31-ம் தேதி வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

ஹரி பத்மனுக்கு எதிராக மாணவிகள் போராடிக்கொண்டிருந்தபோதே அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் ஹைதராபாத்தில் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சிக்காக அவரை மார்ச் 30-ம் தேதி ஹைதராபாத் அனுப்பிவைத்தது கலாஷேத்ரா நிர்வாகம்.

அவரோடு மூன்றாம் ஆண்டு பயிலும் பரதநாட்டிய மாணவர்களும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.

மார்ச் 31-ம் தேதி ஹரி பத்மன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. தொடர்ந்து, ‘உங்கள்மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருப்பதால், இப்போதைக்கு கல்லூரி பக்கம் வர வேண்டாம்’ என்று அவருக்கு நெருக்கமான கல்லூரி நிர்வாகத்தினர் சிலர் தகவல் கொடுத்திருக்கின்றனராம்.

இதற்கிடையே, ஹரி பத்மன் மீது புகார் கொடுத்த மாணவியைத் தேடி தமிழக காவல்துறை அதிகாரிகள் குழு கேரளாவுக்குச் சென்றது. அங்கே மாணவியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தையும் பதிவு செய்துகொண்டது.

ஹைதராபாத்த்தில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஏப்ரல் 2, ஞாயிறு காலை மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்குத் திரும்பினர் என்று போலீஸாருக்கு தகவல்கள் வந்தன.

உடனடியாக சென்னை போலீஸார் ஹைதராபாத் போலீஸாரைத் தொடர்புகொண்டனர். ஹைதராபாத் போலீஸார் ரயில்வே நிலையம், விமான நிலையங்களில் விசாரித்து சனியன்று இரவே ஹைதராபாத்திலிருந்து ரயிலில் ஹரி பத்மன் மாணவர்களுடன் சென்னைக்குப் புறப்பட்டுவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து, சென்ட்ரல் ரயில் நிலைய வட்டாரத்திலும் போலீஸார் கண்காணிப்பை அதிகப்படுத்தினர். ஹரி பத்மனின் செல்போன் நம்பரைத் தொடர்ந்து ட்ரேஸ் செய்தும் வந்தனர்.

ஆனால், ஹரி பத்மன் தனது செல்போன் நம்பரை சனிக்கிழமை இரவே ஏரோப்ளேன் மோடில் போட்டுவிட்டார். அதனால் நாட் ரீச்சபிள் என்றே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தது. ஹரி பத்மனின் மொபைல் நம்பரை போலீஸார் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென ஏரோப்ளேன் மோடு ஆஃப் ஆகி, ஹரி பத்மன் யாருக்கோ கால் செய்தது போலீஸாருக்குத் தெரியவந்தது.

மாதவரம் பகுதி சிக்னலில்தான் ஹரி பத்மனின் போன் ஆன் ஆகியிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

தொடர் விசாரணையில் மாதவரத்தில் ஒரு நண்பரின் இல்லத்தில் தங்கியிருந்த ஹரி பத்மனை ஏப்ரல் 3 அதிகாலை நெருங்கினார்கள் அடையாறு போலீஸார். அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி தலைமையிலான டீம் ஹரி பத்மனைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, 10 நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version