வெடுக்குநாறி மலையில் சிவனாலயம் சிதைக்கப்பட்டமை, கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம்,கச்சதீவில் புத்தர் சிலை, நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை விவகாரம்,புல்மோட்டையில் முஸ்லிம்களின் பிரதேசத்தில் புத்தபிக்குவின் அட்டகாசம், இவற்றோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை புதிய வடிவத்தில் புதுப்பிக்க முற்படுவது… போன்ற அனைத்தும் எப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் நிகழ்கின்றன?

முதலாவதாக,ஜெனிவா கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டம்.கடந்த நான்காம் திகதிதான் ஜெனிவா கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தது.

இரண்டாவதாக, இரண்டு முக்கிய அமைச்சர்கள் தென்னாபிரிக்காவுக்கு போய் வந்த ஒரு காலகட்டம்.

அந்நாட்டின் நல்லிணக்க அனுபவங்களை கற்றுக் கொள்வதே அந்த விஜயத்தின் நோக்கம்.அதன்பின் இந்த வாரம் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவுக்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது,ஐ.எம்.எஃப்பின் உதவி உறுதி செய்யப்பட்ட ஒரு காலகட்டம்.

தொகுத்துப் பார்த்தால் இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் அரசாங்கம் அதிகம் அடக்கி வாசிக்க வேண்டும்.

குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு நல்ல பிள்ளை வேடம் போடவேண்டும். ஆனால் நடப்பு நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்தால்,அரசாங்கம் தலைகீழாக நடக்கின்றது. ஏன் அப்படி நடந்து கொள்கிறது?

அதற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம்.

முதலாவது காரணம் ஐஎம்எஃபின் நிபந்தனைகளுக்கு பணிந்து மானியங்களை வெட்டும்போது அல்லது பொது நிறுவனங்களை தனியாரிடம் கொடுக்கும் பொழுது அதனால் ஏற்படக்கூடிய சிங்களப் பொது மக்களின் கோபத்தைத் திசை திருப்புவது.

இரண்டாவது காரணம் உதவி வழங்கும் நாடுகளும் நிறுவனங்களும் அந்த உதவியை இனப்பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்ற முன்நிபந்தனையோடு பிணைத்திருக்கவில்லை என்பது.

மூன்றாவது காரணம் தன்னை விட்டால் வேறு தெரிவு உலக சமூகத்திடம் இல்லை என்று ரணில் விக்கிரமசிங்க திடமாக நம்புகிறார்.

இந்த மூன்று காரணங்களின் அடிப்படையில்தான் அண்மை வாரங்களாக அரசாங்கம் தமிழ் மக்களுக்கு கோபமூட்டும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐஎம்எஃபின் நிபந்தனைகளை ஏற்று மானியங்களை வெட்டும்போது ஏழைகள் கொதித்து எழுவார்கள்.பொதுச்சேவை நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும்போது தொழிலாளர்கள் கொதித்து எழுவார்கள்.அதிகம் சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி விதிக்கும்போது அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

ஏற்கனவே இம்மூன்று தரப்புக்களும் கொதித்துக்கொண்டிருக்கின்றன. அவர்களுடைய நடவடிக்கைகளைத் திசை திருப்புவதற்கு அரசாங்கம் இனவிவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது. அதன்மூலம் சாதாரண சிங்களமக்களின் கவனத்தை எளிதாகத் திசை திருப்பலாம்.

இது ஒரு புதிய உத்தி அல்ல.ஏற்கனவே முன்னம் இருந்த எல்லா அரசாங்கங்களும் கையாண்ட ஓர் உத்திதான்.தென்னிலங்கையில் நெருக்கடி தோன்றும் போது இனவாதத்தை நோக்கி அவர்களுடைய கவனத்தைத் திசை திருப்புவது.தமிழ்மக்கள் பௌத்தமயமாக்கலை எதிர்க்கிறார்கள் அதற்கு எதிராக போராடுகிறார்கள் என்று காட்டினால், சிங்கள மக்களின் கோபம் திசை திருப்பப்பட்டுவிடும்.

இது ஒரு காரணம்.அடுத்த காரணம்,அரசாங்கத்தை பொருளாதார நெருக்கடியில் இருந்து பிணையெடுக்க முற்படும் தரப்புக்கள் தமது உதவிகளுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வை ஒரு நிபந்தனையாக முன்வைக்கவில்லை என்று தெரிகிறது.

அவ்வாறு முன்வைத்திருந்திருந்தால் அரசாங்கம் ஜெனிவாக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் இவ்வாறு சிங்களபௌத்த மயமாக்கலை முடுக்கி விட்டிருக்காது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து அரசாங்கத்தைப் பிணையெடுக்க முற்படும் வெளித்தரப்புக்கள் குறிப்பாக மேற்குநாடுகளும் இந்தியாவும் ஒரு விடயத்தில் ஒரே விதமாகச் சிந்திக்கின்றன.

இப்போதுள்ள நிலைமைகளின்படி ஜேவிபி படிப்படியாக வளர்ந்து வருவதாகக் கருதப்படுகிறது.

இடது பண்புடைய ஒரு கட்சி குறைந்தபட்சம் பலமான எதிர்கட்சியாக மேலெழுவதைக்கூட,மேற்படி நாடுகள் விரும்பாது.

எனவே ஜேவிபியின் எழுச்சியைத் தடுப்பதற்கு ரணிலைப் பலப்படுத்த வேண்டும்.அதனால் நிபந்தனைகளைப் போட்டு அவரைப் பலவீனப்படுத்த மேற்கு நாடுகள் தயாரில்லை.

அதாவது ஜே.வி.பிதான் இப்பொழுது ரணிலுடைய பலம்.எப்படியென்றால் ஜேவிபி மற்றும் ஜேவிபியிலிருந்து

பிரிந்து சென்ற முன்னிலை சோசலிஸக் கட்சி போன்றன முன்னெடுத்த “அரகலய” போராட்டத்தின் விளைவாகவே ரணிலுக்கு பதவி கிடைத்தது.

இப்பொழுது ஜேவிபி பலமடைவதைத் தடுப்பதற்கு ரணிலைப் பலப்படுத்த வேண்டிய தேவை மேற்கு நாடுகளுக்கும் மேற்கத்திய நிதிமுகவர் அமைப்புகளுக்கும் இந்தியாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது.ஜேவிபி அச்சுறுத்தலான ஒரு சக்தியாக இருக்கும்வரை அவர்கள் ரணிலைப் பலப்படுத்துவார்கள்.

ஒவ்வொரு வெளிநாட்டுக்கும் அதனதன் பயம்.இதில் தமிழ்மக்களின் பயத்தை யார் பொருட்படுத்துகிறார்கள்?நாட்டின் பொருளாதார நெருக்கடியை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்கக்கூடும்.

ஆனால் பிராந்தியப் பேரரசுகளும் உலகப் பேரரசுகளும் அதனை தமக்குக் கிடைத்த ஒரு ராஜதந்திர வாய்ப்பாகக் கருதிக் கையாள்வதாகத் தெரிகிறது.

இலங்கை நொடிந்து போயிருக்கும் காலகட்டத்தில் உதவிகளின்மூலம் இலங்கையை எப்படித் தம்வசப்படுத்தலாம் என்றுதான் எல்லாப் பேரரசுகளும் சிந்திக்கின்றன.ஏற்கனவே சீனாவின் கடன் பொறிக்குட் சிக்கியிருக்கும் ஒரு நாட்டை எப்படி ஐஎம்எப்பின் கடன்பொறிக்குள் வீழ்த்துவது என்று மேற்குநாடுகள் சிந்திக்கின்றன.

இப்படியாக பேரரசுகள் இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடியை ஒரு ராஜதந்திர வாய்ப்பாக பயன்படுத்த தொடங்கினால்,உதவிகளையும் இனப்பிரச்சனைக்கான தீர்வையும் ஒன்றுடன் ஒன்று பிணைப்பதற்கான வாய்ப்புகள் மேலும் பலவீனமடையும்.

மேலும்,ரணில் மேற்கத்தியப் பாரம்பரியத்தில் வந்த ஒரு தலைவர்.ஐ எம்எஃப் போன்ற நிறுவனங்களை ஏற்கனவே கையாண்டவர்.

எனவே ஏற்கனவே பரிச்சயமான ஒருவரோடு விவகாரங்களை கையாள்வது இலகுவானது என்றும் மேற்கு நாடுகளும் ஐ.எம்.எஃப்பும் கருதக்கூடும். அதனால் நாட்டில் இப்போதுள்ள நிலைமைகளில் ஒப்பீட்டளவில் ரணில் பரவாயில்லை என்று மேற்கு நாடுகள் கருதுவதாகத் தெரிகிறது.

அதுமட்டுமல்ல, ராஜபக்சக்களைப் பொறுத்தவரை ரணிலை விட்டால் வேறு பாதுகாப்புக் கவசம் இல்லை. வேறு பொருத்தமான பினாமியும் இல்லை.ராஜபக்சக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மதிப்பிழந்து காணப்படுகிறார்கள்.

எனவே அவர்கள் தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும்வரை குறிப்பாக நாமல் ராஜபக்சவை அடுத்த தலைவராகக் கட்டியெழுப்பும்வரை நிலைமைகளைக் கையாள்வதற்கு ஒப்பீட்டளவில் பொருத்தமான பினாமி ரணில்தான்.

இப்படிப்பார்த்தால்,உள்நாட்டில் ராஜபக்சங்களுக்கு பொருத்தமான பினாமி ரணில்தான்.

வெளியே மேற்கத்திய நாடுகளுக்கும் ஐஎம்எஃப்பிற்கும்,உலக வங்கிக்கும் ரணில் ஒப்பீட்டளவில் பரவாயில்லை.எனவே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனக்கு இப்பொழுது மவுசு அதிகரித்து வருவதை ரணில் உணர்கிறார்.

மேலும் கடந்த மாதத்தோடு அவருக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும் கிடைத்துவிட்டது.

எனவே, நிறைவேற்று அதிகாரம்,மேற்கத்திய ஆதரவு,ராஜபக்சக்களின் தங்கு நிலை,ஆழங்காண முடியாத தந்திரம்,வாழ்வின் இறுதிக் கட்டத்திலாவது சாதிக்க வேண்டும் என்ற ஆவேசம்…போன்ற எல்லாவற்றினதும் கூட்டுக் கலவையாக அவர் காணப்படுகிறார்.

உள்நாட்டில் தனக்கு மக்கள்ஆணை இல்லை என்பதும் தனது கட்சி பெருமளவுக்குச் சிதைந்து போய்விட்டது என்பதும் அவருக்குத் தெரிகிறது.

பொருளாதாரத்தை ஒப்பீட்டளவில் நிமிர்த்தினால்தான் தன்னையும் நிமித்தலாம், தனது கட்சியையும் நிமிர்த்தலாம்,சஜித்தையும் உடைக்கலாம் என்று அவருக்குத் தெரியும்.

பொருளாதாரத்தை நிமிர்த்துவது என்றால் மேற்கு நாடுகளின் நிபந்தனைகளுக்கு ஒத்துப்போக வேண்டும்.

மேற்கின் நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிவதென்றால் உள்நாட்டில் எதிர்ப்புகள் எழும்.அந்த எதிர்ப்பைத் திசைதிருப்ப அவருக்கு இனவாதம் தேவை.அதைத்தான் அவர் செய்கிறார்.அதுவும் ஜெனிவாக கூட்டத்தொடர் காலகட்டத்திலேயே செய்கிறார்.

ஆனால் தமிழ் மக்களோ அதற்கு எதிராகக் காட்டிய எதிர்ப்பு ஒப்பீட்டளவில் பலவீனமானது.

வெடுக்குநாறி மலையில் சிதைக்கப்பட்ட சிவனாலயத்துக்கு நீதி கேட்டுத் திரண்ட மக்கள் தொகையை விடவும் நாவற்குழியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு கலசம் வைப்பதற்காக வந்த சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகம் என்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு செய்தியாளர் சொன்னார்.

சிங்களபௌத்த மயமாக்கலுக்கு எதிராக தமிழ்மக்கள் பலமான ஒரு திரட்சியைக் காட்டமுடியாமல் இருக்கிறார்கள். இதுவும் அரசாங்கத்துக்குத் துணிச்சலை கொடுக்கிறது.

 

ஒருபுறம் தென்னாபிரிக்கப் பாணியில் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஓர் ஆணைக் குழுவை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. இன்னொருபுறம் ஜெனிவா கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே தமிழ் மக்களே கோபப்படுத்துகின்றது.

ஒருபுறம் ஐ.எம். எஃப்பின் நிபந்தனைகளை நிறைவேற்றுகிறது.இன்னொரு புறம் அதற்கு எதிராகக் கிளர்ந்து எழும் சிங்களமக்களைத் தமிழ் மக்களின் மீது திருப்பி விடுகிறது.

ஒரு பிரச்சினையை இன்னொரு பிரச்சினையால் அடித்து விடுவது.அல்லது ஒரு புதிய பிரச்சினையை உருவாக்கி அதன் மீது மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவது.

ஆகமொத்தம் ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதியாக வருவது என்று தீர்மானித்து உழைக்க தொடங்கி விட்டார்.

-நிலாந்தன்-

Share.
Leave A Reply

Exit mobile version