பண்டாரவளை – எல்ல சிறிய சிவனொளிபாதமலை என அழைக்கப்படும் சுற்றுலாத்தளத்தை பார்வையிட்டதன் பின்னர் திரும்பிய ரஷ்ய பிரஜை ஒருவர் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக பயணித்த முச்சக்கர வண்டிக்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையான 37 வயது ரஷ்ய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் கடந்த 3ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ள குறித்த நபர் நாட்டின் பல பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இலங்கைக்கு வந்ததன் பின்னர் சந்தித்த மூவரடங்கிய ரஷ்ய குடும்பமொன்றுடன் நேற்று முன்தினம்(08) எல்ல சுற்றுலா பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
நேற்றைய தினம்(09) குறித்த இரு குடும்பத்தினரும் சிறிய சிவனொளிபாதமலைக்கு சென்றுள்ளனர்.
அதன்பின்னர் முச்சக்கர வண்டிகளில் இரு குடும்பத்தினரும் மீண்டும் எல்ல நகருக்கு பயணித்துள்ளனர்.
இதன்போது திடீரென சுகவீனமடைந்து முச்சக்கர வண்டியினுள் வீழ்ந்தவரை அவரது மனைவி முதலுதவி அளித்து காப்பாற்ற முயன்றுள்ள நிலையில், முச்சக்கர வண்டி சாரதி உடனடியாக நோயாளியை தெமோதரை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ள அதேநேரம் எல்ல பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்திருந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version