“ரணில் விக்கிரமசிங்க, 2001- 2004 ஆட்சிக்காலத்திலும், நல்லாட்சி அரசின் காலத்திலும், படையினரின் நம்பிக்கையைத் தக்க வைக்க தவறியிருந்தவரை, அந்த நம்பிக்கையை காப்பாற்றிக் கொள்வதை முக்கியமானதாக கருதுகிறார்”

“ முப்படைகளிலும், படைக்குறைப்பை முன்னெடுக்கின்ற போது, கடுமையானதொரு நெருக்கடி ஏற்படும் என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியும். இதனால் படைகளில் இருந்து வெளியேறுகின்றவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படாமல் இருப்பது முக்கியம்” 

எந்தப் படையினரைக் கொண்டு அதிகாரத்தை தக்க வைக்க முடியாமல் கோட்டாபய ராஜபக்ஷ தப்பியோடினாரோ, அதே படையினரைக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்க தனது அதிகாரத்தை நிலைப்படுத்தி வருகிறார்.

பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, போரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்ற ரீதியில், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முப்படையினர் மத்தியில் செல்வாக்கு அதிகம் இருந்தது.

ஆனாலும், அந்தச் செல்வாக்கைக் கொண்டு அவரால் ஜனாதிபதி பதவியைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

அவரையடுத்துப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவிடம், முப்படையினர் மத்தியில் அத்தகைய செல்வாக்கு இருக்கவில்லை.

ஜெனரல் கமல் குணரத்ன

விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்தம் செய்து, ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பாதுகாப்பை நாசப்படுத்தி விட்டார் என்று குற்றம்சாட்டிய, ஜெனரல் கமல் குணரத்ன போன்றவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்குள்ளேயும், முப்படைகளிலும் இருந்த நிலையில் தான், அவர் ஜனாதிபதியானார்.

அவர்களுடனேயே இன்றும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எந்தப் படையினரைக் கொண்டு அதிகாரத்தை தக்க வைக்க முடியாமல் கோட்டாபய ராஜபக்ஷ தப்பியோடினாரோ, அதே படையினரைக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்க தனது அதிகாரத்தை நிலைப்படுத்தி வருகிறார்.

தனது நிகழ்ச்சி நிரலில், குறைந்தது மாதம் ஒருமுறையாவது படையினரைச் சந்திக்கும் வகையில், அவர் ஒழுங்குகளைச் செய்து வருகிறார்.

கடைசியாக அவர் அனுராதபுர விமானப்படைத் தளத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸாரைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பாதுகாப்புச் சவால்கள் குறித்தே அவரது உரை அமைந்திருக்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது பல அதிரடியான முடிவுகளை எடுத்தார். பிரசித்தமான முடிவுகளை (popular dicisions) எடுப்பது, அது அவரது அடையாளம்.

சவால்களைப் பற்றியோ, விளைவுகளைப் பற்றியோ சிந்திக்காமல், முடிவுகளை எடுப்பது மட்டும் அவரது பாணியாக இருந்தது.

அதுவே அவரது தோல்விகளுக்கும் காரணமாக அமைந்திருந்தது. ஆனால் அந்த முடிவுகளை எடுத்தவர், முப்படையினரில் பெரும்பாலானோரால், அதிகம் மதிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ என்பது முக்கியமானது.

அதே முப்படையினருக்கு முன்பாகச் சென்று,  தான் ஒருபோதும் பிரபலமான தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை எனவும், சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும்,  பிரபலமான தீர்மானங்களினால் நாட்டிற்கு சீரழிவு மட்டுமே ஏற்பட்டதாகவும் துணிச்சலுடன் கூறியிருக்கிறார் ரணில்.

ரணில் விக்கிரமசிங்க இப்போது படையினரைத் தன் பக்கம் வைத்துக் கொண்டு, தீர்மானங்களை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

அவர்களால் தான், தனது ஆட்சியைக் காப்பாற்ற முடியும் என்று, அவர் உறுதியாக நம்புகிறார்.  2001- 2004 ஆட்சிக்காலத்திலும், நல்லாட்சி அரசின் காலத்திலும், அவர் படையினரின் நம்பிக்கையை தக்க வைக்க தவறியிருந்தார்.

இப்போது அவர், அந்த நம்பிக்கையை காப்பாற்றிக் கொள்வதை முக்கியமானதாக கருதுகிறார்.

அதனால் தான் அவர்களுடன் தொடர்ந்து நெருக்கத்தைப் பேணி வருகிறார்.

அதற்காக அவர் படையினர் மத்தியில் சவால்களை எதிர்கொள்ளவில்லை என்று அர்த்தமில்லை.

படையினர் மத்தியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரண்டு முக்கியமான சவால்கள் இருக்கின்றன.

ஒன்று, எதிர்காலச் சவால்களுக்கு தகுந்த வகையில் அவர்களைத் தயார்படுத்துவது.

இரண்டு, உள்ளக மற்றும் சர்வதேச சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு படைக்குறைப்பை நடைமுறைப்படுத்துவது.

உலகின் பலம்வாய்ந்த நாடுகளுக்கு இடையிலான போட்டி இந்து சமுத்திர வலயத்தை பெரிதும் பாதிக்கும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார்.

முன்னதாக, அவர், வல்லமை மிக்க நாடுகளுக்கிடையிலான போட்டியில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது பற்றி பேசி வந்தார்.

இப்போது, அவர் அந்தப் போட்டி இலங்கையைப் பாதிக்கும் என்று குறிப்பிட்டிருப்பது, அண்மைக்கால சம்பவங்களால் அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற அனுபவங்கள் தான் காரணம்.

குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கு, இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

வழக்கமாக, நெருக்கடியில் சிக்கிய நாடுகள், சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை முன்வைக்கும் போது, அதற்குப் பதிலளிப்பதற்கு குறைந்தபட்சம் 6 வாரங்கள் போதுமானதாகும்.

ஆனால், இலங்கைக்கு கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கு, 7 மாதங்கள் வரை சென்றது. அதற்குப் பிரதான காரணம், பூகோள அரசியல் போட்டி தான்.

இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் நிலைப்பாடுகள், காரணமாக, இழுபறிகள் காணப்பட்டன.

இந்த மூன்று நாடுகளையும் மிகச் சுலபமாக சமாளித்து விடலாம் என்றே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கணக்குப் போட்டிருந்தார்.

அந்த நாடுகளுடன் இலங்கைக்கு நட்புறவு காணப்பட்ட போதும், பூகோள அரசியல் போட்டியே முதன்மையானதாக காணப்பட்டது. அதுவே பல்வேறு தடைகளையும் ஏற்படுத்தியது.

அதன் பின்னரே வல்லமை மிக்க நாடுகளின் போட்டிச் சூழல் இலங்கையைப் பாதிக்கும் என்ற உண்மை அவருக்கு தெரியவந்திருக்கிறது.

அதிலிருந்து தப்பிப்பதற்கான உத்திகளை ஜனாதிபதி என்ற வகையில் அவரே வகுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் எதிர்காலச் சவால்களுக்கு ஏற்ற வகையில் படையினரைத் தயார்படுத்துவதில் ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்துவதாக கூறியிருக்கிறார்.

இது தொழில்நுட்ப ரீதியாக படையினரை தயார்படுத்துவது.

முன்னர், ஆளணியே போரின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதாக இருந்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை அரச படையினர் வெற்றி கொண்டதும் கூட, ஆளணியை வைத்து தான்.

விடுதலைப் புலிகளிடம் ஆளணி பற்றாக்குறை இருந்தது. அரச படையினரிடம் ஆளணி வளம் அதிகமாக இருந்தது. அது போரின் முடிவில் தீர்க்கமான தாக்கத்தைச் செலுத்தியது.

போருக்குப் பின்னர் இலங்கைப் படையினரின் எண்ணிக்கை 331,000 ஆக அதிகரித்துக் காணப்பட்டது.

இப்போது நிலைமை அவ்வாறில்லை. அதிகளவு ஆளணியை பராமரிக்க வேண்டிய தேவை இல்லை. அதனால் தொழில்நுட்ப ரீதியாக தேர்ச்சி பெற்ற படையினரை வைத்துக் கொண்டு ஏனையவர்களை வீட்டுக்கு அனுப்புகின்ற பாதுகாப்பு மறுசீரமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முப்படைகளிலும், படைக்குறைப்பை முன்னெடுக்கின்ற போது, கடுமையானதொரு நெருக்கடி ஏற்படும் என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியும்.

படைகளில் இருந்து வெளியேறுகின்றவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படாமல் இருப்பது முக்கியம். படைகளில் இருந்து வெளியேற்றப்படுவதால் அவர்கள் அதிருப்தி கொள்ள கூடாது.

இதனால் அவர்களை சமாளித்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அவர்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டிய தேவைகளும் உள்ளன.

அமெரிக்காவில் இந்த நிலைமை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்காக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுக்களும் நடத்தப்பட்டிருக்கின்றன.

தொழிற்பயிற்சி அளித்து அவர்களை புதியதொரு பாதையில் செல்வதற்கு தயார் படுத்தாவிட்டால், இது சமூக ரீதியாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

இராணுவ மறுசீரமைப்புத் திட்டத்தை விட, ரணில் விக்கிரமசிங்கவுக்கு இது தான் கடுமையான சவாலாக இருக்கும்.

அதனை அவர் எதிர்கொள்வதைப் பொறுத்துத் தான், வெற்றிகரமான ஆட்சியாளரா என்பது தீர்மானிக்கப்படும்.

-சுபத்ரா

Share.
Leave A Reply

Exit mobile version