இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை கொண்டு செல்வதற்கான கோரிக்கை சீன அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சீன பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளுடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

சீனாவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை தொடர்பிலான யோசனையை தாம் அமைச்சரவைக்கு முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்பிரகாரம், முதற்கட்டமாக ஒரு லட்சம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பி வைக்கின்றமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குரங்குகளை சீனாவிற்கு அனுப்பி வைக்கின்றமை தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று, விவசாய அமைச்சில் நேற்றைய தினம் (ஏப்ரல் 11) நடத்தப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் விவசாய அமைச்சின் அதிகாரிகள், தேசிய மிருககாட்சிசாலை திணைக்கள அதிகாரிகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக பல தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம், குழுவொன்றை நியமித்து அதனூடாக இந்த விடயம் தொடர்பில் தீர்மானமொன்றை எட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிடுகின்றார்.

இலங்கை வாழ் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பி வைக்கின்றமை தொடர்பில் காணப்படுகின்ற சட்ட நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த யோசனையை அமைச்சரவையில் முன்வைக்க அமைச்சர் மஹிந்த அமரவீர எதிர்பார்த்துள்ளார்.

இலங்கை குரங்குகளினால் பொருளாதார பாதிப்பு

இலங்கையில் குரங்குகளின் இனப் பெருக்கம் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பல மடங்காக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் தற்போது சுமார் 30 லட்சம் குரங்குகள் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார்.

நாட்டில் காணப்படுகின்ற விளை நிலங்களை குரங்குகள் தற்போது அதிகளவில் சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக 200 மில்லியன் தேங்காய்களை கடந்த ஆண்டில் மாத்திரம் குரங்குகள் சேதப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

அதுதவிர, ஏனைய பயிர் வகைகளையும் குரங்குகள் சேதப்படுத்தியுள்ளமையினால், பொருளாதார ரீதியில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்தே, குரங்குகளை சீனாவிற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குரங்குகளை இறைச்சிக்காக சீனர்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளதா?

இலங்கை குரங்குகளை சீனாவிற்கு கொண்டு சென்று இறைச்சிக்கு பயன்படுத்த போவதாக சிலர் கூறி வருகின்ற நிலையில், இந்த விடயம் தொடர்பிலும் பிபிசி தமிழ், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் வினவியது.

சீனாவிலுள்ள மிருககாட்சிசாலைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலேயே சீனாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் பதிலளித்தார்.

அத்துடன், இறைச்சிக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகின்ற கருத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர முற்றாக நிராகரித்தார்.

இலங்கையிலுள்ள குரங்கொன்றை பிடிப்பது முதல், அதனை சீனாவிற்கு கொண்டு செல்வது வரையான அனைத்து செலவீனங்களையும் சீனாவே ஏற்றுக்கொள்கின்றது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டிற்குள் குரங்கொன்றை பிடிப்பதற்காக மாத்திரம் சுமார் 5000 இலங்கை ரூபா, சீனாவினால் செலவிடப்படவுள்ளது.

அத்துடன், குரங்குகளை பிடித்து, அதனை தனிமைப்படுத்தி, நோய்கள் ஏதேனும் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து, கூடுகளில் அடைத்து, சீனாவிற்கு கொண்டு செல்வதற்கான முழு செலவினத்தையும் சீனாவே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர

அவ்வாறாயினும், இலங்கை குரங்கொன்றிற்காக சுமார் 30,000 முதல் 50,000 இலங்கை ரூபா வரை சீனா செலவிட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

இலங்கையிலிருந்து கொண்டு செல்லும் குரங்கிற்கு 50,000 ரூபா வரை செலவிடும் சீனா, அந்த குரங்கை இறைச்சிக்காக பயன்படுத்துமாயின், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் வைத்து ஒரு லட்சம் ரூபாயாக விற்க வேண்டும்.

அதே சமயம் ஒரு லட்சம் ரூபாவை செலவிட்டு, குரங்குகளை சீனர்கள் உட்கொள்ளமாட்டார்கள் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

இதேவேளை, விவசாய நிலங்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள் உள்ளிட்ட 6 வகையான உயிரினங்களை கொல்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் வினவியது.

அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளையும் தாம் எடுக்கவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர பதிலளித்தார்.

குரங்குகளை சீனாவிற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தாலும், தற்போதைய சூழலில் சீனாவின் மிருகக் காட்சி சாலையில் காட்சிப்படுத்த மட்டுமே குரங்குகள் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version