லங்கையில் தமிழர்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களில் இரவோடிரவாக புத்தர் சிலைகளை வைத்து வரும் பேரினவாத சிங்கள பெளத்தர்கள், இப்போது தமது எல்லைகளைத் தாண்டி, கச்சத்தீவிலும் புத்தர் சிலையொன்றை இரகசியமாக ஸ்தாபித்துவிட்டனர்.

இலங்கையில் சைவர்கள் வாழ்ந்துவரும் பல பகுதிகளிலும் அவர்களின் வழிபாட்டிடங்களை அழித்து, புத்தர் சிலைகளை வைத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இந்தியா வாய் திறக்கவே இல்லை.

ஆனால், கச்சத்தீவில் இராணுவத்தினர் புத்தர் சிலையை வைத்த தகவல் கிடைத்ததும் அதற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது, டெல்லி.

ஏனென்றால், இலங்கையில் என்ன நடந்தாலும், அதன் இறைமையில் தலையிடாத அரசியலை இந்தியா கொண்டிருக்கிறது. ஆனால், கச்சத்தீவு அப்படியல்ல. அது இன்னமும் தமது நாட்டின் ஒரு பகுதி என்ற நினைப்பிலேயே இந்தியா உள்ளது.

கடந்த வருடம் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வந்தபோது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட கச்சத்தீவை மீட்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தமை முக்கிய விடயமாகும்.

ஆனால், இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, கடந்த வாரம் இடம்பெற்ற பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் கேட்ட கேள்வி மிக முக்கியமானது மட்டுமின்றி, இலங்கையின் ஏனைய அரசியல்வாதிகளுக்கும் சிறந்த பாடமாக அமைந்துவிட்டது.

‘ராஷ்டிரபதி பவனுக்குள் நுழைவதற்கு முன்பாக புத்தர் சிலை உள்ளது. புத்தர் இந்தியாவில் உருவெடுத்த சிறந்த புதல்வராகவே விளங்குகிறார்.

அப்படி இருக்கும்போது கச்சத்தீவில் புத்தர் சிலைகளை வைத்ததற்கு ஏன் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?’ என்ற கேள்வியை அவர் தொடுத்துள்ளார்.

இக்கேள்வியை வெளிவிவகார அமைச்சர் உட்பட பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த எவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

ரணிலின் பூகோள அரசியல் அறிவும் புத்தர் தொடர்பில் இந்தியா கொண்டிருக்கக்கூடிய அணுகுமுறைகளையும் ஒரே கேள்வியால் திக்குமுக்காடச் செய்துவிட்டார் ரணில் என்று தான் அனைவரும் நினைத்திருப்பர். அவரையும் மெச்சியிருப்பர்.

ஆனால், இந்த இரண்டு சிலைகளின் பின்னணி வரலாறு ரணிலுக்கு மாத்திரமின்றி, அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த எத்தனை பேருக்கு தெரியும் என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.

கச்சத்தீவில் இராணுவத்தினர் வழிபட புத்தர் சிலை வைத்தால் என்ன என்ற அவரது கேள்வி மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அங்கு மக்கள் நடமாட்டம் இல்லை. 

கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தை பாதுகாத்து பராமரித்து வருபவர்கள், காவல் கடமைக்காக அங்கிருக்கும் இராணுவத்தினர் மாத்திரமே.

ஆகவே, அந்தோனியாரை பாதுகாக்கும் அவர்கள் புத்தர் சிலை வைத்தால் என்ன என்பது ஜனாதிபதி ரணிலின் வாதம். இந்த வாதத்தில் நியாயமுள்ளதா, இல்லையா என்பதை ஆராய முன்னர் ராஷ்டிரபதி பவன் புத்தர் சிலைகளை பற்றி சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

இந்திய குடியரசுத் தலைவரின் (இந்திய ஜனாதிபதி) உத்தியோகபூர்வ வாசஸ்தலமே ராஷ்டிரபதி பவன் என அழைக்கப்படுகிறது.

இந்திய தலைநகர் புது டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவன் 19 ஆயிரம் சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட ஒரு அரண்மனையாகும். அதனைச் சுற்றி சுமார் 320 ஏக்கர் பரப்பளவு தோட்டங்கள், அதிகாரிகளின் இல்லங்கள், பூந்தோட்டங்கள் என பல அம்சங்கள் உள்ளன.

பாரம்பரிய வடிவத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரண்மனை பிரித்தானிய கட்டடக் கலைஞர் எட்வின் லூட்யென்ஸ் என்பவரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு, 1929ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் கூறும் புத்தர் சிலைகள் இங்கு இரண்டு உள்ளன. இவை  இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டவையல்ல. மாறாக, இந்திய அரசாங்கத்துக்கு பரிசாக வழங்கப்பட்டவை. அங்கு கொண்டு வரப்பட்டவை.

இதில் சஹஸ்ரபாகு அவலோகிதேஸ்வரர் என்ற சிலை விசேடமானது. வியட்நாம் இந்திய அரசாங்கத்துக்கு வழங்கிய பரிசு இது.

இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனுக்கு அப்போது வியட்நாம் அரசு பரிசாக வழங்கியதை ராஷ்டிரபதி பவனுக்கே அவர் வழங்கிவிட்டார்.  இதை ஆயிரம் ஆயுதங்கள் தாங்கிய புத்தர் என்று அழைப்பர். (The 1000 arms statue of Lord Buddha)

சஹஸ்ரபாகு அவலோகிதேஸ்வரர் என்பது சமஸ்கிருத பெயராகும். அதன் அர்த்தம் என்னவென்றால், இந்த உலகை கருணையுடன் பார்க்கும் இறைவன் என்பது அர்த்தம்.

இரண்டாவதாக, அரண்மனையின் டேர்பர் மண்டபத்தில் அமைந்துள்ள நின்ற வடிவிலான புத்தர் சிலையாகும். 7ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட சிற்பமாக உள்ள இந்த சிலையானது

1947ஆம் ஆண்டு லண்டனில் உள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதாகும். பின்பு இது இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, கொல்கத்தா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

பின்பு, தேசிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட பிறகு ஜவஹர்லால் நேருவின் கோரிக்கையின்படி, இது ராஷ்டிரபதி பவனுக்கு கொண்டுவரப்பட்டது.

இது ‘இந்தோ–கிரேக்க காந்தாரா கெளதம புத்தர் சிலை’ என அழைக்கப்படுகிறது. இவையே ராஷ்டிரபதி பவனில் உள்ள இரண்டு புத்தர் சிலைகளின் சுருக்கமான வரலாறு.

அங்கு எவரும் வலுக்கட்டாயமாக கொண்டுபோய் இந்த புத்தர் சிலைகளை வைக்கவில்லை. அவை வரலாற்று பாரம்பரிய சின்னங்களாக அங்கு வீற்றிருக்கின்றன.

ஆனால், ஜனாதிபதி ரணில் கூறும் கச்சத்தீவு புத்தர் சிலைகள் அப்படியல்ல. எவருக்கும் தெரியாமல் மிகவும் பாதுகாப்பாக இரகசியமாக இராணுவத்தினரால் உருவாக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது.

இதையும் ராஷ்டிரபதி பவனில் உள்ள புத்தர் சிலைகளையும் ஒப்பீடு செய்வதென்பது  நகைச்சுவையாகும்.

இந்தியாவின் எல்லைப்புற நாடான நேபாளின் லும்பினி நகரத்தில் புத்தர் பிறந்தார். இந்தியாவில் புத்த மதம் உருவாகி ஆசிய நாடுகளில் பரவியது. ஆனால், இன்று இந்தியாவில் பெளத்தம் இல்லை. எனினும், புத்தர் இருக்கிறார்.

இந்தியாவில் மாத்திரமல்ல, பெளத்தத்தை பின்பற்றும் ஜப்பான், வியட்நாம், சீனா, தாய்லாந்து, ஹொங்கொங், கொரியா ஆகிய நாடுகளிலும் புத்தர் இருக்கின்றார். பெளத்தமும் உள்ளது. ஆனால், அங்கு எவரும் வலுக்கட்டாயமாக புத்தர் சிலைகளை கொண்டு போய் வைப்பதில்லை, வைத்ததுமில்லை.

அவர்கள் புத்தரை சிங்கள மொழி பேசும் கடவுளாக வழிபடுவதில்லை. அந்தந்த நாடுகளில் பேசப்படும் மொழிகளிலேயே புத்தரை அவர்கள் காண்கின்றனர். ஆனால், இலங்கையில் அவ்வாறு இல்லை. இங்கு வீதிக்கு வீதி வைக்கப்படும் புத்தர் பேசும் மொழி சிங்களமாகும்.

புத்தர் என்பவர் சிங்கள பெளத்தர்களின் இறைவன் மாத்திரமே என இலங்கையில் பிக்குகளும் பெளத்தர்களும் உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

ரணிலின் பரம்பரையினர் ஆரம்பத்தில் கத்தோலிக்கர்கள் ஆவர். இடையில் பெளத்த மதத்தை தழுவி அரசியல் செய்ய ஆரம்பித்தனர்.   இந்த நாட்டில் யாரும் அரசியல் செய்ய வேண்டுமானால், அவர்கள் இறுதி வரை பெளத்தர்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.

ஆகவே, ஜனாதிபதி ரணில் இலங்கையில் உள்ள பெளத்த சிங்களவர்களை திருப்திப்படுத்த ராஷ்டிரபதி பவன் புத்தரை வைத்து கச்சத்தீவு புத்தரை நியாயப்படுத்தியுள்ளார். அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்?

கச்சத்தீவில் இராணுவத்தினர் வழிபடுவதற்கு ஒரு புத்தர் சிலை தேவைதான். சரி, இருந்துவிட்டுப் போகட்டும்… சிங்களவர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் எதற்கு புத்தர் சிலைகள்? இதற்கு என்ன பதிலை ஜனாதிபதி ரணில் வழங்கப்போகிறார்?

(சி.சி.என்)

Share.
Leave A Reply

Exit mobile version