`இன்று காலை 10:15 மணிக்கு தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிவந்தவர் அண்ணாமலை. அந்தப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, பா.ஜ.க-வில் இணைந்தார்.
அப்போது,”நான் ஒரு ஏழை விவசாயி மகன். என்னிடம் ஆடுகள், மாடுகள் மட்டும்தான் இருக்கின்றன” எனத் தன்னை பற்றி எளிமையாக வெளிப்படுத்திக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க தலைவராகவும் பொறுப்பேற்றார். அப்போது முதல் தொடர்ந்து தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்து, மாநில அரசுடன் அவ்வப்போது மோதல் போக்கையும் கடைப்பிடித்துவருகிறார்.
இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதற்கு ஒரு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த அண்ணாமலை, “நான் கட்டியிருப்பது ரஃபேல் விமானத்தின் உதிரிப்பாகங்களால் தயாரான ரஃபேல் வாட்ச். இதுபோல் உலகில் 500 வாட்ச்சுகள் மட்டுமே இருக்கும்.
அதில் ஒன்றை நான் வாங்கி அணிந்திருக்கிறேன். நான் இந்தியன், என் மூச்சிருக்கும் வரை இந்த வாட்ச்சைக் கட்டியிருப்பேன்” என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, ‘ இந்த வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட வேண்டும்’ என தி.மு.க மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டிருந்தார்.
அதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி – பாஜக தலைவர் அண்ணாமலைக்கிடையே ட்விட்டரில் வார்த்தைப்போர் நடைபெற்றது. சமூக வலைதளங்களிலும் வாட்ச் பில் தொடர்பாகப் பரவலாகப் பேசப்பட்டது.
அப்போதும் அண்ணாமலை, “என்னிடம் வாட்ச் பில் இருக்கிறது” எனத் தெரிவித்தார். ஆனால், பில்லை வெளியிடவில்லை.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஒரு செய்தியாளர் சந்திப்பில், “ஏப்ரல் 1-ம் தேதி வாட்ச் பில்லை வெளியிடுவேன்.
ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும், எனது சொத்துத் தகவல்களையும் வெளியிடுவேன்” என்பதாக அறிவித்தார்.
ஆனால், கடந்த ஒன்றாம் தேதி அண்ணாமலை அந்த ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிடவில்லை.
ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க-வின் ஊழல் குறித்து வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் வாட்ச் பில் குறித்தும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்றைய தினம் அண்ணாமலை, “நாளை காலை 10:15 மணிக்கு தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, சபரீசன்,செல்வி, மு.க.முத்து, மு.க.அழகிரி, துரை அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரின் படங்கள் இருக்கக்கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டார்.
இந்த நிலையில், இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “கவிஞர் கண்ணதாசன் தனது `வனவாசம்’ என்ற புத்தகத்தில் கலைஞர் கருணாநிதியும், கண்ணதாசனும் ரயிலில் வந்தது தொடர்பாக எழுதியிருக்கிறார்.
அதில் பழம் விற்கும் நபர் கூடையை வைத்துவிட்டு கழிவறைக்குச் சென்றபோது கலைஞர் பழத்தைத் திருடலாமா எனக் கேட்டார் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அப்போது முதல் திருடத் தொடங்கினார்கள்.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாக இன்னும் திருடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்னை ஆரம்பித்தது என் ரஃபேல் வாட்சின் மூலமாகத்தான்.
நான் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச்சை, சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடமிருந்து வாங்கினேன். அதற்கான பில் இதோ…” என பில்லைக் காட்டினார். மேலும் தொடர்ந்தவர்,
“எனது வங்கிக் கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்து விவரங்களையும் இன்று இணையதளத்தில் வெளியிடுகிறேன். ஆனால் நேற்றே ஒரு போலி பில்லைப் பதிவிட்டது திமுக ஐடி விங். அதையும் நம்பி பரப்பிவருகிறார்கள்.
தற்போது நான் ஒரு வீடியோவை வெளியிடுகிறேன். அதில் திமுக கட்சியைச் சார்ந்தவர்களின் சொத்து விவரங்கள் இருக்கின்றன.
அதை நன்கு பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து வாருங்கள். அதற்காக ஒரு வாரம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு 20 அல்லது 21-ம் தேதிகளில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறேன். அப்போது உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்” எனத் தெரிவித்து வீடியோவை வெளியிட்டார்.
சுமார் 15 நிமிடங்கள் ஓடிய வீடியோவில் பல திமுக தலைவர்களின் சொத்து விவரங்கள் காண்பிக்கப்பட்டன.
அதில், ஜெகத்ரட்சகன் ரூ.50,219 கோடி, எ.வ.வேலு ரூ.5,442 கோடி, கே.என்.நேரு ரூ.2,495 கோடி, கனிமொழி ரூ.830 கோடி, கலாநிதி மாறன் ரூ.12,450 கோடி, கதிர் ஆனந்த் ரூ.579 கோடி, கலாநிதி வீராசாமி ரூ.2,923 கோடி, உதயநிதி ரூ.2,039 கோடி, சபரீசன் ரூ.902 கோடி, பொன்முடி ரூ.581 கோடி, அன்பில் மகேஸ் ரூ.1,023 கோடி எனக் காட்டப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “இந்த வீடியோ மூலம் திமுக தலைவர்களிடம் நான்கு கேள்விகளை வைக்கிறேன்.
கலாநிதி வீராசாமிக்கு 2,923.29 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் பொன்முடிக்கும் அவருடைய மகன் கௌதம சிகாமணிக்கும் 581.20 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் தி.மு.கவிற்கு 1,408.94 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் தி.மு.கவுக்கு சொந்தமாக 3474.18 கோடி ரூபாய் மதிப்பிற்கு பள்ளிக்கூடங்கள் இருப்பதாகவும்
அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 1,023.22 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலினுக்கு 2,039 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் முதலமைச்சரின் மருமகன் சபரீசனுக்கு 476.16 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமாக சுமார் 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தமிழ்நாட்டிலும் தெலங்கானாவிலும் இருப்பதாகவும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்வதாகவும் அந்தப் படத்தில் தெரிவிக்கப்பட்டது
இரண்டாவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன்…. இவர் லண்டனில் இருக்கும் ‘வெஸ்ட் பாங்க்’ எனும் மணி லாண்டரிங் பேங்க் நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கும் இரண்டு நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கிறார்.
இது லஞ்சம் வாங்குவதைவிடப் பெரும் குற்றம். இதற்கு முதல்வரும், அவருடைய மருமகன் சபரீசனும் பதில் சொல்ல வேண்டும். முதல்வர் துபாய்க்குச் சென்றபோது பல்வேறு கையெழுத்துகளைப் போட்டார். அதில் ஒன்று, `நோபல் ஸ்டீல்’ எனும் நிறுவனம்.
இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் 1,000 கோடியில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார். ஆனால், இந்த நிறுவனத்தில் 2009-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலினும், 2016-ம் ஆண்டு அமைச்சர் அன்பில் மகேஸும் இயக்குநராக இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
இது எப்படி… இதன் மர்மத்தை விளக்க வேண்டும். 2006-2011 வரை திமுக ஆட்சியில் இருக்கும்போது சென்னை மெட்ரோ முதற்கட்ட பணிக்கான மதிப்பீடு ரூ.14,600 கோடி என முடிவுசெய்யப்பட்டது.
இதற்காக உடனடியாக டெண்டர்விடப்படுகிறது. இந்த டெண்டர் ஒப்பந்தம் ஆல்ஸ்டாம் நிறுவனத்துக்குச் செல்ல உதவியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு, தேர்தல் நிதியாக சிங்கப்பூர் நிறுவனம் மூலம் ரூ.200 கோடி கொடுக்கப்பட்டது.
இதை நேரடியாகவே குற்றம்சாட்டுகிறோம். இதை நேரடியாக சிபிஐ-க்கு நானே புகார் அளிக்கப்போகிறேன்.
அழுக்குகளின் மொத்த வடிவம் தி.மு.க. மதன் ரவிச்சந்திரன் போன்றவர்களை இறக்கிவிட்டு ஸ்டிங் ஆபரேஷன் செய்தார் உதயநிதி ஸ்டாலின். சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு ஓர் அரசியல்வதி தனது 10 ஆண்டுக்கால வரவு, செலவு கணக்குகளை வெளியிட்டிருப்பாரா… நான் வெளியிட்டிருக்கிறேன்.
இதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை. திமுக-வை எதிர்க்க எனக்கு வேறு வழியில்லை. அதனால் யாருக்கும் பயந்தோ, பணிந்தோ பதவிக்கு வர வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இது ஊழலுக்கு எதிரான போர். இந்த வெளிப்படைதான் பிரதமர் மோடி விரும்பக்கூடிய ஆட்சி. இலங்கை விவகாரம் முதல் ஹைட்ரோகார்பன், நீட் வரை அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் திமுக-தான். அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பது பா.ஜ.க-தான்.
எனவே தமிழ்நாடு மக்களுக்கு… ‘என் மண் என் மக்கள்” எனும் எனது பாதயாத்திரை ஊழலை எதிர்க்கத்தான். அதனால் ஜூன் முதல் வாரம் தொடங்கும் எனது நடைப்பயணத்தில் பங்குபெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஊழலை எதிர்க்க சபதமேற்று வாருங்கள். என்னுடன் இருப்பவர்களையெல்லாம் கைதுசெய்தாலும் நான் அடங்கப்போவதில்லை. என்ன நடந்தாலும் எனது குரலை அடக்க முடியாது. அது இன்னும் பலமாக இருக்கும்” என்றார்.