நாட்டின் அரசியல் நிலைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக சற்று திரும்பி வருவதாக தெரிகிறது.
அதற்குக் காரணம் அவரது திறமை என்றும் கூறலாம். அதேவேளை அவரது சர்வாதிகார போக்கின் விளைவு என்றும் கூறலாம்.
இதற்கு முன்னர் ஒரு கட்டுரையில் நாம் கூறியதைப் போல் கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின் படி மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கே நாட்டில் மிகவும் கூடுதலான மக்கள் ஆதரவு இருந்தது. அது 43 சதவீதமாகும்.
சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் 30 சதவீத மக்கள் ஆதரவையே பெற்றிருந்தது. ஜனாதிபதியின் ஐக்கிய தேசிய கட்சியும் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி 4 சதவீத ஆதரவை பெற்றிருந்தது.
அந்த நிலையில் சட்டப்படி நடத்தப்பட வேண்டிய உள்ளூராடசி மன்றத் தேர்தல் கடந்த மாதமோ அல்லது இம்மாதமோ நடைபெற்று இருந்தால் மக்கள் விடுதலை முன்னணி பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கக்கூடும்;
அவ்வாறு நடந்திருந்தால் அது அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலினதும் 2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலினதும் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை தடுக்க முடியாது.
எனவேதான் ஆளும் கட்சியான பொதுஜன முன்னணியும் ஐ.தே.க.வும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை இந்த சந்தர்ப்பத்தில் நடத்துவதை கடுமையாக எதிர்க்கின்றன.
ஆனால் தற்போது நாட்டின் பொருளாதார நிலையும் அதன் காரணமாக அரசியல் நிலைமையும் சிறிது சிறிதாக மாறி வருவதையும் அவதானிக்க முடிகிறது. இந்த நிலைமை ஏற்படுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியே காரணமாகியது.
எனினும் கூர்ந்து பார்த்தால் பொருளாதார நெருக்கடி இன்னமும் தீரவில்லை. ஒரு தற்காலிக நிவாரண நிலையே உருவாகியுள்ளது. இறக்குமதி தடைகளாலும் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்தாததாலும் நாட்டிலிருந்து அந்நிய செலாவணி வெளியேற்றம் வெகுவாக குறைந்துள்ளது.
அதேவேளை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களாலும் உல்லாசப் பிரயாணத்துறையாலும் வரும் வருமானம் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் 22 ஆம் திகதி நாணய நிதியத்திடம் இருந்தும் 330 மில்லியன் டொலர் கிடைத்தது. இவற்றின் காரணமாக தற்போது மத்திய வங்கியின் கையிருப்பில் கடந்த வருடத்தைப் பார்க்கிலும் கூடுதலாக அந்நிய வெலாவணி இருக்கிறது.
அதன் மூலம் அரசாங்கம் எண்ணெயக் கொள்வனவை சமாளித்து வருகிறது. இப்போது பணம் கிடைக்கும் வரை எண்ணெய்க் கப்பல்கள் துறைமுகத்துக்கு வெளியே காத்திருப்பதாக செய்திகள் வருவதில்லை.
எண்ணெய் விலையை குறைக்க அதனால் அரசாங்கத்தால் முடிந்தது. உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறைந்திருந்தமையும் இதற்குக் காரணமாகும்.
எண்ணெய் விலை ஏறத்தாழ ஏனைய சகல பொருட்களினதும் விலையை பாதிக்கிறது. ஆயினும் இம்முறை எண்ணெய் விலை குறைப்பால் பஸ் கட்டனம் சற்று குறைந்ததைத் தவிர பொதுமக்கள் அடைந்த நன்மை எதுவும் பெரிதாக இல்லை என்றே கூற வேண்டும். கடைகளில் சாப்பாட்டுப் பொதிகளின் விலை சற்று குறைந்தாலும் வீடுகளில் உணவுக்கான செலவு குறையவில்லை.
எனினும், இந்த விலை குறைப்புக்கள் பற்றிய செய்திகள் பல நாட்களாக ஊடகங்களால் தொடரந்து வெளியிட்டதன் காரணமாக பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிட்டது என்பதைப் போன்ற ஓர் உணர்வு பரவியிருக்கிறது.
அது உண்மையல்ல என்றாலும் நாடு தீர்வுப் பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது என்பது உண்மையே. நாணய நிதியத்தின் உதவியை சரியாக பயன்படுத்திக் கொண்டு அந்நிய செலாவணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கண்டால் மட்டுமே நெருக்கடி தீர்ந்தது என்று மகிழ்ச்சியடையலாம். அதற்கு அரசாங்கம் மேலும் பல முக்கிய கட்டங்களை தாண்டிச் செல்ல வேண்டும்.
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு அதில் முக்கிய காரணியொன்றாகும். அது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உள்நாட்டுக் கடன்களையும் மறுசீரமைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியத்திடம் பெற்றிருக்கும் கடனிலும் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தாது.
அது இலட்சக் கணக்கான ஊழியர்களை பாதிக்கும். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்புக்களை உருவாக்கலாம்.
அதேவேளை, இறக்குமதி கட்டுப்பாடு போன்ற காரணங்களால் நாட்டின் கைத்தொழில்கள் பாதித்துள்ளன.
இதன் காரணமாக இலங்கையில் பிரதான ஆடைத் தொழிற்சாலைகள் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக செய்திகள் கூறுகின்றன.
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தினால் அந்நிய செலாவணிப் பிரச்சினை மீண்டும் மோசமாகும் என்ற அபாயமும் இருக்கிறது. அது சிறிது சிறிதாக செய்ய வேண்டியதொன்றாகும்.
நாணய நிதியம் உருவாக்கித் தரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இது போன்ற பிரச்சனைகளை சமாளித்து வெளிநாட்டுக் கடன்களையும் செலுத்திக் கொண்டு கடன் பெறாத நிலைக்கு நாட்டின் பண்டங்களினதும் சேவைகளினதும் உற்பத்திகளை பெருக்கினால் மட்டுமே நெருக்கடி தீரும்.
அதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வாறானதோர் உற்பத்தித் திட்டமொன்று அரசாங்கத்திடம் இருப்பதாகவும் தெரியவில்லை.
தற்போபதைக்கு பொருளாதார நிலையில் ஏற்பட்டு இருக்கும் சாதகமான நிலையோடு ஜனாதிபதி மிக சாதூரியமாக அரசியல் எதிர்ப்புக்களையும் சமாளித்து வருகிறார்.
இரண்டு பேர் ஒரு பதாகையை பிடித்துக் கொண்டு வீதியில் இறங்கினாலும் ஒரு பொலிஸ் படையே அவர்களை சூழ்ந்து அவர்களை பிடித்து உள்ளே தள்ளும் விதமான ஓர் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
வரி அதிகரிப்புக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த போராட்டம் மிரட்டல் காரணமாக பிசுபிசுத்துப் போய்விட்டது. பெற்றோலியக் கூட்டுத்தாபன தெழிற்சங்கங்களின் போராட்டமும் கடும் நடவடிக்கைகளால் அடக்கப்பட்டது.
அதேவேளை, தற்போது பிரச்சினை தீர்ந்தது என்றும் ஜனாதிபதியின் திறமையே இதற்குக் காரணம் என்றும் பரவி வரும் அபிப்பிராயத்தின் காரணமாக நாட்டில் அரசியல் கட்சிகளும் அவற்றுக்கிடையிலும் சில நெருக்கடி நிலைமைகள் உருவாகி வருவதையும் அவதானிக்கூடியதாக இருக்கிறது.
தமக்கு வீசிய மக்கள் அலை குறைந்து விடும் என்று கருதும் மக்கள் விடுதலை முன்னணி இப்போது நாணய நிதியத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
நாணய நிதியமே நாட்டை காப்பாற்றியது என்றதோர் எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல்கள் மக்கள் விடுதலை முன்னணிக்கு பாதகமாக அமையலாம்.
அதேவேளை உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைமுறையில் காலவரைறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தமது பலத்தைக் காட்டி மக்களை தம்மோடு வைத்திருக்கும் வாய்ப்பையும் அக்கட்சி இழந்துள்ளது.
அதில் உண்மையில்லாமல் இல்லை. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக நாணய நிதியத்தின் உதவியை நாடவேண்டும் என்று 2021 ஆம் ஆண்டிலேயே அவர்கள் கூறினர். ஆனால் அப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதனை ஏற்கவில்லை.
பின்னர் கடந்த வருடம் மார்ச் மாதம் தான் கோட்டாபய அதனை ஏற்று நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை அரம்பித்தார். இப்போது ஹர்ஷ போன்றவர்கள் ஜனாதிபதி ரணிலை பாராட்டும் போது அது சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு சங்கடமான நிலைமையை உருவாக்குகிறது.
அதேவேளை இவர்கள் ரணிலின் தலைமையிலான அரசாங்கத்தில் இணையலாம் என்றதோர் சந்தேகமும் வலுவடைந்து வருகிறது.
பல கட்சிகளுக்குத் தாவி பழக்கப்பட்டவரான ராஜித சேனாரத்ன ஏற்கெனவே அரசாங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு ரணில் புதியவரல்ல. அவர் 2019 ஆம் ஆண்டு இறுதி வரை அவர்களது தலைவராக இருந்தவர்.
எனவே கட்சித்தாவல்கள் அல்லது கட்சிப் பிளவுகள் பற்றி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களிடையே எற்பட்டுள்ள அச்சம் நியாயமானதாகும்.
இதேபோன்றதொரு நிலைமை பொதுஜன முன்னணிக்குள்ளும் உருவாகியுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர போன்ற சிலர் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றனர்.
ஐதேகவும் பொதுஜன முன்னணியும் கூட்டாக ரணிலை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்றதொரு கருத்தும் நிலவி வருகிறது. அதனை முழுமையாக ஏற்க அக்கட்சியின் வேறு சிலர் மறுக்கின்றனர். கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியைச் சேர்ந்த ஒருவரே வர வேண்டும் என்பதே அவர்களது வாதமாகும்.
ஜனாதிபதித் தேர்தலின் போது இணைந்து செயற்பட்டாலும் பொதுத் தேர்தலின் போது இணைந்து செயற்படுவது இரு கட்சிகளுக்கும் இலகுவான விடயமல்ல. ஏனெனில் ஏற்கெனவே இரண்டு கட்சிகளிலும் தொகுதி அமைப்பாளர்கள் இருக்கின்றனர்.
இரண்டு கட்சிகளும் இணைந்தால் அமைப்பாளர் பதவிக்கு சகல தொகுதிகளிலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையே சண்டை ஏற்படும். சுருக்கமாக கூறுவதாயின் பொதுஜன முன்னணியின் சிலர் ஜனாதிபதியோடு தொடர்நது இணைந்து செயற்பட விரும்புகிறார்கள்.
வேறு சிலர் ஆபத்தின் போது ரணிலை பாவித்துவிட்டு கறிவேப்பிலையைப் போல் பின்னர் தூக்கியெறியவே நினைக்கின்றனர். எல்லாம் நாணய நிதியத்தின் திட்டத்தின் வெறியிலேயே தங்கியிருக்கிறது.
எம்.எஸ்.எம். ஐயூப்