♠ 3 பேரும் பல நாட்கள் திட்டமிட்டு ஆதிக் அகமதுவையும், அஸ்ரப்பையும் சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

♠ 3 பேரும் கொலைக்கான வியூகம் வகுத்தது எப்படி? திட்டத்தை அரங்கேற்றியது குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டனர்.

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல தாதாவாக திகழ்ந்தவர் ஆதிக் அகமது.

ஆதிக் அகமதுவின் சகோதரர் அஸ்ரப். இவரும் நிழலுலக தாதாவாக வலம் வந்தார். இருவரும் சேர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த பல்வேறு கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற குற்றங்களை செய்து வந்தனர்.

இதன் காரணமாக இருவர் மீதும் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 160 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகளில் கடந்த 2005-ம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ. ராஜூ பால் வழக்கு மிகவும் முக்கியமானது.

இந்த வழக்கு தொடர்பாக ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.

இருவரையும் விசாரணைக்கு பின்னர் ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரின் மற்ற வழக்குகள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை தொடங்கினர்.

இதற்காக அவர்களை 5 நாள் காவலில் எடுத்த போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றனர்.

கையில் விலங்குடன் அழைத்து செல்லப்பட்ட அவர்களை மருத்துவமனையின் முன்புறம் காத்திருந்த பத்திரிகையாளர்கள் கைது நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது பத்திரிகையாளர் கும்பலில் இருந்த 3 பேர் திடீரென ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

ஒருவன் ஆதிக் அகமதுவின் பின் தலையில் சுட, மற்ற இருவரும் முன்புறமாக நின்று சரமாரியாக சுட்டனர்.

சுமார் 24 ரவுண்டுகள் நடந்த துப்பாக்கி சூட்டில் ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரும் குண்டுகள் துளைக்கப்பட்டு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.

ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரும் சுட்டு கொல்லப்பட்டதும், அவர்களை சுட்ட நபர்கள் யாரும் அங்கிருந்து தப்பி செல்லவில்லை. மாறாக துப்பாக்கிகளை கீழே வீசிவிட்டு ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டபடி போலீசாரிடம் சரண் அடைந்தனர்.

அவர்களை கைது செய்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

இதில் 3 பேரும் பல நாட்கள் திட்டமிட்டு ஆதிக் அகமதுவையும், அஸ்ரப்பையும் சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

மேலும் அவர்கள் கொலைக்கான வியூகம் வகுத்தது எப்படி? திட்டத்தை அரங்கேற்றியது குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டனர்.

அதன்விபரம் வருமாறு:- ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் சுட்டு கொன்றவர்கள் அருண் மவுரியா, சன்னிசிங், லவ்லின் திவாரி என தெரியவந்தது.

3 பேருமே சிறு, சிறு திருட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். இவர்கள் மீது வேறு பெரிய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.

3 பேரும் சிறையில் இருந்த போது சந்தித்து நண்பர்களாகி உள்ளனர். அப்போது 3 பேரும் உத்தரபிரதேசத்தில் ஆதிக் அகமது, அஸ்ரப் சகோதரர்கள் போல் நாமும் மிகப்பெரும் தாதாவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

இதற்கு அவரை போல மிகப்பெரிய சம்பவங்களை நடத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். அப்போதுதான் ஆதிக் அகமதுவும், அஸ்ரப்பும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருப்பதை தெரிந்து கொண்டனர்.

அவர்களை கொன்று விட்டால் ஒரே நாளில் உத்தரபிரதேசம் முழுவதும் பிரபலமாகி விடலாம் என எண்ணினர்.

இதற்கான திட்டங்களை வகுக்க தொடங்கிய 3 பேரும் ஜெயிலில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் பிரயாக்ராஜில் உள்ள ஒரு லாட்ஜில் 3 பேரும் அறை எடுத்து தங்கினர்.

அங்கு இருந்தபடி ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் போலீசார் எப்போது கோர்ட்டுக்கு அழைத்து செல்வார்கள், மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு அழைத்து வரும் நேரம் போன்றவற்றை விசாரித்து தெரிந்து கொண்டனர்.

இதில் நேற்று முன்தினம் ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் போலீசார் பிரயாக்ராஜ் மருத்துவமனைக்கு அழைத்து வருவதை அறிந்தனர்.

அங்கு வைத்து அவர்களை போட்டு தள்ள முடிவு செய்த 3 பேரும் அதற்கான திட்டங்களை வகுத்தனர்.

ஆதிக் அகமது, அஸ்ரப் இருவருமே பிரபலமான தாதாக்கள் என்பதால் இருவருக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்பதை தெரிந்து கொண்ட கொலையாளிகள் 3 பேரும், ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரின் அருகில் செல்ல பத்திரிகையாளர் வேஷத்தை கையில் எடுத்தனர்.

இதற்காக போலி அடையாள அட்டை, மைக் மற்றும் சில தஸ்தாவேஜூகளை தயார்படுத்தி கொண்டு ஆஸ்பத்திரி வாயிலுக்கு சென்றனர்.

அங்கு மற்ற பத்திரிகையாளர்களுடன் இவர்களும் நிருபர்கள் போல் நின்றனர். ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததும் அங்கு பத்திரிகையாளர்கள் இருவரிடமும் சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.

அவர்களுக்கு ஆதிக் அகமது பதில் அளித்து கொண்டிருந்த போது அவரின் பின்னால் நின்ற அருண் மவுரியா முதலாவதாக ஆதிக் அகமதுவின் பின் தலையில் சுட்டான்.

வெகு அருகில் நின்று சுட்டதால் தோட்டா, ஆதிக் அகமதுவின் பின் தலையை துளைத்து சென்றது. அடுத்த வினாடி ஆதிக் அகமதுவின் முன்புறம் நின்ற சன்னிசிங், லவ்லின் திவாரி இருவரும் முன்புறமாக ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் நோக்கி சரமாரியாக சுட்டனர்.

ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் நோக்கி 24 ரவுண்டு சுட்டதில் தோட்டாக்கள் அவர்களின் உடல்களில் புகுந்து சல்லடையாக்கியது.

வினாடி நேரத்தில் இருவரும் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர். இவை அனைத்தும் சுமார் 22 வினாடிகளில் நடந்து முடிந்து விட்டது.

இந்த சம்பவத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு பத்திரிகையாளர், ஒரு போலீஸ்காரர் என 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் துப்பாக்கி சூடு நடக்கும் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சம்பவத்தை வேடிக்கை பார்த்தார்கள் என்றும், அதனை தடுக்க முயலவில்லை எனவும் புகார் எழுந்தது.

இதையடுத்து 17 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். அதோடு ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் சுட்டுக்கொல்ல கொலையாளிகள் கூறிய காரணம் உண்மைதானா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட ஆதிக் அகமது உத்திரபிரதேச மாநிலத்தில் மேற்கு அலகபாத் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

புல்பூர் பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இவருக்கு 5 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் உமர், 2-வது மகன் அலி ஆகியோர் ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி ஜெயிலில் உள்ளனர்.

3-வது மகன் ஆசாத் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். மற்ற 2 மகன்களும் மைனர்கள். எனவே அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ளனர்.

ஆதிக் அகமதுவின் மனைவி ஷாயிஸ்தா பர்வீன். இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் அவர் தலைமறைவாக உள்ளார், தற்போது ஆதிக் அகமது சுட்டுக்கொல்லப்பட்டதால் அவரது மனைவி ஷாயிஸ்தா பர்வீன் போலீசாரிடம் சரண் அடைவார் என தெரிகிறது.

உத்தரபிரதேசத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு கிரிமினல் சம்பவங்களில் ஈடுபட்டு பொது மக்களையும், அரசையும் கதிகலங்க வைத்த ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரும் கொல்லப்பட்டது மாநில மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. Atiq Ahmad ஆதிக் அகமது

 

Share.
Leave A Reply

Exit mobile version