ஒரு வண்டிக்கு சேதம் மற்றொரு வண்டியின் மாட்டுக்கு காயம்

மாட்டு வண்டிகளுடன் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று (15) சனிக்கிழமை அதிகாலையில் வயல் வேலைக்காக சென்று கொண்டிருந்த இரு மாட்டு வண்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த நபர் மோதியுள்ளார்.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மோட்டார் சைக்கிளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் ஒரு வண்டிலின் சக்கரம் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் மற்றுமொரு வண்டியின் மாட்டினது கால்கள் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சாய்ந்தமருது 12 ஐச் சேர்ந்த ஜமால்தீன் ஹாறூன் (42) என்பவரே மரணமடைந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதிபதி மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

இதன் பின்னர் மரணமடைந்தவரின் பிரேதம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்துக் குறித்து நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து நடைபெற்ற நிந்தவூர் மாட்டுப்பள்ளை பிரதான வீதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version