ராணுவ ஆட்சி நடைபெற்றுவரும் சூடானில், ராணுவப் படைக்கும், அதன் துணைப் படையான ஆர்.எஸ்.எஃப்-க்குமிடையிலான அதிகார மோதலில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.
மன்னராட்சியோ, காலனியாட்சியோ, ஜனநாயக ஆட்சியோ அல்லது ராணுவ ஆட்சியோ… அதிகாரம்,
அத்தனை எளிதாக ஒருவரின் கைகளில் கிடைப்பதில்லை. அதிகாரத்தின் பலன்கள் அனைத்தும் வலிமையின் கரங்களுக்கு மட்டுமே செல்கின்றன.
ராணுவ ஆட்சி நடைபெற்றுவரும் சூடானில், தற்போது ஆட்சியிலிருக்கும் ராணுவப் படைக்கும், அதன் துணை ராணுவப் படையான Rapid Support Forces என அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஃப்-க்கும் அதிகார மோதல் நிகழ்ந்துவருகிறது.
கடந்த சனிக்கிழமையன்று தலைநகர் கார்டோமில் (Khartoum) ஆரம்பித்த இந்த மோதல் தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.
நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த மோதலில் இதுவரை மட்டும் 200-க்கும் மேற்பட்டோர்கள் பலியாகியிருப்பதாகவும், 1,800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய அதிகார மோதல் என்பது இன்றைக்குத் தொடங்கியதல்ல, பல தசாப்தங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. அதை அரங்கேற்றிக்கொண்டிருக்கும் கைகள் மட்டும் மாறிக்கொண்டிருக்கிறது.
விளைநிலங்கள், எண்ணெய் வளம் எனப் பல வளங்களைக் கொண்டிருக்கும் சூடான், வடகிழக்கு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும்.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்த சூடான் 1956-ல் விடுதலை பெறுகிறது. இந்த நாட்டில் இஸ்லாமியர்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர்.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு அரசியல் கட்சிகள் ஆட்சியும் நடந்துவந்தது. அவ்வப்போது கிளர்ச்சி நிகழ்ந்தபோதும் ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவந்த சூழலில், 1989-ல் அப்போது பிரதமராகப் பதவி வகித்துவந்த சாதிக் அல்-மஹ்தியை (Sadiq Al-Mahdi), ராணுவத் தளபதி ஒமர் அல்-பஷீர் (Omar al-Bashir) ராணுவப் படையுடன் சிறைப்பிடித்து நாட்டில் ராணுவ ஆட்சியை நிறுவினார்.
ஒமர் அல்-பஷீர்
பின்னர் ஒமர் அல்-பஷீர், 1993-ல் சூடானின் அதிபராகவும் தன்னை அறிவித்துக்கொண்டார். 1989 முதல் 2019 வரை 30 ஆண்டுக்காலம் சர்வாதிகார ஆட்சியை நடத்திவந்தார் ஒமர் அல்-பஷீர்.
தேர்தல்களும் நடத்தப்படவில்லை. ஆனால், எத்தகைய யதேச்சதிகார சக்தியும் மக்கள் கிளர்ச்சியின் முன் எப்படி மண்டியிடுமோ அதுபோல, ஒமர் அல்-பஷீரின் சர்வாதிகார ஆட்சி 2019-ல் ராணுவத்தின் உதவியோடு மக்கள் போராட்டத்தால் முடிவுக்கு வந்தது.
மீண்டும் ஜனநாயக நம்பிக்கை விதைத்த ராணுவமும், இறையாண்மைக் குழுவின் ஆட்சியும்!
ஒமர் அல்-பஷீரின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக ஆட்சி மீண்டும் கொண்டுவரப்படும் என ராணுவம் உறுதியளித்தது.
அதுவரை இடைக்கால ஆட்சி அமைக்க முடிவுசெய்யப்பட்டபோது, மக்கள் போராட்டப் பிரிவினரும் ஆட்சியதிகாரத்தில் பங்குபெற நினைக்க, ராணுவமும், மக்கள் போராட்ட பிரதிநிதிகளும் இணைந்த இறையாண்மைக்குழு 2019 ஆகஸ்டில் ஆட்சிப் பொறுப்பேற்றது.
அப்தல்லா ஹாம்டோக்
சூடானின் இடைக்கால பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் (Abdalla Hamdok) பதவியேற்றார். மேலும், 2023-ம் ஆண்டு ஜூலையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
மீண்டும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு மடைதிருப்பிய ராணுவம்!
ஜனநாயக நம்பிக்கையுடன் தொடங்கிய இந்த இறையாண்மைக் குழுவின் ஆட்சி முழுமையாக நீடிக்கவில்லை.
ராணுவத்துக்கும், ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் தலைவர்களுக்குமிடையே நிர்வாகம் சார்ந்த கொள்கைகளில் முரண்பாடு ஏற்படவே, 2021-ல் ராணுவம் மீண்டும் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தியது.
அப்போது பிரதமராக இருந்த அப்தல்லா ஹாம்டோக் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டது.
ராணுவ தளபதி ஃபட்டாஹ் அல்-புர்கான்
ராணுவ தளபதி அப்தல் ஃபட்டாஹ் அல்-புர்கான் (Abdel Fattah Al-Burhan), நிர்வாகத் தவறுகள் காரணமாக ராணுவம் தலையிடவேண்டி ஆட்சி கலைக்கப்பட்டதாகவும், 2023-ல் தேர்தல் நடக்கும்வரை சூடானில் ராணுவ ஆட்சியே இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து கவுன்சில் ஒன்றை அமைத்து ஆட்சி நடத்த ராணுவம் முன்வர, கவுன்சிலின் தலைவராக ராணுவ தளபதி ஃபட்டாஹ் அல்-புர்கானும், துணைத் தலைவராக ஆர்.எஸ்.எஃப் (Rapid Support Forces (RSF)) தலைவர் முகமது ஹம்தான் டகாலோவும் (Mohamed Hamdan Dagalo) பதவியேற்றனர்.
ஜனநாயகத்தை எதிர்பார்த்த மக்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தவே, ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப ஆரம்பித்தனர்.
ராணுவங்களுக்கிடையே அதிகார மோதலும், அப்பாவிகளின் மரணங்களும்!
தற்போது சூடான் ஆட்சியதிகாரத்தில் துணைத் தலைவராக இருக்கும் ஆர்.எஸ்.எஃப் தலைவர் முகமது ஹம்தான் டகாலோ மீதும், அவரின் படையின்மீதும் பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
அதில் ஒன்று, 2019-ல் ராணுவ தலைமையகத்தின் முன்பு போராட்டம் நடத்திய 120 பேர்களை ஆர்.எஸ்.எஃப் சுட்டுக்கொன்றது.
ராணுவ ஆட்சி மீதான மக்களின் வெறுப்புக்கு இதுவும் ஒரு காரணம். இன்னொருபக்கம் ஆர்.எஸ்.எஃப்-ஐ, ராணுவப் படையுடன் இணைக்க திட்டமிடப்பட்டது.
இதுதான் தற்போது அதிகார மோதலுக்கு ஆரம்பப்புள்ளி. ஒருவேளை ராணுவத்துடன் ஆர்.எஸ்.எஃப் இணைக்கப்பட்டால் யார் அதன் தலைவராக இருப்பார் என்பதே இந்த அதிகார மோதலின் முக்கியக் காரணம்.
ஃபட்டாஹ் அல்-புர்கான் – முகமது ஹம்தான் டகாலோ
இதனால்தான் ராணுவ தளபதி ஃபட்டாஹ் அல்-புர்கானுக்கும், ஆர்.எஸ்.எஃப் தலைவர் முகமது ஹம்தான் டகாலோவுக்கும் அதிகார மோதல் நடக்கிறது.
இருப்பினும் இந்த மோதலில் முதல் அடியை யார் எடுத்துவைத்தார் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், தலைநகர் கார்டோமில் விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றை ஆர்.எஸ்.எஃப் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதேசமயம், இந்த அதிகார மோதலில் 200-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் துப்பாக்கி, பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாகியிருக்கின்றனர்.
Intense clashes broke out in Sudan’s capital Khartoum on Saturday between the army and the Rapid Support Forces paramilitary group, following days of tension between the two sides ⤵️ pic.twitter.com/ZrC8jcITVX
— Al Jazeera English (@AJEnglish) April 15, 2023
1,800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். இந்த மோதல் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் வலியுறுத்திவருகின்றன. ஆனாலும், மோதல் நிற்காமல் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
துப்பாக்கி, பீரங்கிகளின் சத்தகங்களுக்கிடையில் அப்பாவி மக்களின் அழுகுரல்களும் ஓயுமா என்பதையும், மக்களின் ஒரே எதிர்பார்ப்பான ஜனநாயகம் மீண்டும் தழைக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்…