சோழர்கள் இலங்கையை கைப்பற்றிய பின்னர் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? தமிழ் – சிங்கள முரண்பாட்டுக்கு அதுதான் காரணமா?

வட இலங்கையை வென்ற ராஜராஜ சோழன்

இலங்கையின் வடப் பகுதி ஊடாக, கி.பி 993ஆம் ஆண்டு முதலாம் ராஜராஜ சோழன், நாட்டிற்குள் படையெடுத்து வந்து, இலங்கையின் வடப் பகுதியை கைப்பற்றினார்.

ராஜராஜ சோழனின் வெற்றியானது, வட இலங்கையின் வெற்றியாகவே கருதப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ராஜராஜ சோழனை தொடர்ந்து, இலங்கைக்கு வருகைத் தந்தார் ராஜேந்திர சோழன்.

1012ம் ஆண்டு ராஜேந்திர சோழன், முழு இலங்கையையும் வெற்றிக் கொண்டு, இலங்கையை சோழர்களின் 9வது நிர்வாக மண்டலமாக தஞ்சையுடன் இணைத்துக்கொண்டுள்ளார்.

சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கை மும்முடிச் சோழ மண்டலம் என்றே அழைக்கப்பட்டுள்ளது.

அதாவது சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆயினும் இலங்கையின் தென்பகுதியான ருகுணு இராச்சியம் 24 வருடங்கள் ஜந்தாம் மகிந்த மன்னன் தலைமையில் சோழர் இடையூறு இன்றி ஆட்சி நடத்தி வந்தது.

அதன்பின்னர், வள நாடு, நாடு, கூற்றம், அகரம், பீடாகை என பல்வேறு சிறு நிர்வாக பிரிவுகளை கொண்டிருந்ததாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

திருகோணமலை, ஐந்து வள நாடுகளாக பிரிக்கப்பட்டு சோழர்களினால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.

வட இலங்கையில் மாதோட்டம், அருண்மொழிதேவ வள நாடு என்ற பெயரிலே ஆட்சி செய்யப்பட்டது.

சோழர்கள் இலங்கைக்கு வருகைத் தந்த சமயத்தில், இலங்கையின் தலைநகரமாக அநுராதபுரம் விளங்கியது.

எனினும், சோழர்கள் இலங்கையை கைப்பற்றியதன் பின்னர், பொலன்னறுவையை தமது தலைநகரமாக அறிவித்தனர்.

சோழர்களினால் தற்போதைய பொலன்னறுவை, ஜனநாதமங்களம் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் ஜனநாதமங்களம், தலைநகராக அறிவிக்கப்பட்டு, ஆட்சி தொடர்ந்துள்ளது.

இலங்கையில் சோழர் காலம்

சோழர்களின் ஆட்சியில் நிர்வாகம், தமிழ் மொழியில் இருந்துள்ளதுடன், இந்து மதம் அரச மதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், சோழர்களின் அரசியல், பண்பாட்டு, ராணுவ நடவடிக்கைகள் பொலன்னறுவையை விடவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

பொலன்னறுவைக்கு அடுத்தப்படியாக, உப தலைநகர் என்ற அந்தஸ்த்தை திருகோணமலை பெற்றுக்கொண்டுள்ளமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன.

திருகோணமலையை சோழர்கள் உப தலைநகரமாக பிரகடனப்படுத்த, பிரதான காரணங்கள் இருந்துள்ளன.

குறிப்பாக தென் இலங்கையிலிருந்து ஏற்படக்கூடிய படையெடுப்புக்களை சோழர்களினால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்துள்ளது என பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.

சோழர்களின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக இருந்துள்ளது.

”சோழர்களின் கடல்சார் கொள்கை, கடல்சார் வர்த்தக நடவடிக்கையில் மேற்கே இஸ்லாமியரை கட்டுப்படுத்துவதும், கிழக்கே தென் கிழக்காசிய நாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் இலங்கை மிக முக்கியமானதொரு கேந்திர நிலையமாக காணப்பட்டதனால், அதற்கு திருகோணமலை, ஊர்காவற்துறை ஒரு முக்கிய தளங்களாக இருந்துள்ளது.

அவர்களுடைய கல்வெட்டுக்களில் திருகோணமலை, ஊர்காவற்துறை ஆகியன முக்கிய இடங்களாக சொல்லப்படுகின்றன,” என பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறே, கி.பி 993ம் ஆண்டு முதல் 1070ம் ஆண்டு வரையான காலம் சோழர்களின் ஆதிக்கத்தில் இலங்கை இருந்துள்ளது.

”முதல் முறையாக இலங்கையை ஒரு அந்நிய அரச வம்சம் கைப்பற்றி, ஆட்சி செய்தது என்று சொன்னால், சோழர்களின் ஆட்சியிலேயே அதனை காண முடிகின்றது என்று சொல்லலாம்,” என அவர் கூறுகின்றார்.


சோழர்களினால் இலங்கை தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம்?

பொலன்னறுவையிலிருந்து சோழர்களின் ஆட்சி மறைந்தாலும், தமிழ் பிரதேசங்களில் அவர்களுடைய ஆட்சி ஐரோப்பியர் காலம் வரை நிலவியமைக்கான நம்பகரமான கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை – கோமாரன்கடவல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் அது மிகவும் தெளிவாக உறுதிப்படுத்துவதாக பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

சோழர்களின் ஆட்சி, தமிழர் பகுதியில் வாழ்ந்த தமிழர்களுடன் இணைந்ததாக இருந்திருக்கும் என நம்புவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

சோழர்களின் ஆட்சிக்கு பின்னர், அவர்களின் ஆதிக்கம் கிழக்கு இலங்கையில் இருந்துள்ளது.

குறித்த பகுதிகளில் சோழர்களினால் பல இந்து ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

சோழர்களுடன் இலங்கைக்கு வருகைத் தந்தவர்கள், சோழர்களின் ஆட்சி முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் தமிழகம் செல்லாது இலங்கையிலேயே தங்கியுள்ளமைக்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன.

இதனால், தமிழர் பகுதிகளில் மேலும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

வட இலங்கையில் தமிழ் அரசு உருவாவதற்கு அஸ்திவாரம் இட்டவர்கள் சோழர்கள் என அவர் கூறுகின்றார்.

இந்த விடயங்கள் கல்வெட்டுக்களின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

, பொலன்னறுவை பகுதி

தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள்

சோழர்களின் ஆட்சியின் பின்னர், இலங்கை தமிழர்கள் மத்தியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

”நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எப்படி என்று சொன்னால், பக்தி இயக்கத்திற்கு பிறகு செல்வாக்கான இலங்கையில்; இந்து – பௌத்தம் என்ற சமய வேறுபாடு ஏற்பட்டது.

அந்த சமய வேறுபாடு, இன முரண்பாடாக மாறியது. இந்த மாற்றத்திற்கு முன்னர் தமிழர்கள் பொதுவாக வடகிழக்கில் வாழ்ந்துக்கொண்டிருந்த அதேநேரம், தென் இலங்கையில், குறிப்பாக அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களிலும் தமிழர்கள் பரவலாக வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் உண்டு.

தமிழ் – சிங்கள முரண்பாடும், பௌத்த – இந்து முரண்பாடும் சிங்கள மக்களிடையே, தமிழர்களிடையே ராணுவ ரீதியாக, அரசியல் ரீதியாக தங்களது தனித்துவத்தை பேணிக் கொள்வதில் முனைப்பு பெற்றார்கள் என்பது தான் பேராசிரியர் பந்தநாதனுடைய கருத்தாகும்.” என்கிறார் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம்.

மேலும், “இந்தொரு சூழ்நிலையிலே வடகிழக்கு இலங்கைக்கு அண்மையில் தமிழகம் இருந்தது மட்டும் அல்லாமல், மொழி, மதம், பண்பாடு, வாழ்க்கை முறையிலும் தமிழகத்தோடு, தமிழர்களுக்கு ஒற்றுமை காணப்பட்டமையினால், பல்லர் ஆட்சியை தொடர்ந்து, வடகிழக்கு இலங்கை தமக்கு பாதுகாப்பானது என கருதி செறிவாக வாழ்ந்தார்கள் என்பது தான் உண்மை.” என அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பாக உணர்ந்த தமிழர்கள்

பொலன்னறுவை பகுதி

“நான் மாத்திரம் சொல்லவில்லை. கே.எம்.டி.சில்வா போன்றோர் சொல்கின்றார்கள். அவரே சொல்கின்றார், தென்னிந்தியாவிலிருந்து படையெடுப்புக்கள் நிகழும் போது, தமிழர்கள் வாழ்ந்த பிராந்தியம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது என்றும் அவர் கூறுகின்றார்;.

அப்படி ஏற்பட்ட அந்த மாற்றத்தை பலமாக உறுதிப்படுத்தி, வடகிழக்கு இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழ்வதற்கான பலத்தை உருவாக்கியவர்கள் சோழர்கள். சோழர்களின் ஆட்சியின் விளைவு தான், வட இலங்கையின் தமிழர் பிரதேசங்களுக்கு ஒரு மன்னன் ஆளுகைக்கு உட்பட்ட அரசு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்பது இப்போது கிடைத்து வரும் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன” என அவர் கூறுகின்றார்.

 

இலங்கையில் இருக்கக்கூடிய இனப் பிரச்னை, சோழர்களின் வருகையுடன் தொடர்புப்படுகின்றதா?

இதுகுறித்து பேசிய பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம், ”இல்லை, இனப் பிரச்னை என்பது சரியாக ஐரோப்பியர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்றை படித்தால், இன முரண்பாடு, சமய முரண்பாடு என்பது மிக குறைவு.

அரசியல் மேலாதிக்கம் பெறுவது தான் முக்கிய போராட்டமாக இருந்தது. பொலன்னறுவையை பார்த்தால், பொலன்னறுவை அரச வம்சத்தில் 40 வீதமானோர் தமிழர்கள்.

பொலன்னறுவை அரசியலை பார்த்தால், அரசியலும், அரசர்களும் 40 வீதமானோர் இந்துக்கள். பொலன்னறுவையில் பல கோவில்களை புனரமைப்பு செய்வதற்கும், கட்டுவதற்கும் சிங்கள மன்னர்கள் மிக முக்கிய காரணமாக இருந்தார்கள்.

பொலன்னறுவை அரச சபையில் பௌத்த துறவிகளை விடவும், பிராமணர்கள் தான் மேலோங்கிக் காணப்பட்டார்கள்.

தென்னிலங்கையில் கோட்டை அரசை பார்த்தால் அவர்களுடைய பௌத்த பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக படிப்பிக்கப்பட்டது. பௌத்த துறவிகள் தமிழை நன்கறிந்திருந்தார்கள். பல இடங்களில் சிங்கள கல்வெட்டுக்களும், தமிழ் கல்வெட்டுக்களும் பக்கம் பக்கமாக காணப்படுகின்றது. பௌத்த ஆலயங்களில் இந்து விக்கிரகங்களை வைத்து வழிபடப்பட்டது.” என்கிறார் அவர்.
‘இன்றையை நிலையை வரலாற்றோடு ஒப்பிட முடியாது’

“வரலாற்றை வரலாறாக பார்க்காமல் சமகால அரசியல் நிலையிலிருந்து கடந்த கால நிலைமையை பார்க்கக்கூடாது. பௌத்தம் என்று சொன்னவுடன், அது சிங்கள மக்களுக்கு உரியது என பார்க்கக்கூடாது.

அதை பண்பாட்டு எச்சமாக பார்க்க வேண்டும். ஒரு இனத்தின் அடையாளமாக பார்க்கக்கூடாது. எந்தவொரு மதமும் இன்னொரு நாட்டில் பரவும் போது, குறிப்பிட்ட மொழி பேசும் மக்களுக்காக பரவுவது இல்லை.

இன்றைய நிலையில் பார்த்து, கடந்த கால தமிழ் சிங்கள உறவுகளையோ, பௌத்த இந்து மத உறவுகளையோ பார்ப்பது மிக தவறு.

விஜயனுக்கும் 700 தோழர்களுக்கும், பாண்டிய நாட்டிலிருந்து தான் மணப் பெண்களை எடுத்துள்ளார்கள்.

திருமண உறவின் நம்பிக்கையில் பண்டியர்களே நண்பர்களாகவும், சோழர்களே எதிரியாகவும் பார்க்கின்ற ஒரு மரபு வரலாற்று இலக்கியங்களில் இருக்கின்றது. அதன் வெளிப்பாடு தான் பிற்கால ஆய்வுகளில் ஒரு தமிழ் – சிங்கள முரண்பாட்டிற்கு காரணம்” என பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version