யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் உள்ள விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு விடுதி உரிமையாளர் மீது சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் நடத்தியமை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணவன் மனைவி ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நல்லூர் பகுதியில் உள்ள விடுதிக்கு வியாழக்கிழமை (21) இரவு 03 பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட கும்பல் கார் ஒன்றில் வந்து இறங்கி , விடுதி மீது தாக்குதல் மேற்கொண்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டு உள்ளதாகவும் , கண்காணிப்பு கெமரா கட்டுப்பாட்டு தொகுதியை உடைத்து தம்முடன் எடுத்து சென்றுள்ளதாகவும் விடுதி உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விடுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சியொன்றின் அலுவலகமொன்று இயங்குவதுடன் உரிமையாளர் அரசியல் கட்சியின் அமைப்பாளராகவும் செயற்படுகிறார்.

ஆனபோதும் அரசியல் கட்சி அலுவலகத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பதுடன் குறித்த தாக்குதலுக்கு தனிப்பட்ட குடும்ப விவகாரமே காரணம் என்று தெரியவருகிறது.

இந்நிலையில் விடுதி உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version