சிலாபம் , முனுவங்கம பிரதேசத்தில் மனைவியைக் கடத்திச் சென்ற கணவர் இன்று (22) சிலாபம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி கடத்திச் சென்ற தனது 18 வயது திருமணமான இளம் மனைவியுடன் அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார்.

இதன்படி, குறித்த பெண்ணின் கணவர் எனக் கூறப்படும் தம்புள்ளையைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்து தமது மகள் கடத்தப்பட்டதாக குறித்த பெண்ணின் பெற்றோர் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சிலாபம் தலைமையக பொலிஸ் குழுவொன்று தம்புள்ளை பகுதிக்கு சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ் குழுவொன்று தம்புள்ளை பகுதிக்கு சென்றிருந்த போதிலும் சந்தேக நபரான கணவரையும் கடத்தப்பட்ட யுவதியையும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் சந்தேக நபரின் உறவினர் ஒருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார்.

அதன்பிறகு, அந்த சந்தேக நபர் சம்பந்தப்பட்ட பெண்ணுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குறித்த யுவதி கடத்தப்பட்ட பின்னர் கொழும்பு மாளிகாவத்தை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் சிற்றப்பா திட்டமிட்டு இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி சந்தேக நபரின் சிற்றப்பாவும் குறித்த கடத்தலின் போது இருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிற்றப்பா என்ற சந்தேக நபர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர் அண்மையில் சிறைச்சாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவருக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்தப்பட்ட யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்தல் சம்பவத்தையடுத்து அவர் அச்சத்தில் இருப்பதாகவும், இது கடத்தல் அல்ல என பொலிஸாரிடம் தெரிவிக்குமாறு சந்தேகநபர்கள் அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

கடத்தல் என்று கூறினால், சிறையிலிருந்து வந்து தன்னையும், தன் பெற்றோரையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக, பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த கடத்தலில் ஈடுபட சந்தேகநபரின் தந்தை மற்றும் சிற்றப்பா உட்பட ஐவர் இணைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பெண்ணை கடத்த பயன்படுத்திய வேன் வாடகை அடிப்படையில் பெறப்பட்டதாகவும், குறித்த வேன் வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்கும் நிறுவனத்திற்கு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரினால் வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version