யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை வெட்டி படுகொலை செய்தவர்கள் வீட்டில் நின்ற நாய் ஒன்றினையும் வெட்டி காயப்படுத்தியுள்ளனர்.

நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை ஐந்து முதியவர்கள் வெட்டுகாயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டனர். ஒரு முதியவர் காயங்களுடன் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டில் நின்ற அவர்களின் வளர்ப்பு நாய் கழுத்தில் வெட்டு காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நாய் பயத்தினால் வீட்டின் ஒரு மூளையில் சுருண்டு படுத்துள்ளதுடன், அதன் கண்களில் மிரட்சியும் தெரிகிறது.

நாய் தனது எஜமானர்களை காப்பாற்ற போராடிய போது நாய் மீது கொலையாளிகள் தாக்குதல் நடத்தி வெட்டி காயமேற்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதேவேளை கொலையான ஒருவரின் அடையாள அட்டை வீட்டின் வெளியே காணிக்குள் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் , திறப்பு ஒன்றும் வெளியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொலையானவர்கள் எவரும் தூக்கித்தில் கொல்லப்படவில்லை. ஏனெனில் அவர்களின் இருவரின் சடலங்கள் வீட்டின் வெளியே காணப்படுகிறது. அதனால் அவர்கள் கொலையாளிகளிடம் இருந்து தப்பியோட முற்பட்டு கொலையாகி இருக்கலாம்.

மற்றுமொரு பெண்மணியின் சடலம் கட்டிலின் கீழே அவரது கால்கள் தொங்கிய நிலையில் காணப்படுவதனால் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டு வெட்டிய போது அவர் கட்டிலின் மேல் சரிந்து விழுந்தமைக்கு ஏது நிலையே காணப்படுகிறது.

அதேபோன்று ஜன்னல் ஓரமாக மீட்கப்பட்டவரின் சடலம் உள்ள ஐன்னல் குந்து மேல், சுவர் மீது இரத்தம் தெறித்து, வழிந்தோடிய அடையாளங்கள் காணப்படுவதனால் , அவர் நிற்கும் நிலையிலையே வெட்டப்பட்டுள்ளமைக்கான ஏது நிலை காணப்படுகிறது.

எனவே எவரும் நித்திரையில் இருக்கும் போது படுகொலை செய்யப்படவில்லை என நெடுந்தீவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை , வெளிநாடொன்றில் இருந்து அந்நாட்டினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்ட நபர் ஒருவர் , குறித்த வீட்டில் இவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில், அவரை நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு முதல் பொலிஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share.
Leave A Reply

Exit mobile version