சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு அறிவிப்பு படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

2016-ல் அறிவிக்கப்பட்ட ’அயலான்’ படத்தின் தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

2015-ல் ரவிக்குமார் இயக்கத்தில் ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

Time Travel படமான இதன் திரைக்கதை மிகவும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகின.
விளம்பரம்

இதனைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பர் R.D. ராஜாவின் 24 AM Studios நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தை ரவிக்குமார் இயக்க இருப்பதாக 2016-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் பணியாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், படம் குறித்த எதிர்பார்ப்பு பன்மடங்காக இருந்தது.

அதற்கேற்ப, ”அறிவியல் புனைவான இந்தப் படம் தன் திரை வாழ்க்கையில் மிக முக்கியமானது பெரும் பொருட்செலவில் உருவாக இருப்பதாக இதை தொடங்க சில மாதங்கள் ஆகும்” என ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்ர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில், வேலைக்காரன், சீம ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு 2018-ம் ஆண்டு ‘அயலான்’ படப்பிடிப்பு தொடங்கியது.

வேற்றுக்கிரகவாசியை மையப்படுத்திய திரைப்படம் என பேசப்பட்ட நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர், ‘அயலான்’ என படத்தின் தலைப்பையும் வெளியிட்டனர்.

ரகுல் ப்ரீத்சிங் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, சென்னையில் நடந்த படப்பிடிப்பிலும் பங்கேற்றார்.

பெரும்பாலான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்ட ‘அயலான்’ படத்தில் யோகி பாபு, பாலசரவணன், இஷா கோபிகர், கருணாகரன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் பங்கேற்றனர்.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில், 2019-ல் படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால், சிவகார்த்திகேயனே பொருளாதார உதவி செய்ய முடிவெடுத்தார்.

மேலும், தயாரிப்பாளருக்கும், பைனான்சியருக்கும் ஏற்பட்ட பிரச்னையையும் சிவகார்த்திகேயனே தீர்த்து வைக்க முடிவெடுத்து, பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார். அதனால், சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், KJR Studios நிறுவனத்திற்கு படம் கைமாறியது.

அந்நிறுவனம் அடுத்தடுத்து படங்களை தயாரித்து வெளியிட்டு வந்ததால், ‘அயலான்’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என்கிற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

மேலும், 75 விழுக்காடு படப்பிடிப்பு முடிவடைந்தது விட்டதாகவும், 30 நாட்கள் படப்பிடிப்பே மீதமிருப்பதாகவும் சிவகார்த்திகேயன் அறிவித்தார்.

இதற்கிடையில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ‘வேற லெவல் சகோ’ எனும் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

தன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதை ‘Dream come true’ என ஏற்கனவே குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், தன் பிறந்தநாளில் இந்தப் பாடல் வெளியானது பெருமகிழ்ச்சி என தெரிவித்தார்.

இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று மீண்டும் படத்திற்கு தடையாக வந்தது. இதனால் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு, 2021 ஜனவரியில் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்தனர்.

அந்த நேரத்தில், தயாரிப்பு நிறுவனமான 24 AM Studios, Tag Entertainment நிறுவனத்திடம் இருந்து பெற்ற ₹ 5 கோடியை திருப்பித்தரும் வரை படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

’அயலான்’ படத்திற்கு பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டபோதும், படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதால் படத்தொகுப்பு, VFX உள்ளிட்ட பின் தயாரிப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் ரவிக்குமார்.

படத்தின் தாமதத்திற்கான காரணத்தை குறிப்பிடுகையில், வழக்கமாக ஒரு படத்திற்கு 3 முதல் 4 மாதங்கள் முன் தயாரிப்பு பணிகள் நடைபெறும். இன்னும் அதிகமானால், 6 மாதங்கள் செய்வார்கள். ஆனால், அயலானுக்கு அது ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டது.

முதல் காட்சித் தொடங்கி இறுதி காட்சி வரை முழுமையாக திட்டமிட்டே பிறகு படப்பிடிப்பை தொடங்கினோம் என்கிறார் இயக்குநர் ரவிக்குமார்.

அதுமட்டுமின்றி, தயாரிப்பு மற்றும் கொரோனா பிரச்னைகளையும் தாண்டி படத்தின் தரத்தில் சிறு குறையும் வந்துவிடக்கூடாது என கடின உழைப்பை ஒட்டுமொத்த குழுவும் கொட்டிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கிறார் இயக்குநர்.

பெரும்பான்மை படங்களில் வேற்றுகிரகவாசி என்றால் நடிகர்களுக்கு ஒப்பனை செய்து படப்பிடிப்பை நடத்துவார்கள். ஆனால், அயலானில் முழுக்க முழுக்க, ஏலியனை VFX-ல் உருவாக்கி இருக்கிறார்கள்.

அதற்காக, ஒரு சிறுவனை நிற்க வைத்து அதற்கேற்ப படப்பிடிப்பை நடத்தி பிறகு VFX-ல் ஏலியன் கதாப்பாத்திரத்தை இடம்பெறச் செய்கிறார்கள்.

இரண்டரை மணி நேர திரைப்படத்தில் 2 மணி நேரம் ஏலியன் கதாப்பாத்திரம் இடம்பெறும் என குறிப்பிடும் இயக்குநர் ரவிக்குமார், அதனால், ஒவ்வொரு காட்சியையும் அனிமேஷனில் உருவாக்கி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு காட்டியபிறகே படப்பிடிப்பை நடத்தியதாகவும், அது படக்குழுவினர் அனைவருக்கும் பெரும் சவாலாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

அயலான் படத்திற்கான VFX பணிகளை Phantom FX நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பல்வேறு ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றியிருக்கும் இந்த நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான வரைகலை கலைஞர்கள் இந்தப் படத்திற்கான பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டு வருவதாக கூறும் இயக்குநர்,

ஹாலிவுட் படங்களில் பெரும் பொருட்செலவில் செய்யும், VFX, Graphics பணிகளை அதே தரத்தில், நமது பட்ஜெட்டில் செய்ய வேண்டியது பொறுப்பை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறார்.

 

இரண்டாவது பட இயக்குநராக எனக்கே பல்வேறு புதிய அனுபவங்களை அயலான் கற்று கொடுத்திருக்கிறது. அதை ரசிகர்களுக்கு காண்பிக்க ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.

பார்வையாளர்களும் இதை அங்கீகரிப்பார்கள் என்கிற பெரும் நம்பிக்கையோடு தீபாவளிக்கு படம் திரைக்கு வர இருக்கும் அறிவிப்பு மமிழ்ச்சியையும் அளித்திருக்கிறது என தெரிவிக்கிறார் இயக்குநர் ரவிக்குமார்.

அயலான் படத்தின் வெளியீட்டை அறிவித்துள்ள தயாரிப்பாளர் கே.ஜே. ராஜேஷ், “அயலான் திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி, இந்த திரைப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்காக பெரும் மெனக்கெடலுடன் பணியாற்றி வருகிறோம்.

ஒரு Pan Indian திரைப்படமான இதில், அதிக எண்ணிக்கையிலான கிராஃபிக்ஸ் காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக ‘அயலான்’ உருவாகி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

’அயலான்’ படத்தின் வெளியீட்டு அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், ”இந்த தீபாவளியின்போது உயரப் பறப்போம்”என்ற பதிவுடன் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

அதேபோல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “நமது அயலான் வெளியாக தயாராகி விட்டது. இந்த தீபாவளி பண்டிகையை இன்னும் சிறப்பாக கொண்டாடுவோம்” எனவும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அயலான்

’அயலான்’ திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு கூடுதலான கால அவகாசம் தேவைப்பட்டது. திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம், பார்வையாளர்கள் அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், 4500-க்கும் மேற்பட்ட VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’இருக்கும் என்பதை இங்கு பதிவு செய்வது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது எனவும் தயாரிப்பாளர் கே.ஜே. ராஜேஷ் கூறுகிறார்.

அதோடு, கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக பொறுமையுடன் இடைவிடாத ஆதரவினை வழங்கி வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று படக்குழுவினர் சார்பில் தான் உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அயலான் திரைப்படம் தமிழில் தயாராகி இந்தி, மலையாளம், தெலுகு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் திரைக்கு வரவுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version