ராஜபக்சக்களின் குடும்ப கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராக பேராசிரியர் உத்துரவல தம்மாரத்ன தேரோ நியமிக்கப்பட்டுள்ள விடயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

முன்பதாக  கட்சியின் தவிசாளராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மகிந்த அணியினரின் அதிருப்தியாளர் பட்டியலில் இணைந்து விட்டதால் அவருக்குப் பதிலாக பிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவித்தலை கடந்த வாரம் வெளியிட்டார். கட்சியின் நிர்வாகக் குழுவினர் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.

 

எனினும் சட்டரீதியாக இது செல்லாது என்றும் இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இப்போது அதுவல்ல பிரச்சினை. மொட்டு கட்சி ஏன் ஒரு கல்வி பின்புலம் கொண்ட பெளத்த பிக்குவை கட்சியின் தலைமைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.

முதலில் இந்த உத்துரவல தம்மாரத்ன தேரோ யார் அவரின் பின்னணி என்ன என்பதை ஆராய வேண்டும். இவர் ஒரு கல்வியியலாளர் ஆவார்.

பெளத்த பாளி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பீடாதிபதியாகவும் விளங்கி பின்பு துணைவேந்தராகவும் பணியாற்றியவர்.

கல்வி புலத்தில் இவருக்கு நல்ல மரியாதையும் கெளரவமும் உள்ளது.  கடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் இவர் மொட்டு கட்சிக்கு தனது ஆதரவை வழங்கியிருந்ததோடு அக்கட்சி வேட்பாளர்கள் சார்பாக மக்களிடம் கருத்துக்களையும் தெரிவித்திருந்தார் என்பது முக்கிய விடயம்.

தமது மோசமான நிர்வாக செயற்பாடுகள் , ஊழல் குற்றச்சாட்டுகளால் நாட்டு மக்களின் எதிர்ப்பையும் வெறுப்பபையும் சம்பாதித்த ராஜபக்சக்கள், போர் வெற்றி கதையெல்லாம் இனி எடுபடாது என மதவாதத்தை கையிலெடுப்பது தான் ஒரே வழியென இவரைப் பிடித்துள்ளதாகவே தெரிகின்றது.

உத்துரவல தம்மாரத்ன தேரோ பாளி பல்கலைக்கழகத்தின் பாளி கற்கைப்பிரிவின் தலைவராகவும் அத்துறையின் விரிவுரையாளராகவும் இருந்தவர்.

பல மாணவர்களை உருவாக்கியவர். இதில் பெளத்த பிக்குகளும் அடங்குகின்றனர். ஆகையால் இவரை தெரிவு செய்ததில் ஆச்சரியங்கள் இல்லை. ஆனாலும் வழமை போலவே இந்த தவிசாளர் தெரிவிலும் பஸில் ராஜபக்சவின் கைகளே  மேலோங்கி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்ததாக நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றே இடம்பெறவுள்ளதாகத் தெரிகின்றது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவே பிரதான வேட்பாளராக இருக்கப்போகின்றார் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

அவர் கட்சியின் சார்பாகவோ அல்லது கூட்டணி சார்பாகவோ போட்டியிடலாம். அது பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு இன்னும் காலம் உள்ளது.

ஆனால் மொட்டு கட்சி என்ன செய்யப் போகின்றது? அவர்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் அவர் வெற்றி பெறப் போவது நிச்சயம்.

இன்னும் மக்கள் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டுள்ள ராஜபக்சகளுக்கும் இப்போதுள்ள ஒரே பாதுகாப்பு ரணில் என்பதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை.

ஆகவே அவர்கள் தனித்து ஒரு வேட்பாளரை இறக்குவதற்கு சாத்தியமில்லை என்பதோடு அப்படியான வேட்பாளர் எவருமே கட்சியில் இல்லை என்பது முக்கிய விடயம்.

ரணிலோடு பகைத்துக்கொண்டு மகிந்த தனது மகன் நாமலை களத்தில் இறக்க மாட்டார். தற்போது நாமல் மீதும் எவரும் நல்ல அபிப்பிராயங்களை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

‘ நாட்டை பாதுகாக்க நான் எனது அமெரிக்க குடியுரிமையையும் இழக்கத் தயார்’ என சில மாதங்களுக்கு முன்பு பஸில் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

அடுத்ததாக ஜனாதிபதித் தேர்தல் ஒன்று வந்தால் தானே வேட்பாளர் என்ற அர்த்தத்திலேயே அவர் அவ்வாறு கூறியிருந்தார்.

இது மகிந்தவுக்கும் நாமலுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது என்னவோ உண்மை. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மொட்டு கட்சிக்கு அதிருப்தியாளராக மாறியமை அவர்களுக்கு பெரும் இழப்பு என்றே கூறலாம்.

அவர் வெளிவிவகார அமைச்சராகவும் மகிந்த தரப்பினர் என்ன தவறு விட்டாலும் அதை சட்டரீதியாக சமாளிக்கும் விதமாக கருத்து கூறுபவராகவும் விளங்கினார்.

நாடு போற்றும் ஒரு கல்விமான் என்பதையும் தாண்டி அவர் சராசரி அரசியல்வாதியாக மாறுவதற்கு மகிந்தவே காரணம்.

பீரிசின் இடத்துக்கு யாரை நியமிப்பது என்ற கேள்விக்கு எவரும் எதிர்ப்பாராத பதில் தான் உத்துரவல தம்மாரத்ன தேரோ.

இன்று நாட்டின் பல சிக்கல்களுக்கு பிரதான காரணகர்த்தாக்களாக விளங்கும் பெளத்த பிக்குகளைக் கொண்டு அரசியலை முன்னெடுப்பது என்ற ராஜபக்சக்களின் திட்டத்தை குறைவாக மதிப்பிட்டு விட முடியாது.

அவர்களுக்கு இப்போது இருக்கும் ஒரே தெரிவு நாட்டின் பெளத்த சிங்கள மக்களும் பேரினவாத சிந்தனை கொண்ட மேல் தட்டு வர்க்கத்தினரின் ஆதரவுமாகும்.

கிராமப்புற சிங்கள மக்கள் பிக்குகளை தெய்வமாக வணங்கி வருபவர்கள். விகாரைகளுக்குச் சென்றால் முதலில் புத்த பெருமானை வணங்குவதற்கு முன்பாக, விகாராதிபதியாக இருக்கும் தலைமை பிக்குவை விழுந்து வணங்கி விட்டு தான் மற்ற அலுவல்களை கவனிப்பர்.

ஆகவே ராஜபக்சக்களுக்கு ஆதரவாக ஒரு சாதாரண பெளத்த பிக்கு குரல் கொடுத்தால் அதை யார் தான் ஏற்பர்? ஆகவே நல்ல கல்வி பின்புலமும் கெளரவமும் கொண்ட ஒரு பேராசிரியர் தரத்திலான பிக்குவை இவர்கள் தெரிவு செய்ததன் காரணம் இப்போது புரிந்திருக்கும். இந்நாட்டில்  ஒரு அரசியல் சூறாவளியை ஏற்படுத்தியவர்கள் இந்த பெளத்த பிக்குகளே.  அது பண்டாரநாயக்க படுகொலை சம்பவமாகும்.

1956 இல் தனது அரசியல் சுயலாபங்களுக்காக சிங்களம் மட்டும் என்ற விடயத்தை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டார் எஸ்.டபிள்யூ .ஆர்.டி .பண்டாரநாயக்கா. அவருக்காக வீடு வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள்  யக்கடுவ பரஞானராம தேரர்,வல்பொல ராகுல தேரர்,பத்தேகம விமலவன்ச தேரர், ஹெப்பிட்டிகெதர ஞானசிக தேரர்,மப்பிட்டிகம புத்தரகித்த தேரர் ஆகியோராவர்.

இவர்களின் தலைமையிலான எக்சத் பிக்கு பெரமுன ( ஐக்கிய பிக்கு முன்னணி)என்ற பிக்குமார் அமைப்பு நாட்டின் தென்பகுதியில்  உள்ள சகல சிங்கள மக்களினதும் வீடுகளுக்குச் சென்று பண்டாரநாயக்கவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேசிய தேர்தல் ஒன்றில் அதிக பிக்குமார்கள் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலாவது சந்தர்ப்பம் அதுவாகும்.

பண்டாரநாயக்க வெற்றி பெற்று பிரதமரானவுடன் தமது தனிப்பட்ட சலுகைகளை கேட்டு அவரை அழுத்தங்களுக்குள்ளாக்கினர் இந்த பிக்குகள். அதில் பிரதானமானது சீனி இறக்குமதி ஒப்பந்தத்தை தனக்கு வழங்குமாறு புத்தரகித்த தேரர் கோரியமையாகும். எனினும் இதை பண்டாரநாயக்க மறுத்தார்.

இப்படியான பல சந்தர்ப்பங்களில் அவர் பிக்குகளை தவிர்த்து நாட்டின் அபிவிருத்திக்காக சில நகர்வுகளை மேற்கொண்ட காரணத்தினாலேயே அவர் மீது பிக்குகளுக்கு வெறுப்பேற்பட்டது. இறுதியில் அவரை அவர்களே கொலை செய்யும் அளவுக்கு சென்றனர்.

பண்டாரநாயக்க சுடப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு சென்றிருந்த முன்னாள் பிரதமரான சேர்.ஜோன் கொத்தலாவல, ‘நாய்களை கட்டி வளர்க்க வேண்டும். பண்டாரநாயக்க அவிழ்த்து விட்டார் அவை கடித்து விட்டன’ என்று எவருக்கும் அச்சப்படாமல் பிக்குகளைப் பற்றி கூறியிருந்தார்.

இப்போது பொதுபலசேனா,இராவணா பலய, சிஹல உறுமய என இனவாதத்தை கக்கும் பல பிக்கு அமைப்புகள் நாட்டில் உள்ளன.

கடந்த வருடம் இடம்பெற்ற அரகலய போராட்டத்துக்குப் பிறகு இந்த அமைப்புகள் சற்று அமைதி காத்து வருகின்றன. ஆனால் ராஜபக்சகளின் கட்சியான பொதுஜன பெரமுனவுக்கு ஒரு பிக்கு தவிசாளரானதால் இந்த அமைப்புகள் இனி மெளனமாக இருக்காது எனலாம்.

சில நேரங்களில் ரணிலுக்கு எதிராகவும் இவை களத்தில் இறங்கலாம். ஏனென்றால் ரணிலும் பிறப்பால் பெளத்தர் அல்லர் என்பது யாவரும் அறிந்த விடயம்.

நாட்டை காப்பாற்ற பெளத்த தர்மத்துக்கும் சிங்கள  மொழிக்கும் சேவையாற்றவல்ல ராஜபக்சக்களே சிறந்தவர்கள் என்ற பிரசாரத்தை இனி இவர்கள் முன்னெடுக்கக் கூடும்.

சிங்கள மக்களை வசீகரிக்கவும் தம் பக்கம் திருப்பவும் ராஜபக்சகள் செய்த காரியமே இது. இந்த நகர்வுகள் நாட்டில் தேர்தல் ஒன்று நெருங்கும் தறுவாயில் பல சிக்கல்களை தோற்றுவிக்கும் என்பது மாத்திரம் நிச்சியம்.

-சி.சிவகுமாரன்

Share.
Leave A Reply

Exit mobile version