முதன்முறையாக எனக்கு அந்த நிலை ஏற்படும்போது, எனக்குப் பதின்ம வயது. தூக்கத்தில் இருந்து திடீரென கண் விழித்தபோது,
படுக்கையில் இருந்து எழ முயற்சி செய்தேன். ஆனால், என் உடல் எனக்கு ஒத்துழைக்கவில்லை. என்னால் அசையக் கூட முடியவில்லை. என் கால்கள் வரை செயலிழந்திருந்தன.
என் மூளை வேலை செய்தாலும், என் தசைகள் தூங்கிக் கொண்டிருந்தன. என் அறை சூடாக இருப்பது போன்றும் சுவர்கள் மூடிக்கொள்வது போன்றும் உணர்ந்து நாம் பயந்தேன். 15 விநாடிகளுக்கு பின் எல்லாம் இயல்பானது, என் உடல் மீண்டும் செயல்பட தொடங்கியது.
இதற்கு என்ன காரணம்?
எனக்கு ஏற்பட்ட நிலைக்கு பெயர் தூக்க முடக்கம் (sleep paralysis) என நான் பின்னாளில் அறிந்துகொண்டேன்.
மூளை விழித்திருக்கும் அதே நேரத்தில் உடல் தற்காலிகமாக செயலிழந்தது காணப்படும் இந்த நிலை மிகவும் பொதுவானதுதான்.
எனக்கு ஏற்பட்ட அந்த முதல் , பயங்கரமான நிகழ்வுக்கு பின்னர், இரண்டு அல்லது மூன்று இரவுகளுக்கு ஒருமுறை என நான் தொடர்ந்து தூக்க முடக்கத்தை எதிர்கொண்டேன்.
அதிகமாக ஏற்படும்போது அதன் மீதான என் பயம் குறைந்துகொண்டு வந்தது. ஆனால், தூக்க முடக்கம் உண்மையில் பலரது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சிலருக்கு, மாயத் தோற்றம் (hallucination) தோன்றும் உணர்வோடு இந்த நிலை ஏற்படும்.
தனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்ற நிபந்தனையோடு என்னிடம் பேசிய 24 வயது பெண்மணி ஒருவர், தனது 18 வயதில் முதன்முதலில் தூக்க முடக்கத்துக்கு உள்ளான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
“நான் தூக்கத்தில் இருந்து விழித்தபோதும் என்னால் அசைய முடியவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
“ஒரு உருவம் என் ஜன்னல் திரைக்கு பின்னால் ஒளிந்திருப்பதை நான் பார்த்தேன். அது என் மார்பின் மீது தாவியது. அப்போது, என்னால் கத்தக் கூட முடியவில்லை. தெளிவாகவும், உண்மையாகவும் இந்த சம்பவம் இருந்தது” என்று அவர் தெரிவித்தார்.
ஒருசிலர் பேய், பிசாசு, வேற்று கிரகவாசிகள், இறந்துபோன குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்களின் உருவகங்களை மாயத் தோற்றங்களாக காண்கின்றனர்.
அவர்கள் தங்கள் உடலின் பாகங்கள் அந்தரத்தில் மிதப்பதாகவும், தங்களைப் போன்றே ஒரு உருவம் எதிரில் நிற்பதாகவும் எண்ணிக்கொள்கின்றனர். ஒருசிலர் தேவதைகளை பார்த்ததாக நம்புகின்றனர்.
இந்த மாயத்தோற்றங்கள் நவீன ஐரோப்பாவில் மந்திரவாதிகள் மீதான நம்பிக்கையைத் தூண்டியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்,
மனிதர்கள் தூங்கத் தொடங்கியதில் இருந்து இந்த தூக்க முடக்கம் இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இலக்கியங்களின் வழியாக வரலாறு முழுவதும் இதுகுறித்து பல்வேறு விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன.
ஃபிராங்கண்ஸ்டைன் என்ற நாவலை எழுதியதன் மூலம் அறியப்படும் பிரிட்டன் நாடக ஆசிரியர் மேரி ஷெல்லி, தனது நாடகத்திற்காக ஒரு காட்சியை எழுத தூக்க முடக்கத்தை சித்தரிக்கும் ஒரு ஓவியத்தால் ஈர்க்கப்பட்டார்.
ஆனால் தற்போதுவரை, இந்த அரிய நிலை குறித்து மிகவும் குறைவான ஆராய்ச்சிகளே செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலை குறித்த ஆராய்ச்சிக்காக தனது நேரத்தையும் உழைப்பையும் செலவிடும் ஒருசில தூக்கம் தொடர்பான ஆராய்ச்சியாளர்களில் ஜலாலும் ஒருவர்.
இந்த நிலைக்கான காரணம், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேலும் அறிந்துகொள்வதே அவரது இலக்காக உள்ளது.
சமீப காலம் வரை, உலகில் எத்தனை பேர் தூக்க முடக்கத்தை அனுபவித்துள்ளனர் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், 2011ல் உளவியலாளரான பிரையன் ஷார்ப்லெஸ், இந்த நிலையின் பரவல் குறித்து மிக விரிவான ஆய்வை நடத்தினார்.
50 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட 35 ஆய்வுகளின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. 36 ஆயிரம் தன்னார்வலர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நினைத்ததை விட தூக்க முடக்கம் என்பது மிகவும் பொதுவானது என்பதை ஷார்ப்லெஸ் கண்டறிந்தார்.
பெரியவர்களின் 8 சதவீதம்பேர் எதோவொரு கட்டத்தில் அதை அனுபவித்ததாக கூறுகின்றனர்.
இந்த எண்ணிக்கை கல்லூரி மாணவர்கள் (28), உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் (32) ஆகியோர் மத்தியில் அதிகமாக உள்ளது.
எனவே, “இது உண்மையில் அசாதாரணமானது அல்ல` என்று ஷார்ப்லெஸ் குறிப்பிடுகிறார். “ஸ்லீப் பாராலிசிஸ்: வரலாற்று, உளவியல் மற்றும் மருத்துவக் கண்ணோட்டங்கள்” என்ற நூலையும் அவர் இணைந்து எழுதியுள்ளார்.
தூக்க முடக்கத்தை அனுபவித்த பின்னர், ஒருசிலர் இயற்கைக்கு அப்பாற்பட்ட, அமானுஷ்ய விளக்கங்களுடன் தங்களுக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கின்றனர்.
ஆனால், உண்மையில் இதற்கான காரணம் மிகவும் சாதாரணமானது என்று ஜலால் கூறுகிறார்.
இரவில், நம் உடல் தூக்கத்தின்போது நான்கு நிலைகளைக் கடக்கிறது. இறுதி நிலை விரைவான கண் இயக்கம் (REM) என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் இருக்கும்போதுதான் நாம் கனவு காண்கிறோம்.
REM நிலையின்போது, நாம் கனவு காண்பதால், அப்போது நாம் உடல் ரீதியாக செயல்பட்டு அதனால் காயம்படுவதை தடுக்கும்விதமாக மூளை நமது தசைகளை செயலிழக்க செய்கிறது.
ஆனால், சில சமயங்களில் REM நிலையின்போது மூளை முன்கூட்டிய விழித்துக்கொள்கிறது (இது ஏன் ஏற்படுகிறது என்பது தற்போது வரை விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது)
இது உங்களை விழித்திருப்பதை உணர வைக்கிறது. ஆனால் உங்கள் மூளையின் கீழ் பகுதி இன்னும் REM இல் உள்ளது என்று ஜலால் கூறுகிறார், மேலும் உங்கள் தசைகளை முடக்க நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை மூளை அனுப்புகிறது.
`மூளையின் உணர்வுப் பகுதி செயல்பட தொடங்கிவிட்டது. மன ரீதியாக நீங்கள் விழித்துவிட்டீர்கள், ஆனால், உங்கள் உடல் இன்னும் முடக்கத்திலேயே உள்ளது` என்று ஜலால் விளக்கின்றார்.
என் 20களின் தொடக்கத்தில் நான் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தூக்க முடக்கத்தை அனுபவித்தேன்.
ஆனால், அது என் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. என் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இது சுவாரஸ்யமான கதையாக இருந்தது. அந்த வகையில், என் அனுபவம் மிகவும் இயல்பானது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தூக்க மருத்துவப் பேராசிரியரான காலின் எஸ்பி கூறுகையில், “இது தூக்கத்தில் நடப்பதை போன்றது. தூக்கத்தில் நடக்கும் பெரும்பாலானோர், இதற்காக மருத்துவர்களை சந்திப்பதில்லை. குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் இது ஆர்வமான விஷயமாக இருக்கலாம்” என்றார்.
அதே நேரத்தில் ஒருசிலருக்கு இந்த நிலை மிகவும் விசித்திரமானதாக இருப்பது இல்லை.
தூக்க முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 15 முதல் 44 சதவீதம் பேர் கடுமையான மன உளைச்சலை அனுபவிக்கின்றனர் என்று ஷார்ப்லெஸ் தனது ஆய்வின் மூலம் கண்டறிந்தார்.
தூக்க முடக்கத்தால் என்பதைவிட , இந்த நிலைக்கு நாம் எவ்வாறு வினையாற்றுகிறோம் என்பதிலிருந்து பிரச்சனைகள் உருவாகின்றன. அடுத்து எப்போது தூக்க முடக்கம் ஏற்படும் என்று பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து கவலைப்படுகின்றனர்.
தூங்கத் தொடங்கும்போதும் சரி, தூக்கத்தில் இருந்து விழிக்கும்போதும் சரி இது கவலையை ஏற்படுத்தும் என்று எஸ்பி கூறுகிறார்.
இதனால், உங்களை சுற்றி கவலை, அமைதியின்மை போன்றவற்றின் வலையை நீங்கள் பின்னிக்கொள்கிறீர்கள். இதன் விளைவாக பீதி தாக்குதல் (panic attack) ஏற்படுகிறது.
அதி தீவிரமான சந்தர்ப்பங்களில் தூக்க முடக்கம் , மூளையால் தூக்கம் மற்றும் விழிப்பு முறைகளை ஒழுங்குபடுத்த முடியாத நிலைக்கு அடிப்படை அறிகுறியாகவும் இருக்கலாம்.
உங்களின் உறக்கக் கட்டமைப்பு துண்டாடப்பட்டிருப்பதால், நீங்கள் தூக்கம் இல்லாமல் இருக்கும்போது தூக்க முடக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சிலர் தாங்கள் மல்லாக்க படுத்திருக்கும்போது, இது அதிகமாக ஏற்படுவதை காண்கின்றனர். இருப்பினும் இதற்கான விளக்கங்கள் தெளிவாக இல்லை.
சில நேரங்களில் தியான பயிற்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. தூக்க முடக்கம் காரணமாக படுக்கைக்கு செல்ல பயப்படும் நபர்களிடம் இருந்து பயத்தை அகற்றுவது, தூக்க முடக்கம் ஏற்படும்போது பதற்றமின்றி இருக்க செய்வது ஆகியவை இந்த சிகிச்சையின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
மிகவும் தீவிரமான சந்தர்ப்பங்களில் மனச்சோர்வுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தும் மருந்துகள் பரிசீலிக்கப்படலாம். ஆனால், REM நிலையில் ஏற்படும் தூக்கத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தும்.
நீங்கள் தூக்க முடக்கத்திற்கு செல்லும்போது, உங்கள் மூளையில் உள்ள மோட்டாஅர் கார்டெக்ஸ், அசையும்படி உங்களின் உடலுக்கு சமிக்னைகளை அனுப்புகிறது. ஆனால், தசைகள் செயலிழிந்து இருப்பதால், மூளைக்கு பதில் கிடைக்காது.
இதன் விளைவாக, தசைகளால் ஏன் நகர முடியவில்லை என்பதற்காக சொந்த விளக்கத்தை மூளையே உருவாக்கிக் கொள்கிறது.
அதனால்தான், மாயத் தோற்றங்கள் உங்கள் மார்பின் மீது உட்கார்ந்துகொள்வது, உங்கள் உடலை பிடித்துகொள்வது போன்று உங்களை உணரச் செய்கிறது.
சில மாயத் தோற்றங்கள் குறித்து விளக்குவது கடினமானது, மேலும் முற்றிலும் விநோதமானது கூட. கொடிய தோற்றமுடைய கருப்பு மூனை, தாவரங்களால் சூழப்பட்ட மனிதனை பார்த்துள்ளதாக பிரெஞ்ச் மக்கள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். அதே நேரம், மற்றவைகளில் கலாச்சாரத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
கனடாவைச் சேர்ந்த சிலர் சூனியக்காரி ஒருவர் தங்களது மார்பில் உட்கார்ந்திருப்பதை பார்த்திருப்பதாகவும், மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள், இறந்துபோனவர்கள் எங்கள் மார்பின் மீது உட்கார்ந்திருப்பதை பார்த்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
இதேபோல் டென்மார்க் மற்றும் எகிப்து நாட்டு மக்களிடம் தூக்க முடக்கத்தின் அறிகுறிகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவை ஜலால் ஒப்பிட்டுப் பார்த்தபோது, டேனிஸ் மக்களை விட அமானுஷ்யங்கள் மீது அதிகம் நம்பிக்கை கொண்டுள்ள எகிப்து மக்கள் அதிகம் தூக்க முடக்கத்தால் பாதிக்கப்படுவது தெரியவந்தது. மேலும், அவர்கள் அதிக நேரம் தூக்க முடக்கத்தில் இருப்பதும் தெரியவந்தது.
“உங்களுக்கு கவலை, மன அழுத்தம்போன்றவை இருக்கும்போது உங்களின் தூக்கம் பாதிக்கப்படுகிறது.
எனவே, நீங்கள் தூக்க முடக்கத்துக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ளது” என்று கூறும் ஜலால், “நீ தூங்கும்போது ஒரு உருவம் வந்து உன்னை தாக்கும் என்று உங்கள் பாட்டி கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
இந்த பயத்தின் காரணமாக நீங்கள் அதிகமாக தூண்டப்படுவீர்கள். உங்கள் மூளையில் உள்ள பயம் மையங்கள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளன. எனவே, REM தூக்க நிலையின்போது, “என்னால் நகர முடியவில்லை, என்னை எதோ அழுத்துகிறது “என்று நீங்கள் நினைத்துக்கொள்கிறீர்கள். இந்த நிலைக்கு பின்னால் பண்பாடு முக்கிய அங்கம் வகிக்கிறது” என்று தெரிவித்தார்.