அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகள் மீது வட கொரியா அணுவாயுதத் தாக்குதல் நடத்தினால், வட கொரியா அணுவாயுத பதிலடியை எதிர்கொள்ள நேரிடுவதுடன் அதன் தலைமைத்துவம் ‘முடிவுக்கு கொண்டுவரப்படும்’  என அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ஜனாதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அமெரிக்காவுக்கு 6 நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலும் ‘வொஷிங்டன் பிரகடனம்’ எனும் ஆவணத்தையும் வெளியிட்டனர்.

வெள்ளை மாளிகையில், புதன்கிழமை (26) நடைபெற்ற  செய்தியாளர் மாநாடொன்றிலும் இருவரும் கூட்டாகப் பங்குபற்றினர்.

அணுவாயுதம் கொண்ட வட கொரியாவின் ஆக்ரோஷமான ஏவுகணை சோதனைகள் நடைபெறும் நிலையில்,  தென் கொரியாவுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு கவசம் பலப்படுத்தப்படுவதாக இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

‘அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகள் மீது வட கொரியா அணுவாயுத தாக்குதல் ஒன்றை நடத்தினால், அத்தகைய தாக்குதலை நடத்தும் தலைமைத்துவம் முடிவுக்கு கொண்டுவரப்படும்’ என ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் பேசுகையில், வட கொரியா அணுவாயுத தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவின் அணுவாயுதங்கள் உட்பட கூட்டணியின் முழுப்பலத்தையும் பயன்படுத்தி, விரைவான, தீர்க்கமான பதிலடி கொடுப்பதற்கு அமெரிக்காவும் தென் கொரியாவும் இணங்கியுள்ளன எனத் தெரிவித்தார்.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கும் அவரின் மனைவி கிம் கியோன் ஹீக்கும் வெள்ளை மாளிகையில் விமர்சையான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆடம்பர அரச விருந்து வைபத்திலும் அவர்கள் பங்குபற்றினர். ஜனாதிபதி ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடனுடன் நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பெரும் எண்ணிக்கையான பிரமுகர்கள் இவ்விருந்து நிகழ்வில் பங்குபற்றினர்.  (Photos: AFP)

Share.
Leave A Reply

Exit mobile version