எங்க மடியில தவழ்ந்த புள்ளை விஜய். பிற்காலத்துல அவர் நடிகரானதும், `நம்ம பையனை வெச்சு படம் எடுக்கணும்’னு என் மனைவி ஆசைப் பட்டாங்க. ஹீரோயினா `பிதாமகன்’ சங்கீதாவை நடிக்க வெச்சோம். நல்ல கதைதான். ஆனா, சொந்தப் படமா எடுத்ததுதான் தப்பா போச்சு..!”
தமிழகமே வியந்து பார்க்கும் ஓர் இசைக்குடும்பம் இளையராஜாவினுடையது. அவர்களில், பன்முகக் கலைஞராக 45 ஆண்டுகளாகத் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியிருப்பவர்,
இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன். இசையமைப்பு, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு உட்பட சினிமாத்துறையில் எதிர்நீச்சலடித்த அனுபவஸ்தரான கங்கை அமரனிடம் பேச்சுக் கொடுத்தோம்.
இளையராஜாவுடன்….
இளையராஜாவின் பாசம்
“சில நேரம் இளையராஜா அண்ணன் வார்த்தையை விட்ருவார். அதனால, அவர்மேல சிலருக்கு மாறுபட்ட விமர்சனங்கள் இருக்கலாம்.
ஆனா, அவரை நல்லா புரிஞ்சுகிட்டவங்களுக்கு இளையராஜா குழந்தையாத்தான் தெரிவார். பாஸ்கர் அண்ணன், ராஜா அண்ணன், நான் ஆகியோர் வெவ்வேறு இடங்கள்ல வேலை செஞ்சுகிட்டிருந்த நேரம், அவரவர் வீட்டிலேருந்து மதிய சாப்பாடு வரவெச்சு, ராஜா அண்ணனோட ஸ்டூடியோல தினமும் ஒண்ணா சாப்பிடுவோம். திடீர்னு என்ன நினைச்சாரோ தெரியலை. `இனிமே நீங்க தனியாவே சாப்பிடுங்க’னு முகத்துல அடிச்ச மாதிரி ஒரு நாள் இளையராஜா சொன்னார்.
`நம்ம பாசம் தொடரணும்னுதான் சாப்பாட்டு நேரத்துல உன் இடத்துக்கு வர்றோமே தவிர, சாப்பாட்டுக்கு வக்கில்லாம நாங்க இங்க வரலை’னு அவர்கிட்ட வெடிச்சுத் தள்ளிட்டேன்.
அன்னிக்கு மதியம் நானும் பாஸ்கர் அண்ணனும் சாப்பிடாம திரும்பிப் போயிட்டோம். அப்போ என் மனசுல இருந்த ஆதங்கத்தை யெல்லாம் கொட்டி, `ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன’ பாடலை எழுதினேன்.
`இஷ்டம் இருந்தா இந்தப் பாடலைப் பயன்படுத்திக்கோ’னு ராஜாகிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். அவரும் அந்தப் பாட்டை `தர்மதுரை’ படத்துல பயன்படுத்தினார். பிறகு, சில நேரம் எங்களுக்குள் உரசல் வரும். மறுபடியும் கூடுவோம். இப்போ ஒத்துமையா பாசமா இருக்கோம்.”
எஸ்.ஜானகி, இளையராஜா மற்றும் எஸ்.பி.பி
எஸ்.ஜானகி
“இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் அண்ணனின் மியூசிக்னாலே எஸ்.ஜானகியம்மாதான் ஆஸ்தான பாடகி.
அவர்கிட்ட நாங்க வேலை செஞ்ச காலத்துலயே, ஜானகி அம்மாவுடன் எங்களுக்கு நல்ல பழக்கம் இருந்துச்சு. அதனால, `அன்னக்கிளி’ படத்துல ஜானகி அம்மாவை சென்டிமென்ட்டா பாட வெச்சதுடன், ஹம்மிங் வாய்ஸையும் கொடுக்க வெச்சோம். அந்தப் பாடல்கள் எல்லாமே செம ஹிட்.
இளையராஜா இசையில ஜானகியம்மா தவிர்க்க முடியாத பாடகியானாங்க. எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் – டி.எம்.செளந்தரராஜன் அண்ணன் – பி.சுசீலாம்மா கூட்டணிபோல, இளையராஜா – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – எஸ்.ஜானகியம்மா கூட்டணியும் ஓஹோன்னு பிரபலமாச்சு.
பாடலாசிரியரா என் முதல் பாடலான `செந்தூரப்பூவே‘ பாடலைப் பாடிய ஜானகியம்மாவுக்கு முதல் தேசிய விருது கிடைச்சது. `காதல் வைபோகமே’, `மூக்குத்திப் பூமேலே‘னு என் இசையமைப்பிலும் ஜானகியம்மா நிறைய ஹிட்ஸ் பாடினாங்க.”
சினிமா நட்பு
“ஆரம்பத்திலேருந்தே இளையராஜாவின் சிந்தனைகள் எல்லாமே இசையில மட்டும்தான் இருந்துச்சு.
வேற எந்த ஜனரஞ்சக விஷயத்துலயும் அவர் ஆர்வம் காட்ட மாட்டார். ஆனா, நான் அப்படியில்லை. பட பூஜை, சினிமா ஷூட்டிங், சினிமா கலைவிழா, கச்சேரினு சினிமா நண்பர்களுடன் ரொம்ப குளோஸா பழகினேன்.
குறிப்பா, நடிகைகளுடனும் நெருங்கிப் பழகினேன். அதனாலேயே, என்னை `பிளே பாய்’னுகூட சிலர் சொன்னாங்க.
பார்ட்டி, `ஸ்டார் நைட்’ கச்சேரிகள், பட விழாக்கள்னு பலவற்றிலும் கலந்துகிட்டாலும், எவ்வித சபலத்துக்கும் இடம் தராமதான் கடைசிவரைக்கும் இருந்தேன்.
`எப்படி சாமி உங்களால மட்டும் இவ்வளவு கட்டுப்பாடா இருக்க முடியுது?’னு ரஜினி ஆச்சர்யமா கேட்பார். ரஜினி, கமல், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நான் உட்பட சினிமா நண்பர்கள் ஒண்ணு சேர்ந்தா கேலி, கிண்டல், தமாஷ்னு செம ரகளையா இருக்கும். இந்த அனுபவமும் நட்பும், இயக்குநரா நடிகர்கள்கிட்ட வேலை வாங்கிற அணுகுமுறையை எளிதாக்குனுச்சு.”
அங்கீகாரம்
“பலரும், `உங்க அண்ணன் அளவுக்கு உங்களுக்குப் பேரு புகழ் கிடைக்கலையே’னு சொல்லியதுண்டு.
எங்கண்ணனும் நானும் சினிமால பல பாடல்கள் பாடியிருக்கோம். இசையமைப்பாளரா நானும் ஹிட்ஸ் கொடுத்திருக்கேன். என்னைப் பொறுத்தவரை எல்லாவிதத்துலயும் அவர்தான் பெஸ்ட். அவர் கூட என் பெயரை ஒப்பிடுறதுகூட பொருத்தமா இருக்காது.
மக்கள் என் பாடல்களையும் படங்களையும் இப்பவும் பார்த்தும் கேட்டும் ரசிக்கிறாங்க. இத்தனை வருஷம் கழிச்சும் என்னைக் கூப்பிட்டு பேட்டி எடுக்கறீங்க.
இதுக்கு மேல எனக்கு என்ன அங்கீகாரம் வேணும்? இசைப் பிரியர்கள் எல்லோரும் கொண்டாடுற இளையராஜாவுக்கு ஒரே தம்பி நான் மட்டும்தான். இந்தப் பெருமைகளே எனக்குப் போதும்!”
மகன்கள்
“நானும் இளையராஜாவும் மேடை நாடகங்கள்ல வேலை செஞ்ச காலத்துல நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் எங்க குழுவுல பாடிட்டிருந்தாங்க.
பல பயணங்கள்ல எங்க மடியில தவழ்ந்த புள்ளை விஜய். பிற்காலத்துல அவர் நடிகரானதும், `நம்ம பையனை வெச்சு படம் எடுக்கணும்’னு என் மனைவி ஆசைப்பட்டாங்க.
ஹீரோயினா `பிதாமகன்’ சங்கீதாவை நடிக்க வெச்சோம். இளையராஜா பார்த்துப் பார்த்து மியூசிக் பண்ணிக் கொடுத்தார். நல்ல கதைதான். ஆனா, சொந்தப் படமா எடுத்ததுதான் தப்பா போச்சு.
சில சிக்கல்களால `பூஞ்சோலை’ங்கிற அந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முடியலை. கடன் ஏற்பட்டுச்சு. வாழ்க்கைனா இன்ப துன்பம் வந்துபோறது இயல்புதானே? இப்போ எல்லாமே சரியாகிடுச்சு.
நடிகரா சில படங்கள்ல நடிச்ச பெரிய பையன் வெங்கட் பிரபு, டைரக்டரா பேர் எடுத்துட்டான். அவன் இன்னும் பெரிசா வளருவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்போ தமிழ் மற்றும் தெலுங்குல `கஸ்டடி’ங்கிற படத்தை எடுத்துக்கிட்டிருக்கான். யுவன் சங்கர் ராஜாவுடன் இளையராஜாவும் சேர்ந்து மியூசிக் பண்ணா நல்லாயிருக்கும்னு சொன்னேன். ரெண்டு பேரும் சேர்ந்து பிரமாதமா மியூசிக் பண்ணியிருக்காங்க.
சின்னவன் பிரேம்ஜியும் சினிமால வளர்ந்துகிட்டிருக்கான். அவன்கிட்ட `கல்யாணம் பண்ணிக்கோ’னு எத்தனையோ தடவை சொல்லிட்டேன். `நோ ஃபேமிலி கமிட்மென்ட்ஸ் டாடி’னு சொல்றான்.
வெங்கட்பிரபு தன் குடும்பத்துடன் தனியா வசிக்கிறான். பிரேம்ஜியும் நானும் ஒண்ணா வசிக்கிறோம். ஒவ்வொரு நாளும் உணவு உட்பட எல்லா விஷயத்துலயும் பிரேம்ஜி என்னை நல்லா கவனிச்சுக்கிறான். ரெண்டு பேருமே பாசக்காரப் புள்ளைங்க!”
கரகாட்டக்காரன்
“நான் சினிமால வேலை செஞ்சாலும் இல்லாட்டியும் எனக்கு அடையாளமா இந்த ஒரு படத்தைச் சொன்னாகூட போதும்.
அந்த அளவுக்கு எனக்கு வளர்ச்சியைக் கொடுத்த படம் அது. அந்தப் படத்தோட ரெண்டாவது பாகத்தை எடுக்க நான் தயார். ஆனா, அதுக்குப் பலரின் ஒத்துழைப்பும் தேவை. அதுக்கான சூழல்கள் அமையுமான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த நேரத்துல அந்தப் படத்துல கனகாவை நான் அறிமுகப்படுத்திய கதையைச் சொல்லணும். அப்போ என் வீட்டுக்குப் பக்கத்துலதான் நடிகை தேவிகாவின் வீடும் இருந்துச்சு. தன் மகளை நடிக்க வைக்கணும்னு ஆசைப்பட்ட தேவிகாம்மா, கனகாவை என் பார்வைக்குத் தெரியப்படுத்த நினைச்சிருக்காங்க.
கனகாவுக்குப் பட்டுப் பாவாடை, தாவணி போட்டுவிட்டு என் வீடு வழியா அடிக்கடி வாக்கிங் கூட்டிட்டு வருவாங்க. அவங்களை மரியாதை நிமித்தமா வீட்டுக்குள்ளாற கூப்பிட்டு நானும் என் மனைவியும் பேசுவோம்.
அப்படியான பழக்கத்துல, `இந்தப் பொண்ணு லட்சணமா இருக்கு’னு என் மனைவி சொன்னதாலதான் `கரகாட்டக்காரன்’ல கனகாவை ஹீரோயினா நடிக்க வெச்சேன்.
ஆனா, அந்தப் படத்துல பானுப்ரியாவை நடிக்க வைக்கணும்னுதான் நானும் இளையராஜாவும் நினைச்சோம். அந்தப் படத்தோட வெற்றிக்கு கனகாவின் நடிப்பும் ஒரு காரணம்ங்கிறதை மறுக்க முடியாது!”