ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆஸ்கர் போடியொரெக் (Oskar Potiorek) என்பவர் தலைமையில் செர்பியா மீது ராணுவத் தாக்குதல் நடைபெற்றது. ஆக, உலகப் போர் செயல்வடிவம் பெறத் தொடங்கியது.
செர்பியா மீது போர் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பிருந்தே ஆஸ்திரியா – ஹங்கேரியில் பல வன்முறைகள் நிகழத் தொடங்கியிருந்தன.
ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியான போஸ்னியாவின் தலைநகர் சரயேவுவில் செர்பியர்களுக்கு எதிரான கலவரங்கள் பெரிய அளவில் நடைபெற்றன.
இவற்றை ஆஸ்திரியா – ஹங்கேரிய அதிகார அமைப்புகள் ஊக்குவித்தன. இதில் இரண்டு போஸ்னிய செர்பியர்கள் கொல்லப்பட்டனர்.
செர்பியர்களுக்குச் சொந்தமான ஏராளமான கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டன. அரசு சுமார் 5,500 முக்கியமான நபர்களைக் கைது செய்து, விசாரணை செய்தது. 460 செர்பியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தங்கள் இளவரசர் செர்பிய இயக்கத்தால் கொலை செய்யப்பட்டதற்கு இதெல்லாம் சின்ன எதிர்வினைதான் என்று வேறு அதிகாரிகள் பேசினர்.
தந்தியில் வந்த போர்ப் பிரகடனம்
‘எல்லா நிபந்தனைகளையும் ஏற்கவில்லை, இரண்டு நாள்களுக்குள் பதில் வரவில்லை’ என்று காரணம் காட்டி செர்பியா மீது போர்தொடுப்பதாக அறிவித்தது ஆஸ்திரியா.
*************
“உங்கள் நிபந்தனைகள் எதையும் செர்பியா எதிர்க்கவில்லை. தவிர, போர் வேண்டாம் என்று அவர்கள் நினைப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆக, இதுவே உங்களுக்கு வெற்றிதான். எனவே போருக்கான காரணம் இப்போது இல்லை” என்றது ரஷ்யா. பிரிட்டனும் இந்த விவகாரத்தை ஒரு பேச்சுவார்த்தை மூலம் பேசித்தீர்த்துக்கொள்ளலாம் என்று கருதியது.
என்றாலும் ஜூலை 29 அன்று செர்பியா மீது போர்தொடுப்பதாக ஆஸ்திரியா அறிவித்துவிட்டது.
போரை அறிவித்த அடுத்த நாளே செர்பியாவின் மீது போர் தொடுத்தது ஆஸ்திரியா. சட்டுப்புட்டென்று போரை நடத்தினால், இதற்கு இதுவரை தயாராக இல்லாத ரஷ்யா போரில் கலந்து கொள்ளாது. சீக்கிரமே செர்பியாவை ஜெயித்து விடலாம் என்று கணக்குப்போட்டது ஆஸ்திரியா.
ஆஸ்கர் போடியொரெக் (Oskar Potiorek)
ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆஸ்கர் போடியொரெக் (Oskar Potiorek) என்பவர் தலைமையில் செர்பியா மீது ராணுவத் தாக்குதல் நடைபெற்றது. ஆக, உலகப் போர் செயல்வடிவம் பெறத் தொடங்கியது.
ஆஸ்கர் போடியொரெக் போஸ்னியாவின் ஆளுநராக இருந்தவர். அந்தப் பகுதியின் ராணுவத் தலைவரும் கூட. படுகொலை செய்யப்பட்ட ஆஸ்திரிய இளவரசரும் அவர் மனைவியும் பயணம் செய்த காரில் இவரும் சென்றிருந்தார்.
ஆனால் செர்பியா மீதான முதல் படையெடுப்பு தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்கர் போடியொரெக் போருக்குத் தலைமை தாங்கும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து சில மாதங்களில் ராணுவத்திலிருந்தே ஓய்வு பெற்றார்.
ஸெர் (Cer) என்ற பகுதியில் நடைபெற்ற அந்த யுத்தத்தில் செர்பிய ராணுவம் வென்றது.
இதை முதலாம் உலகப் போரின் நேச நாடுகளின் (Allied nations) முதல் வெற்றி என்று பின்னர் விவரித்தார்கள். என்றாலும் அந்த போர் தொடங்கிய பிறகும் கூட ரஷ்யாவும் ஆஸ்திரியாவும் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டு இருந்தன.
*************
ரஷ்யாவுக்கு வேறு ஒரு கவலை. “இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால்? அப்போது செர்பியாவுக்கு நம் ராணுவம் உதவியாக வேண்டுமே. திடீரென்று ஒரே நாளில் ராணுவத்தை அனுப்ப முடியாதே.
ஆகவே நம் ராணுவத்தின் ஒரு பகுதியை இப்போதே செர்பியாவுக்கு அனுப்பி வைப்போம். பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால் ராணுவத்தைத் திருப்பி அழைத்துக்கொள்ளலாம். பேச்சுவார்த்தை தோல்வி என்றால் நம் ராணுவம் போரில் பங்கெடுத்துக் கொள்ளட்டும்” இப்படி நினைத்தது.
*************
முதலாம் உலகப்போரில் செர்பியப் படை
ஜெர்மனிக்குச் சந்தேகம் வந்தது. ‘பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே எதற்காக ரஷ்யா தன் ராணுவத்தை செர்பியாவில் குவிக்கவேண்டும்? நிச்சயமாக அது போரில் கலந்துகொள்ளத்தான் போகிறது.’ உடனே ஜெர்மனி ரஷ்யாவுக்கு ஓர் அறிக்கை அனுப்பியது.
“உடனடியாக உங்கள் ராணுவத்தை வாபஸ் பெறுங்கள்”.
அடுத்தது பிரான்ஸுக்கு ஓர் அறிக்கை அனுப்பியது. “இந்தப் போரில் நடுநிலை வகிப்பேன் என்று நீங்கள் அறிவிக்க வேண்டும்”.
பிரான்ஸிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. இதற்காக பிரான்ஸ் போரில் அப்போது ஈடுபட விரும்பியது என்று அர்த்தம் இல்லை. தான் இதுவரை சம்பந்தப்படாதபோது எதற்காக அறிக்கை விடவேண்டும் என்று பிரான்ஸ் நினைத்தது.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ரஷ்யா மீது ஜெர்மனி போர்ப் பிரகடனம் செய்தது. அதற்கு இரண்டு நாள் கழித்து “பெல்ஜியத்துடனும் போர்” என்றது.
ஆஸ்திரியா – ஹங்கேரி
அதற்கு அடுத்தடுத்த நாள்களில் லக்ஸம்பர்க் மற்றும் பெல்ஜியத்தின் சில பகுதிகளை அது ஆக்கிரமித்தது. லக்ஸம்பர்க் (Luxembourg) என்பது உலகின் சிறிய நாடுகளில் ஒன்று. மேற்குப் புறம் பெல்ஜியத்தாலும் வடக்குப் புறம் பிரான்ஸாலும் தெற்குப் புறம் ஜெர்மனி ஆளும் சூழப்பட்ட நாடு அது.
1914 ஆகஸ்ட் 4 அன்று ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமித்தது. நடுநிலை வகித்த இரு நாடுகளின் பகுதிகளை ஜெர்மனி எதற்காக ஆக்கிரமிக்க வேண்டும்?
– போர் மூளும்…
முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: ஆஸ்திரிய இளவரசரின் தேனிலவுப் பயணம் தொடங்கி வைத்த அரசியல் ஆட்டங்கள்!