15 கோடியே 25 இலட்சம் ரூபா பெறுமதியான 7 கிலோ  நிறை கொண்ட தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது கைது செய்துள்ளது.

43 வயதுடைய வர்த்தகரான இவர், கொழும்பு மருதானை பிரதேசத்தில் வசித்து வருவதுடன் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்பவர் எனவும் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் திங்கட்கிழமை (08) காலை 09.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்தில் அனைத்து விசாரணைகளையும் முடித்துவிட்டு அங்கிருந்து விமான நிலையத்துக்கு வெளியே செல்லும்போதே இவர் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபர் தனது இடுப்பு பகுதியில் 8 பொட்டலங்களாக மறைத்து வைத்திருந்த 4 கிலோ 400 கிராம் எடையுடைய 42 தங்க பிஸ்கட், அரை தங்க பிஸ்கட் மற்றும் 2 கிலோ 600 கிராம் எடை கொண்ட நகைகளை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version