டெல்லியில் உள்ள திகார் சிறையில் தில்லு தாஜ்புரியா என்ற குற்றச் செயல்கள் குழுவுக்குத் தலைமை தாங்கிய நபர் போலீஸார் கண் முன்னே சக கைதிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது,
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த காவலர்கள்
ஏழு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது?
கொலை நடந்த நேரத்தில் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதாகக் கூறி அவர்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாக இந்தச் சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
டெல்லி சிறைச்சாலைகளின் இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பேனிவால், சிறை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதிய சில நாட்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
33 வயதான தில்லு தாஜ்புரியா திகார் சிறைக்குள் போட்டி குற்றச்செயல் குழுவைச் சேர்ந்த சில கைதிகளால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் சிறைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
திகார் சிறையின் சிசிடிவி காட்சிகள்
அப்போது அவர்கள் தங்கள் காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறை அதிகாரி, “தமிழ்நாடு சிறப்புக் காவல் படை தற்போது அதன் காவலர்கள் ஏழு பேரை பணி இடைநீக்கம் செய்து அவர்களைத் திரும்ப அழைத்துள்ளது,” என்று கூறினார்.
“சட்டப்படி தண்டிக்கப்படும் வரை, கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது போலீஸ்.
ஆனால், இந்த விஷயத்தில் காவல்துறையினர் கடமையில் இருந்து தவறியிருக்கிறார்கள்,” என்று கூறுகிறார் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் கார்த்திகேயன் ஐபிஎஸ்(ஓய்வு).
திகார் சிறையின் வளாகத்திற்கு உள்ளே தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பாதுகாப்பு அளிக்கிறது.
சிறை வளாகத்தின் வெளிப்புறத்தில் மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கிறது. கைதிகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வது, சிறைக்கு அழைத்து வருவது போன்ற பணிகளை டெல்லி காவல்துறை கவனித்துக் கொள்கிறது.
இந்தச் சம்பவம் நடந்த எண் 8 சிறை வளாகத்தில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் வெளிவந்த திகார் சிறையின் சிசிடிவி காட்சிகள், சிறைக் கைதிகளில் ஒரு குழுவினரால் தாஜ்புரியா கத்தியால் குத்தப்பட்ட பிறகு, பாதுகாப்பில் இருந்த காவலர்கள் அவரைக் கொண்டு செல்லும்போது அவர் தாக்கப்படுவதையும் காட்டுகிறது.
“அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?”
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காலையில் உயர் பாதுகாப்பு சிறைக்குள் கோகி கும்பலைச் சேர்ந்த நான்கு பேரால் தாஜ்புரியா கூர்மையான கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டார்.
அந்தத் தாக்குதலுக்குப் பிறகு உயிருக்குப் போராடிய அவர் சிறை பாதுகாப்புப் படையினரால் கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது அவரைக் கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் நபர்கள், தாஜ்புரியாவை மீண்டும் எல்லோரது முன்னிலையிலும் குத்தித் தாக்குவதை சிசிடிவியில் பார்க்க முடிகிறது.
அந்தக் காட்சிகளில், ஒரு கும்பல் தாஜ்புரியாவை தாக்கும்போது பாதுகாப்பில் இருந்த காவலர்கள் அதை வேடிக்கை மட்டுமே பார்த்ததாகத் தெரிகிறது.
இந்தச் சவமப்வம் தொடர்பாக தாஜ்புரியாவின் தந்தை மற்றும் அவரது சகோதரர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகி, நடந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதி ஜஸ்மித் சிங், “நடந்த சம்பவம், முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கை” என்று கூறினார்.
மேலும், திகார் சிறை வளாகத்திற்குள் குண்டர்களால் தில்லு தாஜ்புரியா கொலை செய்யப்பட்டதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து திகார் சிறை அதிகாரிகள் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி ஜஸ்மித் சிங், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, தாஜ்புரியாவை அவரது அறையில் இருந்து வெளியே இழுத்துச் சென்று கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்தது தெரிகிறது என்று கூறினார்.
மேலும், இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் சூழலில், அதிகாரிகள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
சிறை வளாகத்தில் நான்கு கத்திகள் எப்படி வந்தன, சிறையின் சிசிடிவி கேமராவில் இந்தச் சம்பவம் பதிவாகியிருந்தும்கூட தடுப்பு நடவடிக்கையோ சீர்திருத்த நடவடிக்கையோ ஏன் எடுக்கப்படவில்லை என்பது குறித்தும் திகார் சிறை இயக்குநர் ஜெனரல் மூலமாக ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
“ஒவ்வொரு கைதியின் பாதுகாப்பும் பிரதிவாதியின்(சிறை நிர்வாகம்) பொறுப்பு. மேலும் இந்தச் சம்பவம் முழுவதும் சிறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தும்கூட, அந்தச் சம்பவம் நடந்தபோது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை நீதிமன்றத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை,” என்று நீதிமன்றம் கூறியது.
இந்தத் தவறுகளுக்குக் காரணமான சிறை அதிகாரிகளின் பொறுப்புக்கூறலை அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதோடு, அடுத்த விசாரணை நாளான மே 25ஆம் தேதியன்று நேரில் ஆஜராகும்படி திகார் சிறையின் கண்காணிப்பாளருக்கும் நீதிபதி ஜஸ்மித் சிங் உத்தரவிட்டுள்ளார். தாஜ்புரியாவின் தந்தை மற்றும் சகோதரருக்கு நீதிமன்றத்தால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
விசாரணையின்போது, தாஜ்புரியாவின் தந்தை மற்றும் சகோதரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்தச் சம்பவத்தில் சிறை அதிகாரிகள் குண்டர் கும்பலைச் சேர்ந்த கொலைக் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக” குற்றம் சாட்டினார்.
அரசுத் தரப்பில் ஆஜரான ஏஎஸ்சி ராகுல் தியாகி, இந்த வழக்கின் விசாரணை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“என்னால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இங்கே என்ன நடக்கிறது? இதை எப்படி அனுமதிப்பீர்கள்? நீதி அமைப்பு ஒன்று இங்கே உள்ளது அல்லவா? உங்கள் கண்காணிப்பில் இது எப்படி நடந்தது?” என்று நீதிபதி ஜஸ்மித் சிங் அரசுத்தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
இது இரண்டு கும்பல்களுக்கு இடையிலான பகை என்றும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் ராகுல் தியாகி தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த நீதிபதி, “நீங்கள் இதற்குப் பொறுப்பல்ல என்பதையும் சிறைக் கம்பிகளை வெட்டும் அளவுக்கு கைதிகள் சுதந்திரமாக இருப்பதையும் நான் பதிவு செய்ய வேண்டுமா? இது ஏற்றுக்கொள்ள முடியாதது…” என்று தெரிவித்தார்.
கார்த்திகேயன்
டி.ஆர். கார்த்திகேயன், முன்னாள் தலைமை இயக்குநர் (விசாரணை), தேசிய மனித உரிமைகள் ஆணையம்
இந்தச் சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குநருமான டி.ஆர்.கார்த்திகேயன், “சிறையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும்போது கைதிகளின் உயிரைப் பாதுகாக்க வேண்டியது போலீஸாரின் பொறுப்பு,” என்று கூறினார்.
“குற்றவாளியாக சட்டத்தால் தண்டிக்கப்படும் வரை மட்டுமின்றி குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டாலும்கூட, அவர்கள் சட்டப்படிதான் தண்டிக்கப்பட வேண்டும். கைதிகளின் உயிரைப் பாதுகாக்க வேண்டியது போலீஸ் பொறுப்பு.
காவல்துறையினர் கடமையில் இருந்து தவறியிருக்கிறார்கள். அவர்களது பாதுகாப்பின் கீழ் இருக்கும் கைதியை மற்ற கைதிகள் தாக்கும்போது காவலர்கள் தடுத்திருக்க வேண்டும். அந்தக் கடமையில் இருந்து அவர்கள் தவறிவிட்டார்கள்.
இது முழுக்கவும் சிறை நிர்வாகத்தின் குறைபாடுதான். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் தவறு. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்த தமிழ்நாடு கமாண்டோ படை கூடுதல் டிஜிபி ஜெயராமனை டெல்லி திகார் சிறைக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அனுப்பி வைத்துள்ளார்.
கைதி கொலை மற்றும் சிறைக்குள் நடந்த வன்முறை தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட தமிழக காவலர்களிடமும் சிறை காவலர்களிடமும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூடுதல் டிஜிபி ஜெயராமனுக்கு தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதன்படி இன்று டெல்லி வந்துள்ள கூடுதல் டிஜிபி ஜெயராமன், திகார் சிறையில் காவலர்களிடம் தமது விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
தில்லு தாஜ்புரியா யார்?
சுனில் தாஜ்புரியா, டெல்லியின் புறநகரில் உள்ள அலிபூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்.
2021ஆம் ஆண்டு ரோகிணி நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைக்குள் கோகி என்று அழைக்கப்படும் தமது போட்டி குற்றச்செயல் கும்பலின் ஜிதேந்தர் சிங் மான் கொல்லப்பட்ட வழக்கில் அவர் முக்கியக் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்ட நபர்.
டெல்லி மற்றும் ஹரியாணா பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக தில்லு மற்றும் கோகி கும்பலுக்கு இடையிலான ‘கும்பல் சண்டை’ அதிகரித்து, பல உயிர்கள் பறிபோயின.
ஒரு காலத்தில் சிறு வயது நண்பர்களாக இருந்து படிப்படியாக மோசமான எதிரிகளாக மாறிய இந்த இரண்டு பேர் பற்றிய தகவல்கள் வெளியே அதிகம் அறியப்படவில்லை.
ஆனால், 2010இல் டெல்லியின் அலிபூரில் உள்ள ஷர்தானந்த் கல்லூரியில் மாணவர் சங்கத் தேர்தல்களின்போது கடும் போட்டியாளர்களாக மாறினர்.
அவர்கள் நேரடியாக தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், போட்டி வேட்பாளர்களுக்கு ஆள் பலத்தை வழங்கினர். இது இருவருக்கும் இடையே கசப்பை உருவாக்கி இறுதியில் டெல்லியில் வன்முறை கும்பல் மோதல்களுக்கு வழிவகுத்தது.
கடந்த தசாப்தத்தில் இரு கும்பல்களுக்கிடையிலான மோதலில் 25க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன.