தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லநர் போட்டியில் கிளிநொச்சி முழங்காவில் தேசிய பாடசாலையைச் சேர்ந்த சுமன் கீரன் தங்கப் பதக்கம் சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் சுரேந்திரகுமார் மிதுன்ராஜ் 24 மணித்தியாலங்களுக்குள் 3 தங்கப் பதக்கதையும் கண்டி திகன ரஜவெல்ல இந்து தேசிய கல்லூரி வீராங்கனை என். அபிநயா ஒரே நாளில் 2 தங்கப் பதக்கங்களையும் வென்று சாதித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (09) காலை நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 35 நிமிடங்கள், 44.37 செக்கன்களில் நிறைவு செய்து  சுமன் கீரன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் அவர் வென்றெடுத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். முதலாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் சுமன் கீரன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி வீரர் எம். டினுஷன் (35:42. 31 செக்.) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தவறு நிகழ்ந்ததாக செய்யப்பட்ட ஆட்சேபனை மத்தியஸ்தர் குழுவினரால் நிராகரிக்கப்பட்டதால் போட்டி முடிவில் மாற்றம் ஏற்படவில்லை.

இது இவ்வாறிருக்க, ஹாட்லி கல்லூரி வீரர் தனது 3ஆவது தங்கப் பதக்கத்தை செவ்வாய்க்கிழமை வென்றெடுத்தார். 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் 38.91 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து மிதுன்ராஜ் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இவர் புதிய போட்டி சாதனையுடன் பரிதி வட்டம் எறிதலில் தங்கம் வென்றதுடன் குண்டெறிதலிலும் தங்கம் வென்றிருந்தார்.

இதேவேளை, திங்கட்கிழமை மாலை நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடை தாண்டி ஓட்டப் போட்யில் கண்டி திகன, ரஜவெல்ல இந்து தேசிய பாடசாலையைச் சேர்ந்த என். அபினயா வெற்றிபெற்று ஒரே நாளில் தனது 2 தங்கப் பதக்கதை சுவீகரித்தார்.

2000 மீற்றர் தடை தாண்டி ஓட்டப் போட்டியை 7 நிமிடங்கள், 44.37 சென்கன்களில் ஓடிமுடித்து அபிநயா தங்கப் பதக்கத்தை சுவிகரித்தார். அவர் திங்கட்கிழமை காலை நடைபெற்ற 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் வல்வெட்டித்துறை பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த செல்வகுமார் செவ்வானம் (30.76 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அப் போட்டியில் நுகேகொடை அநுலா வித்தியாலயத்தைச் சேர்ந்த யுதாரா லிந்துலி ஜயவீர புதிய போட்டி சாதனையுடன் (36.79 மீற்றர்) தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version