கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இரவு 9 மணி நேர நிலவரப்படி, ஆட்சி அமைக்க தேவைப்படும் 113 இடங்களைக் கடந்து 136 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அங்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி பின்தங்கியுள்ளது. அதிகாரபூர்வ வெற்றி நிலவரம் இன்னும் ஒரு சில நிமிடங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் வெற்றி முகத்தைத் தொடர்ந்து, பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மணிப்பூரில் தேர்தல் முடிவுகள் வெளியானதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவுக்கு தாவிய அண்மைக்கால வரலாற்றை கருத்தில் கொண்டு, வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனே பெங்களூருவுக்கு விரைந்து வர வேண்டும் என்று அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “”இது குரோனி முதலாளிகளுக்கும் (ஆட்சியில் உள்ளவர்களுடன் நெருக்காக இருந்து சலுகை அனுபவித்தல்) மாநிலத்தின் ஏழை மக்களுக்கும் இடையேயான போட்டி. இதில் ஏழை மக்கள், பண பலத்தை தோற்கடித்துள்ளனர்,” என்றார்.
“ஏழைகளின் பிரச்னைகளுக்காக நாங்கள் போராடினோம், நான் விரும்பிய சிறந்த விஷயம் என்னவென்றால், நாங்கள் இந்த தேர்தலில் தவறான வார்த்தைகளை பிரயோகிக்கவில்லை. அன்பை இந்த நாடு நேசிக்கிறது என்பதை கர்நாடக மக்கள் காட்டியுள்ளனர்.
இது அனைவருக்கும் கிடைத்த வெற்றி. முதலில் இது கர்நாடக மக்களின் வெற்றி. ஏழை மக்களுக்கு ஐந்து வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.
மாநிலத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் இந்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றி முடிவெடுப்போம்,” என்று ராகுல் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற இடங்கள்
மொத்த தொகுதிகள் – 224
பாஜக – 65
காங்கிரஸ் – 136
மதசார்பற்ற ஜனதா தளம் – 19
சுயேச்சை – 2
கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா – 1
சர்வோதயா கர்நாடகா பக்ஷா – 1
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், வரலாறு காணாத அளவாக 73.91 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவியதாக கூறப்பட்டாலும், உண்மையில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான நேரடி மோதலாகவே இந்த தேர்தல் வர்ணிக்கப்பட்டது. தேசிய அளவில் மூன்றாவது பெரிய சக்தியாக வளர்ந்து வரும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட்டது.
தேர்தல் முடிவுகள் – முக்கிய அம்சங்கள்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது. “பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கடினமாக முயன்றும் வெற்றி கிடைக்கவில்லை.
தேர்தல் முடிவுகள் முழுமையாக ஆய்வு செய்து, எந்தெந்த இடங்களில் தவறவிட்டுள்ளோம், என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றன என்பதை கண்டறிந்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டு வருவோம்” என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
“வெற்றியும் தோல்வியும் பா.ஜ.க.வுக்கு புதிது அல்ல. தேர்தல் முடிவுகளால் பா.ஜ.க. தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம்.
கட்சியின் பின்னடைவுக்கான காரணங்கள் முழுமையாக ஆராயப்படும். தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்” என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “இது கூட்டுத் தலைமைக்குக் கிடைத்த வெற்றி” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
“காங்கிரசுக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்த கர்நாடக மக்களுக்கு நன்றி. அவர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்த நாடாளுன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்று அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.
“கர்நாடக தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு எதிரானது.
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி 20 முறை வருகை தந்துள்ளார். வேறெந்த பிரதமரும் அதுபோல் பிரசாரம் செய்ததே இல்லை.
கர்நாடக தேர்தல் முடிவுகளைக் கண்டு தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்கும். ராகுல்காந்தி பிரதமராக பொறுப்பேற்பார் ” என்று அவர் கூறியுள்ளார்.
“கர்நாடகாவில் வெறுப்புணர்வுக்கான வாசல் அடைக்கப்பட்டுள்ளது. அன்பின் வாசல் திறக்கப்பட்டுள்ளது.” காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தல் வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கர்நாடகாவில் பெரு முதலாளித்துவத்தை ஏழைகள் தோற்கடித்துள்ளார்கள். நாங்கள் இந்த யுத்தத்தில் வெறுப்புணர்வைப் பயன்படுத்தவில்லை.” என்று குறிப்பிட்டார்.
கர்நாடகாவில் அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி, தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் பெங்களூரு வருமாறு அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
பெரும்பான்மைக்கு நெருக்கத்தில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில், அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஒரே இடத்தில் தங்க வைத்து, பாதுகாக்க காங்கிரஸ் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், முதலமைச்சர் பதவி சித்தராமையாவுக்கா? டி.கே.சிவகுமாருக்கா? என்ற கேள்வி எழுந்துள்ளது. “பா.ஜ.க.வை ஆட்சியமைக்க விடாமல் செய்ய எதையும் செய்வோம். கர்நாடகாவின் நலனுக்காக எனது தந்தை முதலமைச்சராக்கப்பட வேண்டும்” என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதிந்திர சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மட்டுமின்றி டெல்லியில் உள்ள காங்கிரஸின் தலைமை அலுவலகத்திலும், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் அக்கட்சித் தலைமை அலுவலகங்களிலும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல்காந்தி மேற்கொண்ட ‘இந்திய ஒற்றுமை நடைபயணம்’ நல்ல பலனைத் தந்துள்ளதாகக் கூறியுள்ளனர். அதே கருத்தை பிரதிபலிக்கும் வகையில் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருக்கும் சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகிய இருவருமே தத்தமது தொகுதிகளில் முன்னணியில் இருக்கின்றனர்.
வருணா தொகுதியில் சித்தராமையா தமக்கு அடுத்த இடத்தில் உள்ள பா.ஜ.க. வேட்பாளர் சோமன்னாவைக் காட்டிலும் சுமார் 8 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்யும் அளவுக்கு அமோக வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சற்று முன்வரை, அவர் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கும் நிலையில், அடுத்தடுத்துள்ள மத சார்பற்ற ஜனதா தளம், பா.ஜ.க., ஆகியவற்றின் வேட்பாளர்கள் 9 ஆயிரம் வாக்குகளைக் கூட தாண்டவில்லை.
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவரது ஷிக்கோவான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பதான் யாசிர் அஹமத்கானை விட சுமார் 22 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சரும், மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி தான் போட்டியிட்ட சென்னப்பட்டினம் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். சற்று முன் நிலவரப்படி, இரண்டாவது இடத்தில் உள்ள பாரதிய ஜனதா வேட்பாளர் சி.பி.யோகேஷ்ராவைக் காட்டிலும் அவர் சுமார் 500 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருக்கிறார்.
தமிழ்நாடு பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளரும், பா.ஜ.க. பொதுச் செயலாளர்களில் ஒருவருமான சி.டி.ரவி சிக்மகளூர் தொகுதியில் பின்தங்கியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் எச்.டி.தம்மையாவைக் காட்டிலும் அவர் சுமார் ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருக்கிறார்.
சிட்டப்பூர் தொகுதியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங் கார்கே முன்னிலையில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் உள்ள பா.ஜ.க. வேட்பாளர் மனிகாந்த ரதோட்டை காட்டிலும் அவர் சுமார் 2,500 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க.வில் இருந்து தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் சேர்ந்த முக்கிய தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டார் தான் போட்டியிட்ட ஹூப்ளி-தார்வார்ட் மத்திய தொகுதியில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். அந்த தொகுதியில், பா.ஜ.க. வேட்பாளர் மகேஷ் 27 ஆயிரத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெற்று, தொடக்கம் முதலே முன்னிலையில் இருக்கிறார்.
கோலார் தங்க வயல் தொகுதியில் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட தமிழரான ராஜேந்திரன் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்.
தென்னிந்தியாவின் அயோத்தி என்று கூறும் அளவுக்கு மிகப்பெரிய கோவில் கட்டப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்த ராமதேவரப்பேட்டா கோவிலை உள்ளடக்கிய ராம நகரம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
அந்தத் தொகுதியில் இஸ்லாமியரும் காங்கிரஸ் வேட்பாளருமான இக்பால் ஹுசைன் 65,192 வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார்.
இரண்டாவது இடத்தில் குமாரசாமியின் மகன் நிகில் இருக்கிறார். பா.ஜ.க. சுமார் ஒன்பதாயிரம் வாக்குகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
“ராமதேவரப்பேட்டா கோவிலை காங்கிரஸ் கவனிக்கவில்லை; அதனால் அந்தக் கோவிலே நாசமாகிவிட்டது; பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் அங்கு அயோத்தியைப் போல மிகப் பெரிய ராமர் கோவில் கட்டப்படும்” என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்திருந்தது.
கர்நாடகாவில் அரியணை யாருக்கு?
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் சூழலில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகின்றன.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால், தேசிய அரசியலில் அந்த கட்சியின் நிலை இன்னும் வலுவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் மூலம், அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக காங்கிரஸ் உருவெடுக்கக் கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
பா.ஜ.க.வை எதிர்க்கும் வல்லமை காங்கிரசுக்கு இருக்கிறதா என்று சந்தேகத்துடன் நோக்கும் கட்சிகள், அடுத்து வரும் நாட்களில் காங்கிரசை நோக்கி ஈர்க்கப்படலாம் என்பது அவர்களின் கருத்து.
மண்டல வாரியாக நோக்குகையில், கடலோர கர்நாடகாவில் பா.ஜ.க.வின் ஆதிக்கம் தொடர்ந்து அப்படியே நீடிக்கிறது.