29 வயதான பைலட் மற்றும் யுடியூபரான ட்ரெவர் ஜேக்கப், அதிக பேர் தனது வீடியோவை பார்க்க வேண்டுமென செய்த செயல் தற்போது அவருக்கு சிக்கலை அளித்துள்ளது.
2021ஆம் டிசம்பர் மாதம் தனது யுடியூப் பக்கத்தில் ட்ரெவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தான் பயணம் செய்த விமானம் மலையில் மோதி விபத்திற்குள்ளானது என்று கூறியிருந்தார்.
ஆனால் இதுதொடர்பான அமெரிக்க புலனாய்வு துறையின் விசாரணையின் போது, விபத்து நடந்த இடத்தை சுத்தம் செய்து விசாரணையைத் தடுக்க முயற்சி செய்த குற்றத்தை ட்ரெவர் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
என்ன நடந்தது?
நவம்பர் 2021இல், கலிஃபோர்னியாவின் சான்டா பார்பரா விமான நிலையத்திலிருந்து கேமராக்கள் பொருத்தப்பட்ட விமானத்தில் ட்ரெவர் ஜேக்கப் தனியாகப் புறப்பட்டார். அவர் தன்னுடன் ஒரு பாராசூட் மற்றும் செல்ஃபி ஸ்டிக் ஒன்றையும் எடுத்துக் கொண்டு சென்றார்.
விமானத்தில் பறந்த ட்ரெவர், தான் செல்லவேண்டும் என்று திட்டமிட்ட இடத்திற்கு சென்று சேரவில்லை.
விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் லாஸ் பேட்ரஸ் தேசிய வனப்பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. ஜேக்கப் அந்த இடத்திற்குச் சென்று படங்களை மீட்டெடுத்தார்.
இந்த விபத்து தொடர்பாக தன்னுடைய கேமராவில் பதிவு செய்யப்பட்ட காணொளியை டிசம்பர் 2021இல் தன்னுடைய யுடியூப்பில் வெளியிட்டார்.
இப்போதுவரை இந்த வீடியோவை 29 லட்சம் பேர் யுடியூப்பில் பார்த்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திடமும் ட்ரெவர் ஜேக்கப் புகார் தெரிவித்தார்.
ஆனால் ட்ரெவர் பதிவிட்ட வீடியோவில், ஜேக்கப் ஏற்கனவே பாராசூட் அணிந்திருந்ததாகவும், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க அவர் முயற்சிக்கவில்லை என்றும், சிலர் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை
ட்ரெவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக நடந்த விசாரணை சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
விமானத்தில் பயணித்த அவர், அந்த விமானத்தை திட்டமிட்டே விபத்துக்குள்ளாக்கியதாக தெரியவந்துள்ளது.
“அவருக்கு தனது இலக்கை அடையும் எண்ணம் இல்லை. மாறாக பறக்கும்போதே விமானத்தில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளார்.
அப்படி பாராசூட் உதவியுடன் குதித்து தப்பித்ததையும், அவரது விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார்,” என்று கலிபோர்னியா மத்திய மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் விமான விபத்து நடந்த இடத்தில் கிடந்த விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை தனியாக ஒரு ஹெலிகாப்டரில் வந்து அப்புறப்படுத்தி, அந்த தடயங்களை அழித்துள்ளதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்த விபத்தின் மூலம் தனது யுடியூப் வீடியோவை அதிகம் பேர் பார்க்க வேண்டும் என திட்டமிட்டு இதை அரங்கேற்றியதும் தெரிய வந்துள்ளது.
இன்னும் ஒரு சில வாரங்களில் ட்ரெவர் ஜேக்கப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு அவரது விமான ஓட்டுநர் உரிமம் திரும்பப் பெறப்பட்டது.
ட்ரெவர் ஜேக்கப் தரப்பு கருத்தை அறிய அவரது வழக்கறிஞரை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால் பிபிசியின் கோரிக்கைக்கு ஜேக்கப்பின் வழக்கறிஞர் பதிலளிக்கவில்லை.
ட்ரெண்டாக செய்யப்படும் சாகசங்கள்
அவை சில நேரங்களில் உயிரிழப்பில் சென்று முடிகின்றன.
இந்த மாத தொடக்கத்தில் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து டெல்லி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த யுடியூபர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
22 வயதான அகஸ்தியா சௌகான் தனது புதிய சூப்பர் பைக்கை வைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முற்படும் போது நடந்த விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார்.
இதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல யுடியூபர் TTF வாசன் உள்ளிட்ட சிலர் மீது சாலை விதிகளை மீறி பைக்கில் வேகமாக சென்று வீடியோ எடுத்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி சாகசங்களில் ஈடுபட்டு அதை சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியிட்ட சில கல்லூரி மாணவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கியது சென்னை போக்குவரத்து காவல்துறை.
‘மக்களை ரசிக்க வைக்க எல்லை மீறுகின்றனர்’
யுடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிடும் பலரும் தொடக்கத்தில் மிகுந்த ஈடுப்பாடுடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இதைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் நாளடைவில் இதிலிருந்து மாறிவிடுவிடுகின்றனர் என்று பிபிசி தமிழிடம் பேசிய யுடியூபர் தீபன் சக்ரவர்த்தி குறிப்பிட்டார்.
“தங்கள் திறமைகளை காட்டி மக்களை ஈர்க்கும் யுடியூபர்கள், பிரபலமான பிறகு மக்களை தங்கள் பக்கம் தொடர்ந்து தக்கவைக்க,
லைக், வியூஸ் வாங்க எந்த எல்லைக்கும் செல்லலாம் என கருதி இப்படி செய்வதால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன.” என்றார்.
தொடர்ந்து பேசிய தீபன், குறுகிய காலத்தில் கிடைக்கும் புகழை கையாளும் முதிர்ச்சி இல்லாத இளம் வயதினர் பலரும் இதுபோன்ற சாகசங்களை செய்து பிரச்னைகளில் சிக்குகின்றனர் என்று தெரிவித்தார்.
யுடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இப்படியான சாகசங்களில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்த எந்த வரைமுறையும் இல்லை.
விதிமீறலில் ஈடுபட்டு பிரச்னை ஏற்படும் போது மட்டும் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு செயல்படுகிறோம் என்று அறிவிக்கும். இந்த நிலை மாறவேண்டும் என்கிறார் யுடியூபர் தீபன் சக்ரவர்த்தி.
புகழ் போதை
இப்படியான ஆபத்தான சாகசங்களை அனைவரும் செய்யமாட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே செய்கின்றனர்.
இப்படி செய்வதன் மூலம் அடுத்தவர்களிடமிருந்து வேறுபட்டு தனித்துவமாக தெரியவேண்டும் என்று நினைத்து சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படி செய்வதால் கிடைக்கும் ‘த்ரில்’ அவர்களுக்கு ஒரு அனுபவத்தை தருகிறது, என்றார்.
சாகச செயல்களில் ஈடுபடும் போது மூளையின் செயல்பாடு எப்படி இருக்கும் என கேட்டபோது, இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடும் போது அட்ரினலின், டோபமைன் போன்ற சுரப்பிகளில் சுரக்கின்றன.
குறிகிய நேரத்திற்கு இது தரும் உணர்வுக்கு அவர்கள் அடிமையாகின்றனர். இதுவும் போதை மருந்து போன்ற ஒர் அடிமை மனநிலைதான் என்று பதிலளித்தார் மருத்துவர் சித்ரா.
நடுத்தர மற்றும் வயதான நபர்களை விட பதின்ம வயதினர், இளம் பருவத்தினரிடையே இப்படியான மனநிலை அதிகமாக இருக்கிறது.
இளம் வயதினரிடையே காணப்படும் இந்த அதீத ஆற்றலை பயனுள்ள வழியில் மடைமாற்றி பல ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யமுடியும். அதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் உடனிருந்து வழிகாட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.